Thursday, September 26, 2013

பார்த்த ஓரு நொடி


கூட்டத்தில் அலட்சியமாய் சுழன்ற கண்கள் குத்திட்டு நின்றன ஓரிடத்தில். அவள் தானா அது. புத்தி தீடீரென்று அதிவேகமாக இயங்க ஆரம்பிக்க இதயம் துவண்டது. நிறைய மாறி இருந்தால் ஆனால் அந்தக் கண்கள் மட்டும் ஆயிரம் கவிதைகளை கொட்டின இன்றும்.

என்னைப் பார்த்தது போல் தோன்றியது. பார்க்காதது போலவும் இருந்தது. காணாமல் கடப்பதா, கண்டு நலம் விசாரிப்பதா என்ற தடுமாற்றத்தில் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தேன். அதற்குள...் மனைவி தோளைத்தட்டினாள்.

“சீக்கிரமா வாங்க, அங்க என்ன பாராக்கு பார்த்துட்டு”

“தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது, அதுதான் பார்த்தேன்”

“தெரிஞ்சவங்கனா போய் பேச வேண்டியது தானா”

“இல்ல இல்ல அவங்க வேற யாரோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு திரும்புகையில் அருகில் நின்றிருந்தாள் அவள். குரல் மெதுவாக கரைய அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன். மனைவியிடம் அறிமுகப்படுத்த அவள் பெயரை உச்சரிக்கும் போதே இனம் புரியாத உணர்ச்சிகள் தெறித்தன மனைவியின் கண்களில்.

அவள் பெயரை அடம்பிடித்து என் முதல் பெண்குழந்தைக்கு வைத்தது இன்றும் நினைவு இருக்கிறது எங்கள் இருவருக்கும்.

“சீக்கரம் பேசிட்டு வாங்க, குழந்தை பலூன் கேட்டான். வாங்கி தரேன்” என்று கூறிவிட்டு நகர்ந்த மனைவி மீது அன்பு பொங்கி வழிந்தது உள்ளத்தில்.

“எப்படி இருக்க “ என்றேன். என்குரல் எனக்கே கேட்கவில்லை. நல்லா இல்லையென்று சொல்லி விடுவாலோ என்ற பயம் ஒவ்வொரு செல்லிலும் பூத்து இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் வீசினால் எப்பொழுதும் போல.

“எத்தனை குழந்தைகள்” என்றேன். கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்க மனம் ஒப்பவில்லை. அவளை வேறு ஒருவருடன் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்னுடையவள் என்ற எண்ணம் ஓரத்திலிருந்து மனதின் மையத்தில் வந்து ஆட்டம் போட அடக்க தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

மெதுவாக விழியுயர்த்தி என்னைப் பார்த்தாள். பிறகு ஏதும் பேசாமல் நகர ஆரம்பித்தாள். நான் அவசரமாக அவள் கைப்பற்றினேன். இறுகப்பற்றிய கைகளுக்குள் கடந்த காலங்கள் உயிர்பெற்று உலாவத்துவங்கின. அவள் கைகளை விடுவிக்க துவங்கினாள். விட்டாள் போய்விடுவாளென்ற சிந்தனையால் மேலும் இறுகப் பற்றினேன்.

“இங்க என்ன பண்ணர” யாரோ அவளை நெருங்கிவர ஆரம்பிக்க சட்டென்று கைகளை விடுவித்தேன். கண்களை உயர்த்தி என்னை விழுங்குவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெதுவாக அந்த மனிதரை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

ஏதாவது சொல்லிட்டு போயேன், அட்லீஸ்ட் திட்டவாவது செய், நீ விட்டதால நான் ஒன்னும் கொறஞ்சு போய்டல,நல்லா இருக்கேனு அகங்காரமா பேசிட்டாவது போயேன்.மனதுக்குள் மெதுவாக இறைந்தேன்.எப்படியாவது அவள் நல்லா இருக்கிறாள் என்று மட்டுமே அறிய மனம் துடித்தது. என் மனக்குரலோ, விழியின் மொழியோ அவளை எட்டவேயில்லை என்பது போல நகர்ந்துவிட்டாள். இழந்ததை மீண்டும் இழந்தது போல் மனம் கனத்து போய் இருந்தது.

ஐந்து வருடங்களாக பூட்டி பத்திரமாக வைத்த நினைவுகள் ஒவ்வொன்றாக அணிவகுத்தன. பேசாமல் நகர்ந்தவள் மேல் கோபம் எழாததின் மர்மம் இன்னும் புரியவில்லை எனக்கு. என்றுமே மெளனநதி தான் அவள். பிரிகிறேன் என்று சொன்ன போதும் இதே பார்வை தான். ஒரு வார்த்தைகூட பேசாமல் நகர்ந்தவள் இன்றும் அதே போல். காதலைச் சொன்னபோது கூட நிறைய பேசவில்லை அவள். மெல்லிய புன்னகை ஏற்றுக்கொண்டதாய்.

காதலித்த நாட்களில் அவளது செயல்களில் அன்பு நிரம்பி வழியும். சூழ்நிலை காரணமாக பிரிய நேர்ந்த போது கூட சண்டை போடவில்லை, கத்தவில்லை, கண்ணீர்விட வில்லை, துடைத்தவிட்ட உணர்வுகளை முகம் பிரதிபலித்து என்னை முழுவதுமாய் நோகடித்தது. அதன் பிறகு தினமும் ஒரு முறையாவது அந்த முகம் ஏதோ ஓர் நொடியில் மனதில் எட்டிப் பார்க்கும். நல்லா இருக்க வேண்டும் என்று மனம் வேண்டிக் கொள்ளும்.

இன்று 5 வருடங்கள் கழித்து பார்த்ததில் என்னை முற்றிலுமாய் இழந்திருந்தேன். ஒர் வார்த்தை பேசி இருக்கலாமே அவள் என்ற எண்ணம் மட்டுமே என்னை சுற்றி உலவிக்கொண்டிருந்தது.

“போலாமா” என்ற மனைவியின் வார்த்தை இயந்திரமாக என்னை நகர்த்தியது வண்டியை நோக்கி

“என்ன பேசினீங்க, எத்தன குழந்தைகள்” மனைவியின் குரலில் இருந்த ஏதோ ஒன்று என்னை உலுக்கியது

“ஒன்னும் பேசலடா, எப்படி இருக்கீங்க கேட்டேன், பதிலே சொல்லாம போய்ட்டாங்க” என்றேன்

எல்லாம் தெரிந்ததாலே அவளால் மேலும் கேள்விகள் கேட்க முடியவில்லை.

மெளனமாய் மணித்துளிகள் நகர்ந்தன. வீட்டிற்கு வந்த பிறகும் அந்த நிமிடத்தின் கனத்தை குறைக்க இயலவில்லை.

அவளைப் பற்றிய ஆராய்ச்சியே உள்ளுக்குள் ஓடியது. கொஞ்சம் உடம்பு வைத்து இருக்கிறாள், முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. எப்படி இருக்கிறாள், எத்தனை குழந்தைகள் அவளுக்கு, ஒன்றுமே தெரியாமல் மனம் குழம்பியது

“சாப்பிட வாங்க”

“நல்லா இருக்கேனு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் அவ. நிம்மதியா இருந்திருப்பேன்” எங்கேயாவது இறக்கி வைக்கத் துடித்த மனம் பொருந்தாத இடத்தில் சுமையை இறக்க துவங்கியது

"நல்லா இல்லைனா என்ன செய்து இருப்பீங்க” ஏதோ பாதுகாப்பின்மை மனைவியின் குரலில் அப்பட்டமாய் எதிரொலித்தது.

“அப்பா, பொம்மை வரைந்து கொடு” என்று கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்ட குழந்தையின் கைகள் ஆணித்தரமாக எதையோ உணர்த்தியது.

"வாடா கண்ணு, சாப்பிட்டுட்டு வரைந்து தரேன்” என்று பொண்ணை தூக்கிக்கொண்டு

“சாப்பாடு எடுத்து வைடி” என்று மெதுவாக மனைவியை அணைக்க விழிகளில் வழிந்த நீரை துடைத்தபடி சென்றாள்.

அவளின் நினைவுகளை பூட்டி மீண்டும் பத்திரமாக மனதுள் எடுத்துவைத்தேன். மீண்டும் ஏதேனும் ஒருநாள் அவள் தரிசனம் என்னை நிலைகுலைக்கலாம். அதுவரையேனும் பொங்கும் அலைகளை துணி கொண்டு போர்த்தி அமைதியான நதியாக வலம்வர வேண்டும்.

மகிழ்ச்சிபூக்கள்


மகிழ்ச்சியால் நிரப்பி
கொள்கிறேன்
இந்த நொடியை

பொங்கிவழிவதை...
அடுத்தடுத்த நொடிகளிலும்
நிரப்பிவைக்கிறேன்

அமுதசுரபியாக
வழிவதை
விதைத்துவைக்கிறேன்
செல்லும் பாதையாவிலும்

பூத்துக்குலுங்கும்
மகிழ்ச்சிபூக்களை
பறித்துவிடாதீர்கள்
மறந்தும் கூட......

அவன் அறிந்திருக்கவில்லை



மாறிவிட்டாயென பாராட்டுமடல்
வாசிக்கிறான் அவனது
பொய்கள் நிறைந்த பாதைகளை
அமைதியாக கடக்கையில்....

அவன் அறிந்திருக்கவில்லை
அந்நியோன்யத்திலிருந்து
பாதிப்புகள் ஏற்படுத்தாத
அந்நியர்களின் பட்டியலில்
தான் சேர்ந்துவிட்டதை

பரிட்சை


தேதி குறிப்பிட்டு வந்த சுனாமி போலவே இந்த பரிட்சைகள் வந்து தினசரி வேலைகளை துவம்சம் செய்துட்டு போகுது.

“அம்மா,ஏதாவது திட்டின அவ்வளவுதான்,சுத்தமா புத்தகத்த தொட மாட்டேன்” என்ற பிளாக்மெயிலுடன் ஆரம்பித்து, வாயே மூடாத பேசி,ஒரு லைன் படிக்கரதுக்குள்ள பாட்டிகிட்ட பேசனும், தம்பி கிட்ட பேசனும் என்று அறிக்கைவிட்டுட்டு அவங்க கிட்ட பெரிய சொற்பொழிவே நடத்திட்டு, நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு பிபி சங்கீத் ஏத்திவிட...்டா, மாமா அவன் கூட அப்பத்தான் ”உங்க அம்மா இருக்காளே”னு ஒரு கதை ஆரம்பித்து முடிந்தவரை கிண்டல் அடித்து பிபி செமையா ஏத்திவிடுவார்.

ஒருவழியா படிக்க வைச்சுட்டு நிம்மதியா கண்ண மூடினா கனவுல எல்லாம் பரிட்சையா வந்து அலறியடித்து கண்ண முழிச்சா கடிகாரம் 4 மணினு அறிக்கைவிடரது.

அறக்க பறக்க எழுந்து ரிவிசன்க்கு ரெடி பண்ணி 6 மணிக்கு கெஞ்சி கொஞ்சி எழுப்பி கேள்வி கேட்டா......”அச்சச்சோ அம்மா எல்லாம் நியாபகம் இருக்கு, இது மட்டும் மறந்து போச்சு”னு கிண்டல் பண்ணுவான் பாருங்க

அப்ப நமக்கு ஆபந்த்பாந்தவன் மாமா தான். “விடுவிடு நான் பாத்துக்கரேன்”னு கைகுடுக்கரதால இந்த 5 நாள் டென்சன்ல மயக்கம் போடாம தப்பிச்சுட்டேன்.

அக்கடானு எல்லாம் ரெடி பண்ணி 8.30 மணிக்கு பஸ்வேன்ல ஏத்திவிடும் போது “கவலப்படாத நல்லா எழுதிடரேன்” என்று ஆறுதல் சொல்லிட்டு சிரிக்கிறான் எங்க வீட்டு வாண்டு.

நான் பரிட்சை எழுத போகும் போது கூட இத்தன டென்சன் ஆனதில்லை. இன்னையோட பரிட்சை முடிந்ததும். ”ஓ”னு சந்தோசத்துல கத்தனும் போல இருக்கு.

ஆனா ஒன்னுங்க இந்த பரிட்சை என்ற கான்சப்ட் கண்டு பிடிச்சவங்க மட்டும் என் கையில கிடைச்சா சட்டினி தான். நிசமாவே முடியல...இந்த ஒரு வார சுனாமியின் தாக்கம் ஒரு மாசத்திற்கு இருக்கும் போல......

விரும்புகிறேன்


 
கூரிய முட்களாய்
வார்த்தைகளை வீசி
குத்திக்கிழித்த பிறகும்

மலர் போன்ற...
அன்பான மனதை
அறிந்து அணைக்கும்
உன்னை உனக்காகவே
விரும்புகிறேன் அன்பே

Wednesday, September 18, 2013

வார்த்தை தேடலில்



வார்த்தை தேடலில்
மெளனமாக கழிகிறது
மணித்துளிகள்

பொறுக்கியெடுத்த ...
வார்த்தைகள்
போதுமானதாக
இருக்கவில்லை
ஊடலை உடைக்க .......

நீளும் ஊடலுக்கு
நிச்சயமாய்த் தெரியும்
உடையும் நாள்
வெகுதூரத்தில்
இல்லையென

வாழும் நாட்களுக்குள்
வஞ்சம் தீர்த்துக் கொள்கிறது
உயிரினை வாட்டியெடுத்து.

வெ.இறையன்புவின் சாகாவரம்



எழுத்துக்களால் கரைந்து போக வைக்க முடியுமா??

ஓர் நிமிடம் நம்மை மறக்க வைத்து அசரவைக்கமுடியுமா????

10 பக்கங்களுக்கு மேல் நகரவிடாமல் அசையாது...
கட்டிப்போட முடியுமா????

ஐயோ என்று மூலையில் உட்கார வைக்கமுடியுமா????

உறங்கும் உணர்வுகளை தட்டியெழுப்பி கதற வைக்க முடியுமா????

நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து வந்த போதே இதை கடைசியாக படிக்க வேண்டும் என்று மனதின் மூலையில் ஒலித்த குரலை தடுக்க இயலாது, எல்லா புத்தகங்களையும் படித்த பிறகு கையில் எடுத்தது தான்

வெ.இறையன்பு எழுதிய சாகாவரம்

பத்து பக்கம் படித்துவிட்டு மேலே படிக்க முடியாமல் மனம் முரண்டுபிடிக்க மூடிவைத்த பிறகு மெதுவாய் அசைபோட ஆரம்பித்தது ஒவ்வொரு வரிகளையும் அன்று முழுவதும்.

இன்று மீண்டும் கையில் எடுக்க பாதி கூட தாண்ட இயலவில்லை. நண்பனின் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பை படித்து முடித்ததும் அசை போட அமர்ந்துவிட்டது மனசு.


இத்தனை பாதிப்பை என்னுள் எழுப்பிய இந்த புத்தகத்தை கண்கள் விரிய பார்த்தபடி எழுதியவரை வியந்து பாராட்டியபடி நாளையாவது முழுதாக படிக்க வேண்டுமென்று படித்த பக்கத்தை அடையாளமிட்டு மூடிவைத்த பின்னும் நிழலாக தொடர்கிறது “சாகாவரம்”

நீ


எங்கோ தொலைவில்
கண்காணா தூரத்தில்
அமைதியான நதியாக
உன் பயணம்..........

மூச்சுத்திணறும்
ஏதோ ஓர் நொடியில்
ஆதரவாய் தோள் தேட
சட்டென இழுத்துக் கொள்கிறாய்
உன் பாதுகாப்பு வளையத்திற்குள்.

மெதுவாய் உயிர்பெற்று
சிறகுவிரித்து பயணிக்க
கையசைக்கிறாய் புன்னகையுடன்.

இளைப்பாற உன்நிழலிருக்க
தொடர்கிறது என் பயணம்
வானம் நோக்கி பயமின்றி.

தேடுகிறேன் என்னை



விழும் எழுத்துகளில் நானில்லை
செய்த செயல்களில் நானில்லை
பேசிய பேச்சுக்களில் நானில்லை

என்னுள் தேடுகிறேன் என்னை...

எங்கோ ஓரிடத்தில் தூசுபடிந்து
பொழிவிழந்த கல்லாக நான்

மெறுகேற்றி வைரமென ஜொலிப்பேனா
கரியாகி வாழ்க்கைதனை தொலைப்பேனா

கலையாத கனவு



கூண்டு திறந்தபிறகும்
பறக்காத பறவையாக
மனக்கூண்டில் அமைதியாக...
தன்னை இருத்திக்கொள்கிறது
நேற்று பிறந்த ஓர் கனவு.

பரபரப்பு காலையில்
கதவடைத்த பின்னும்
கிடைத்த ஓட்டையில்
தலையெட்டிப் பார்க்கும்
தென்றலாக, பரபரப்பிலும்
லேசாக கசிகிறது உள்ளத்தில்.

ஒட்டிக் கொண்டே சுற்றும்
பூனைக்குட்டி போல
புத்தியில் வட்டமிட்டு
மெல்லிய புன்னகை
பூக்க வைக்கிறது.

கடிகாரத்தின் அபாய
எச்சரிப்பில் ஓர்
அதட்டு அதட்டி
அடக்குகிறேன்.
மூலையில் ஒடுங்கிறது
அழும் குழநதையாக....

கடமைகள் முடித்து
கனிவாக அழைக்கையில்
கோபித்து கொண்டு
வெளிநடப்பு செய்துவிட்டது
தேர்ந்த அரசியல்வாதியாக.....

பின்னப்பட்ட வலை


பின்னப்பட்ட வலைகளை
பிரிப்பது எளிதானதன்று
பிரிக்க பிரிக்க புது முடிச்சுகள்
அமுதசுரபியாய் ஜனிக்கின்றன.

தோல்விதான் உறுதியென்பதாலும்,
இரையாவது முடிவென்பதாலும்
போராட்டங்கள் துறந்து
அமைதி கூட்டுக்குள்
முடங்குகிறது மனம்.

நீட்டப்படும் கரங்கள்
மகிழ்ச்சியளித்தாலும்
நம்பிக்கைத்துளிகள்
வற்றிய மனதுக்குள்
பெரும் பாதிப்பை
ஏற்படுத்தவில்லை.

குறுக்கிகொள்ளுங்கள்
உங்கள் கரங்களை
சவத்திற்கு பாலூற்றி
நேர விரையம் செய்யாதீர்கள்

நீயும் நானுமென்பதாலேயே



ஆறாத ரணமல்ல
நீ தந்தது
சிறு கீறலே......

கீறியது நீயென்பதாலே...
ரணமாய் ஆனது

வெஞ்சினமல்ல,
உன் மேல்
நான் கொண்டது
வெறும் சினமே...

சிறு கீறலும்
வெறும் சினமும்
ஆறாது ஆட்டமிடுவது
நீயும் நானுமென்பதாலேயே

தேடல்





 எதைத் தேடுவதென்பதில் தொடங்கி
ஆயிரம் கேள்விகளுக்குள் மூழ்கி
மூச்சுத்திணறி முத்தெடுக்க...
விழைகிறது புதிரான மனம்.

ஒன்றின் தேடலில் இன்னொன்று
முளைக்க, அனுமார் வாலாகா
நீள்கிறது தேடல்கள் கட்டுப்பாடற்று.

தேடியது கிடைக்காமல்,
தேடாதது கைகளில்
இணக்கமாக பொருந்துகையில்,
நமக்கானது இதுவென
புத்தியில் உறைத்தாலும்
தேடலை தொடர்கிறது
மனம் மறுத்தலித்து.....

Tuesday, September 17, 2013

சிதறல்கள் - 1

நதியுடன்  நீண்ட நேரம்
பயணிக்க முடிவதில்லை

Monday, September 16, 2013

காணாமலே போகிறேன்



மெளனித்த ஓர் நொடியில்
எண்ணங்களுக்கு விரும்பியபடி
கற்பனை வர்ணங்கள் தீட்டி
சூழ்நிலை சட்டத்தில் சிறையிட்டு
காட்சிக்கு வைத்தனர் கருணையேயில்லாமல்........

அடையாளமே தெரியாத எண்ணத்தை
விடுவிக்க இயலாமல் காட்சியாளனாய்
நிற்கின்றேன் கையாலாகதனத்தால்.......

விமர்சனத் தோட்டாவால் குற்றுயிரானவனை
பரிதாபபார்வைப் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.

காணாமல் போன எண்ணங்களோடு
காணாமலே போகிறேன் நானும்.......

சந்திப்பு



பிரிவிற்கு பின்
ஏதேனும் ஓர் நாள்
எதிர்பாராமல் சந்திக்ககூடும்
கனத்த இதயத்துடன்.
ஆவலாய் நலம் விசாரிப்பதோ,
அலட்சியோ பார்வையோ,
காணாதது போல் நகர்தலோ
ஏதோ ஒன்று நடக்கக்கூடும்

மனதின் எண்ணங்கள்
கண்கள் வழி ஒழுகாமல்
இரும்பு திரையிட்டு
மறைக்கும் முயற்சியில்
தோல்வியும் ஏற்படக்கூடும்.

எல்லா உணர்வுகளையும்
கட்டுக்குள் கொண்டுவந்து
வெற்றிகரமாய் சூழலை
சமாளிக்கவும் கூடும்.

என்ன நடந்தாலும்
இதயத்தின் மையத்தில்
கல்வெட்டாக பதிந்த
பசுமையான நினைவுகளை
புறந்தள்ளி ஓர் நொடியும்
வாழ்தல் கைவருவதில்லை

இனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்



வீட்டுக்குள்ள என்ன ரகளை என்று கேட்டுக் கொண்டே அப்பா வந்தார்.

"எல்லாம் உங்க அருமை பொண்ணு பண்ணர ரகளைதான். உங்க செல்லத்துல தான் குட்டிச்சுவரா போறா அவ...."அம்மா இது தான் சாக்கு என்று அப்பாவை திட்டினார்.

“என்னாச்சு செல்லத்துக்கு, என்ன வேணும் சொல்லுடா குட்டி, அப்பா உடனே வாங்கித் தரேன்” என்று சொல்ல அம்மா “சரியா போச்சு, நீங்க பாட்டுக்கு என்ன ஏதுனு கேட்காம வாக்குறுதி அள்ளி வீசாதிங்க” என்றார்....

“ஏன். நான் வாங்கி தர மாட்டேனு நினைச்சியா, என் பொண்ணுக்குனா எல்லாம் வாங்கித்தருவேன். நீ பேசாம இரு, இது எங்க 2 பேருக்குள்ள இருக்கரது”

“உங்கள....என்ன சொல்லரதுனு தெரியலை, கையபிசஞ்சுட்டு வந்து என்கிட்ட நிக்க கூடாது அப்புறமா” என்று சொல்லி விட்டு அம்மா நகர்ந்து விட்டார்.

கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த என்னைப் பார்த்ததும் அப்பாக்கு ஒரே வருத்தம்.

“என்னடாமா வேணும், சொல்லு, உடனே வாங்கித்தரேன்”

“எனக்கு இப்பவே ஒரு அண்ணா வேணும், உடனே வாங்கிட்டு வாங்க” என்றேன்.

“என்ன” அப்பாவின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு காரணம் புரியாமல் விழித்த படி நின்றேன்.

அன்று என் வகுப்பில் படித்த என் தோழி எல்லாமே புதிதாக வைத்து இருந்தாள். ஹேர் கிளிப், வளையல், புது புத்தகப்பை, கொலுசு என்று பெரிய லிஸ்ட்.

“சூப்பரா இருக்குடி...எங்க வாங்கின”

“என்னோட அண்ணா தான் டூர் போன போது வாங்கிட்ட வந்தான்” என்றாள்.

அப்பவே முடிவு செய்துவிட்டேன். அப்பாவிடம் சொல்லி எனக்கும் ஓர் அண்ணாவை வாங்கி விடுவது என்று.

வீட்டில் வந்து அம்மாவிடம் சொன்னவுடன் “அதெல்லாம் முடியாது” என்றார். அப்போது இருந்து அப்பா வரும் வரை ஒரே அழுகைதான் நான். அப்பா வாங்கித்தந்துவிடுவார் என்று மலை போல் நம்பி இருந்த அப்பாவின் அதிர்ச்சி மேலும் கண்ணீரை வரவழைத்தது.

”அம்முகுட்டி அண்ணாவை எங்கும் விற்க மாட்டாங்க”

“ஏன்”

“உனக்கு முன்னால பிறந்தவங்களை தான் அண்ணானு சொல்லுவோம்.”

“அப்ப ஏன் என்னை முதல்ல பெத்தீங்க...முதல்ல அண்ணாவை பெத்து இருக்க வேண்டியது தானா” என்று அன்று முழுதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எல்லோரையும் ஒரு வழி செய்துவிட்டேன்.

சிறுவயது முதலே “அண்ணா” என்ற உறவுக்காக மனம் ஏங்க ஆரம்பித்ததாலோ என்னவோ நிறைய அண்ணன், தம்பிகளை தத்தெடுத்து இருக்கிறேன் இதுவரை.

அனைத்து சகோதரர்களுக்கும் இனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்.

ஓர் நாள்



"என்ன பேசிட்டு இருந்த உன் ஃப்ரெண்ட் கூட அத்தன நேரம்”

“பெருசா ஒன்னுமில்லமா, ட்ரஸ் மேச் இல்லனா, நரைமுடி வர ஆரம்பிச்சிருச்சுனு சொன்னா, வயசான வரும்தானேனு சொல்லிட்டு இருந்தேன் மாமு”

“டை அடிச்சுக்க”...

“அஞ்சு, ஆறு வெள்ளை முடிக்காக டை அடிக்க முடியுமா மாமு, நிறைய வந்ததுனா பார்க்கலாம்”

அவசர அவசரமாக மதிய சாப்பாட்டை தயாரித்து கொண்டே பேசிக்கொண்டு இருந்தேன். உதவரேன் பேர்வழி என்று பையன் ஒரு பக்கம் சமையலைறையை போர்க்களம் ஆக்கிக்கொண்டு இருந்தான்.

“அம்மா இதுல 50 மிலி எண்ணெய் விடுமா”

"குட்டிமா அப்படி அளந்தெல்லாம் ஊத்த முடியாதுடா, அப்படியே எண்ணெய் ஊத்தலாம்டா”

"அச்சோ அம்மா, அப்படி தான் இன்ஸ்டரக்சன் போட்டு இருக்கு”

“அம்முகுட்டி, நானே பண்ணிதரேண்டா, நீ போய் விளையாடுடா”

“மாட்டேன், நான் உனக்கு ஹெல்ப் பண்ணரேன்மா” என்று சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தம் என்ற லஞ்சத்தை குடுத்து காரியத்தை சாதித்தான் பையன்.

மெசரிங் கப் தேடி எடுத்து எண்ணெய் ஊத்தி, சமையலை தொடர்ந்தா.....

“இங்க ஒரு நிமிசம் வந்துட்டு போயேன்” கையில் கத்திரிக்கோலாடு மாமா கத்திக்கொண்டிருந்தார்.

“இப்ப என்னால வரமுடியாதுமா.அங்க இருந்தே என்னனு சொல்லுங்க,பையன்கிட்ட கொடுத்து விடரேன்”

“அட, ஒரு நிமிசம் வந்துட்டு போயேன்”

“அம்மா நீ போ....இதை நான் கிளறிவிடரேன், என்னதானு கேட்டுட்டு வாம்மா” பையன்

“கண்ணு, பத்திரமா கிளறிவிடு,இப்ப வந்துடரேன்”
கோபம் புத்தியை முழுதுமாய் அக்கரமிக்க

“எதுக்குமா கூப்பிட்டீங்க....நீங்க எடுத்துக்க கூடாதா, மூச்சுக்கு முந்நூறு தடவ கூப்பிட வேண்டியது அப்புறம் சமையல் லேட்டா பண்ணரேனு கம்பளய்ன் பண்ண வேண்டியது”

“சரி சரி.....ஒரு நிமிசம் ஆடாம நில்லு, வெள்ள முடி எங்க இருக்கு சொல்லு, ஏதோ 5 , 6 முடினு சொன்னியே கட் பண்ணி விடரேன்”

ஒரு நிமிடம் பேச்சிழந்து நின்றேன்.

“அட, நேரமாச்சு சீக்கிரம் சொல்லு” மாமா

“வேணாம்பா இருந்துட்டு போகட்டும்” காதலுடன் சொன்னேன்

வெள்ளை முடியை தேடி கட் பண்ணி விட்டார்.

“எப்படி தான் உன் தோழிக்கு இந்த வெள்ள முடி மட்டும் கண்ணுல படுதோ போ, இனிமேல் நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போ”

“தேங்க்ஸ் மாமு” மெதுவாய் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சமையலைறைக்கு சென்றேன்.

அந்த நிமிடம் காதலின் அடர்த்தி இருமடங்காய் கூடி இருந்தது.

காதலை, அக்கறையை வார்த்தைகளால் சொல்வதை விட செயல்களில் காண்பிக்கும் பொழுது நெகிழ்ந்து விடுகிறது மனது.

யார் சொன்னது ஆண்டுகள் பலகடந்த பிறகு குடும்ப வாழ்க்கை அன்பில்லாமல் கடமையாக மட்டுமே இருக்குமென்று.

67வது சுதந்திர தினம்



67வது சுதந்திர தினம். பெருமையாக உணர்ந்தாலும் மனதில் சிறு வருத்தமும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. எல்லா வளங்கள் இருந்தும் நம்மால் ஏன் வளர்ந்த நாடுகள் பட்டியலில் வர இயல வில்லை.

தாத்தா தலைமுறையில் இருந்த நாட்டுப்பற்று அப்பாவின் தலைமுறையில் சிறிது குறைந்தே காணப்பட்டது. எனது தலைமுறையில் நாட்டுப்பற்றை விட தனிமனித சுகம் பெரிதாக தோன்ற ஆரம்பித்து விட்டது. எனது பிள்ளைக்கு இந்தியா ஏதோ உறவுகள் வசிக்கும் ஒரு நாடு என்ற உணர்வு மட்டுமே.

சுதந்திரம் பெற பாடுபட்ட கதையை மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் போது சிறிதும் உணரமுடியவில்லை அவர்களின் தியாகங்களை. வரலாற்றை சரியாக மனதில் பதிவு செய்ய முடியாதது நமது பிழையே. வெறும் பேச்சுக்களோடு நமது வீரத்தை முடித்துக்கொள்கிறோம். ஒற்றுமை உணர்ச்சி ஆடிக்கும் அமாவாசைக்கும் மட்டும் லேசாக தலைதூக்கிப்பார்க்கிறது. சிந்திக்கும் இளைஞர்களை அரசியலில் தடம் பதிக்க எது தடுக்கிறது என்றே தெரியவில்லை. நம்முள் எத்தனையோ குறைகள் இருந்தாலும் இதைக் களைய சிறிதும் முயலுவதில்லை நாம். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளுக்கு கேள்விகள் மட்டும் பதிலாகிறது.

இனிவரும் வருடமாவது என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்கு செய்வேன் என்ற உறுதியோடு இந்த தினத்திற்கு விடைகொடுக்கிறேன்.

ஜெய் ஹிந்த்


ஒற்றை வார்த்தைக்காக



மெளனக் கடலுக்குள் நீந்தும்
வார்த்தைகளுக்குத் தூண்டில்
போடுகிறேன் உணர்வுகளை
அடர்த்தியாக எடுத்துரைக்க

தூண்டிலுக்கு சிக்காத மீனாக
துள்ளிக் குதித்து ஓடிவிட்டன
பல வார்த்தைகள்

சிக்கிய சில வார்த்தைகளோ
ஜீவனிழந்தே உலாவருகின்றன

காத்துக்கிடக்கிறேன்
முட்டையை உடைத்து
வெளிவரும் சரியான
ஒற்றை வார்த்தைக்காக

Sunday, September 1, 2013

கிழிக்கப்படும் வாழ்நாள்



ஒவ்வொரு நாளாய்
கிழிக்கப்படும் வாழ்நாள்
முடிந்தே போகலாம்
முற்றிலுமாய் நானேயறியாத
ஓர் தினத்தில்............

எனக்கான அத்தனையும்
புதைக்கப்படலாம் பூமியின்
எங்கோ ஓர் மூலையில்
எந்தச் சுவடுமில்லாமல்,
கைக்குச் சிக்காத
புதையலாக.......

புதிதாக ஓர் பயணம்
துவக்கப்படலாம்
அடையாளங்கள்
தொலைக்கப்பட்டு
புது முகவரியுடன்.......

சட்டென அழிக்கப்படுமெனத்
தெரிந்தே தீட்டுகிறேன்
அழகான ஓவியத்தை
வாழ்நாளை வீணடித்தே

என்னுள் நீ


கலையாக் கனவு நீ
தீராத் தாகம் நீ
கரையா காதல் நீ
பேசாச் சொற்கள் நீ
மறையா வானவில் நீ...
வரப்பில்லா வயலும் நீ
பொய்க்காத வாக்கு நீ
எழுதா விதிகள் நீ
வெறுக்காத கோபம் நீ
வெறுமையில்லா தனிமை நீ
இழப்பேயில்லா சண்டை நீ
அடக்கமில்லா வெட்கம் நீ
புரியாத கணக்கு நீ
கடக்கயியலா கடலும் நீ
இலக்கணம் மீறிய கவிதை நீ
அடங்கா புயலும் நீ
என்னுள் அடங்கிய பதியும் நீ

இரவில் மழை


இரவின் நிசப்தத்தைக்
கிழிக்கிறது
காற்றுக்கும் இலைக்குமான
வாக்குவாதம்.

எட்டிப்பார்க்கும்
அண்டை வீட்டுக்காரராக
மின்னல்

செவி கிழியும்
வாக்குவாதத்தில்
அதிர்கிறது வானம்

சமாதானத் தூதுவனாக
மழைத்துளிகள்
பூமிநோக்கி

உனக்கான என் தவம்


உனக்கான என் தவம்
வரங்களே கோராமல்.
உள்ளுக்குள் பொங்குகின்ற
அன்பினை அணைபோட்டு
மெழுகாக உருகுகின்றேன்....

ஜோடிப்புறாவில் ஒன்றுமட்டும்
சிறகுவிரிக்க, அப்பிக்கொள்ளும்
சோகம்தனை அப்படியே
விழுங்கி விட்டேன்
எனக்காக உன் பயணமென்பதால்.

நினைவுகளை அசைபோட்டே
நிசத்திற்கு உயிரூட்டுகிறேன்.
கால கடிகாரத்தை நிறுத்திவிட்டே
சென்றுவிட்டாய் முழுவதுமாய்.

படிகளிலே தஞ்சமாகிறேன்.
கேள்விகளே கேட்காமல்
புதைத்து கொள்கிறது என்
உணர்ச்சிகளை அதனுள்ளே.

எழுத்துக்கள் வசப்படாததால்
என்னுள்ளேயே கரைக்கின்றேன்
உனக்கான உணர்வுகளை
புரிந்து கொள்வாயென்றே............

ஊசலாட்டம்


ஓர் நிமிடம் நெருங்கியும்
மறுநிமிடம் விலகியும்
பரிதவிக்கும் மனதிற்கு
கேடயமாய் ஏதுமில்லை

புத்தியின் கூரியவாளால்
கசியும் குருதியை
புறந்தள்ளவுமியலாது
மெளன கூட்டுக்குள்
சமாதியாகிறது........

நிம்மதியாக கண்மூட
நர்த்தனமாடும் நினைவுகளில்
பாசக் கயிறு கொண்டு
பக்குவமாய் உன்னருகில்
அமர்த்திக் கொள்கிறாய்.

ஊசலாட்டத்தில் உழன்றதை
ஓரிடத்தில் நிறுத்திவைக்க
அசையாமல் நிற்கிறது
அடுத்த காற்றின் வருகைவரை

நினைவுகள்



 நினைவுப் பெட்டகத்தினுள்ளே
உணர்ச்சிகளின் ஊர்வலங்கள்....
உள்புகுந்த ஊர்வலத்தில்
விதவிதமாய் காட்சிகள்.

பசுமையாய் சில நினைவுகள்
நர்த்தனமாடின ஒய்யாரமாய்.
துருப்பிடித்த நினைவுகளோ
முடங்கிக் கிடந்தன ஓரத்தில்.
வெறுத்த நினைவுகளோ
ஒளிந்து கொண்டன கூசிப்போய்.

மறைந்தவரிகளின் நினைவுகளோ
இருப்பைக் காட்டிக்கொண்டன
சோகப் பெருமூச்சை பிரசவித்து.

நிசங்களின் சாயல்களைத்
தொலைத்த நினைவுகளும்
இறைந்து கிடந்தன ஆங்காங்கே.

அடியும் முடியும் காணவியலா
நினைவு ஊர்வலத்திலிருந்து
சட்டென விடுவித்தன
நிஜங்களின் ஆரவாரங்கள்.

முடிச்சுகள்


முடிச்சுகள் என்றுமே
புரியாத புதிர்களாகவே..
தளர்த்துகையில் இறுகியும்
இறுக்குகையில் தளர்ந்தும்
...
கண்டும் காணமல் போகையில்
கைகளில் சிக்கி சிரிப்பதுமாய்..
நுனியை துரிதமாக தேட
கடலில் வீழ்ந்த துளியாய்
கரைந்து கண்சிமிட்டுவதுமாக
கண்ணாமூச்சி ஆடுகிறது

அயர்ச்சியில் தூக்கியெறிய
உருண்டு புரண்டு
நூலாக பிரிந்து
வாழ்க்கையின் சூட்சமத்தை
புத்திக்குள் திணிக்கிறது
ஆரவாரமின்றி!

வான் தொடும் கனவுகளோடு


 
எங்கேயோ இருந்து
மெதுவாய் வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சி
வண்ணங்களை கரைத்து
என்னுள் இறக்கி அழகிய...
ஓவியமாக்கியது என்னை

நதிநீரில் தெரிந்த பிம்பத்தை
ஆச்சரியமாய் காண்கையில்
துள்ளிக்குதித்த சிறுமீனும்
சிரித்துச் சென்றது நட்பாக.

வண்ணத்துள் தொலைத்தயென்னை
மீட்டுடெடுக்க மழைநீரில் சரணடைந்தேன்.

மழைநீரோ இதுவே அழகென
வண்ணத்தை அடர்த்தியாக்கி
வாழ்த்தியே விடைபெற்றது.

முகமூடியே நிசமுகமென மாற
தோகை விரித்த மயிலாக
ஆடித்திரிகிறேன் மரங்களடர்ந்த
வனாந்தரத்தில் தனியாக
வான் தொடும் கனவுகளோடு

கண்ணீர் துளிகள்


ஓட்டை வழி கசியும் நீராக
நினைவுகள் மனதினுள் புக,
அழுத்திய பாரத்தில்
பிரசவமாகிறது கண்ணீர் துளிகள்.

வழிந்தோடும் நீரில் கரைந்தோடும்
உணர்வுகளை அணையிட்டு
தேக்காமல் திறந்துவிடுகிறேன் மடையை.

கொட்டிய வேகத்தில் தோன்றிய
பள்ளத்தை நிரப்புவதற்காக
திறந்த இனிதான நினைவலைகள்
பெரியதாக்கியே சென்றன
வேதனை புரியாமல்.

மறந்துசென்ற புத்தகம்


மகன் மறந்துசென்ற புத்தகத்தை
பார்க்கும் நொடியிலெல்லாம்
காணாமல் பரிதவிக்கும் பிஞ்சு முகம்
கனக்க வைக்கிறது இதயத்தை

மனக்கணக்கில் நொடிகள் கணக்கிட்டு
புத்தி துல்லியமாக நேரங்கள் குறிக்க
வீடு விட்டிறங்க துடிக்கிறது தாயின் மனம்.

கைகள் சாவியைப் பற்றிக்கொள்ள
துரிதமாக இயங்கும் உடம்பை
அழுத்தி வைக்கிறது எச்சரிக்கைமணி
பக்குவப்படும் வாய்ப்பை நினைவூட்டி

மாலையில் ஒரு செல்ல கோபத்துடனும்
சில சிணுங்கல்களோடு புத்தகமில்லாமல்
சமாளித்த அவனின் கதையை கேட்க
புன்முறுவலோடு தயாராகிறது மனம்

மீண்டும் தொடருவோம்


விநாடிகள் கரைய கரைய
வெளிவந்து விழும்
வார்த்தைக் குவியலில்
நமக்கான வார்த்தைகளை
மட்டுமே காணவில்லை....

கோபப் பள்ளத்தாக்கில்
விழாது தடுக்கும்
திராணியற்றே இருக்கிறது
பிரசவித்த அத்துணை
வார்த்தைகளும்........

மெளனக் கூட்டுக்குள்
வெப்பத்தின் தாக்கம்
தாளாமல் தவித்து
உடைத்து பிரசவிக்கிறேன்
ஒற்றை வார்த்தையை

வார்த்தையின் வீரியம்
பேச்சிழக்கச் செய்ய
மெளனக் கடலுக்குள்
நீ எழுப்பும் கோப அலைகள்
குளிர்விக்கின்றன அந்நொடியை

மீண்டும் தொடருவோம்
நமது தேடல்களை
பிறிதொரு வார்த்தைக்
குவியலிருந்து.............

மெல்லிய இடைவெளி


பெரிய பள்ளங்களை
அடைத்த பிறகும்
மெல்லிய இடைவெளி
உயிர்ப்போடு இருக்கிறது
கண்களுக்கு தெரியாமல்....

உணரும் ஒவ்வொரு
நொடியும் வலியின்
அடர்த்தி கூடுகிறது.

நீர் உறுஞ்சும் வேராய்
அத்துனையும் உறிஞ்சி
எக்காலமாய் சிரிக்கிறது.

அடைப்பதின் சூட்சமம்
கொஞ்சமும் தெரியாமல்
ஆழ்கடல் அமைதி
பூண்கிறது மனம்

இலை உதிர்தலுக்கும்


என் கிளையின் ஒவ்வொரு
இலை உதிர்தலுக்கும்
தன்னையறியாமல்
காரணமாகும் தென்றல் நீ

பூக்கும் பூவிலெல்லாம்
உனக்கான அன்பினை
காவியமாக்கி காத்திருக்கிறேன்.

மென்மையாக தழுவிவிட்டு
செல்கிறாய் அமைதியாக
புன்னகையை உதிர்த்துவிட்டு

அர்த்தங்கள் புரியாவிட்டாலும்
காத்திருக்கிறேன் உனக்காக
என்றேனும் அன்பினால்
மூழ்கடிப்பாய் எனும் நம்பிக்கையில்

உறுத்தும் கனவு


நீண்ட இரவில்
நெடும் கனவில்
எண்ணங்களின் ஊர்வலம்
திகைக்க வைக்கிறது புத்தியை

பாதிக்காதென இறுமாந்திருந்த
சூழல்கள் அடிமனதில்
ஏற்படுத்திய வடுக்கள்
காட்சிகளாய் விரிய
பதைத்து விழிக்கிறது மனம்.

தொண்டையில் சிக்கிய முள்ளாய்
உறுத்தும் கனவினை
உருத்தெறியாமல்
அழிக்க முடியாமல்
தடுமாறும் மனதிற்கு
கடிவாளம் தேடும்
புத்தியை நையாண்டி
செய்கிறது காலம்

வெகு தூரத்தில் இல்லை



மெளனத்தால் கரைத்த
மணித்துளிகள் ஏதோ
உணர்த்த தவறியதால்
கோபத்தின் கருமை
கூடியே உள்ளது....

மெளனம் உடைக்கும்
ஓர் வார்த்தை உளிக்காக
காத்திருக்கும் தருணங்கள்
உணர்ச்சிகளின் கொந்தளிப்பால்
மூழ்கடிக்கிறது உணர்வுகளை.

மெளனக்கூட்டுக்குள்
நத்தையாய் சுருண்டாலும்
உன் வார்த்தைக் குவியலை
நோக்கிய பயணத்திற்கான
நாளும் வெகு தூரத்தில் இல்லை.

மலரும் நினைவுகள்




"குட்டி சீக்கிரம் நியூஸ் போடு" என்று பரபரத்தேன்

ஸங்கீத் கேள்விக்குறியோடு மாமாவைப் பார்த்தான்...

“அப்பா, என்ன ஆச்சு அம்மாக்கு... நியூஸ் போடச் சொல்லராங்க”

அவருக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை
ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு ”நியூஸ் போடு குட்டி” என்றார்
போட்டதும் ”தங்கவில்லை ஒரு பவுனுக்கு 1000 ருபாய் குறைந்துள்ளது” என்று சொன்னதும் மனம் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனது.

இளங்கலை முதலாண்டு படிக்கும் போது எங்கள் காம்பவுண்டில் இருந்த 4 வீட்டு மக்களிடமும் "share"ல் பணம் போட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதற்கு காரணம் புதுசா குடி வந்த லட்சுமணன் சார். தினமும் எங்கள் காம்பவுண்டில் 9 மணிக்கு சாப்பிட்டு முடித்து விட்டு இரவு கூடும் 1 மணி நேர அரட்டையில் எல்லோரும் கலந்து கொள்வோம்...கேலி, கிண்டலுக்கு இடையில் எல்லாம் அலசப்படும். லட்சுமணன் சாரைப் பற்றி தனியாக ஒரு பத்தி கடைசியில் போடரேன்,இப்ப மேட்டருக்கு வருவோம். அவர் பேங்கில் வேலை செய்தார். "share" பற்றி அவர் சொல்ல சொல்ல எல்லோருக்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது. நமக்கு வேர பிசினஸ் பண்ணனும் என்ற எண்ணம் அப்ப அப்ப தலை தூக்குமே......

அப்பாவிடம் 10000 வாங்கி "share" வாங்கிவிடுவது என்று நான் முடிவு செய்தேன். அதன் பிறகு நடந்த கூட்டத்தில் பெரிய விவாதங்கள் எல்லாம் முடிந்து எந்த கம்பெனியில் எத்தனை "share" வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. எல்லோரும் லட்சுமணன் சார் சொன்ன கம்பெனியின் "share" வாங்குவது என்று முடிவு செய்தார்கள். நான் மட்டும் வேறு கம்பெனி சொன்னேன். அதற்கு வேறு பல காரணங்கள் அடுக்கி அப்பாவை சம்மதிக்க வைத்தேன். ஒரு வழியாக எல்லோரும் "share" வாங்கியாகிவிட்டது.

முதன் முதலில் நான் வாங்கியது என்று பீரோவில் பத்திரமாக என் துணிகளோடு வைத்துவிட்டேன். தினமும் அதை பார்த்து ஒரு பெருமையான பார்வை வேறு. பிறகு வழக்கம் போல எங்கள் கூட்டம் கேலி கிண்டலோடு நடந்தாலும் கடைசியில் "share" நிலவரம் பற்றி சாரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். இப்படியே 6 மாதங்கள் ஓடின.....

அன்றும் வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்துக் கொண்டு இருக்கும் போதே லட்சுமணன் சார் என்னைப் பார்த்து பரிதாபப் பார்வை வீசிவிட்டு போனார். என்னவென்று புரியாததால் இரவு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்துவிட்டேன். ஆரம்பிக்கும் போதே ஏதோ பாவம் என்பது போல் எல்லோரும் என்னைப் பார்க்க ஒன்றுமே புரியவில்லை. அப்பா வேறு “முதன்முதலா செய்யும் போது இப்படி சிலது தவறா முடியரது சகஜம் அனி.அதுக்கெல்லாம் மனதை தளரவிடக்கூடாது” என்றார். ஆகா மூளை ஒரு நிமிடம் வேலை செய்ததில் "share"ல் ஏதோ குளறுபடி என்று புரிந்தது. விலை குறைந்து 7500ருபாய்க்கு வந்து நின்று பலிவாங்கி விட்டிருந்தது என்னை. மேலும் குறைவதற்குள் விற்றுவிடலாம் என்று முடிவு செய்து அதை விற்றுவிட்டோம்.

அதன் பிறகு தான் சோதனையே எனக்கு. யாரு எப்ப பார்த்தாலும் “hai business magnet" என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்... நாம யாரு “யானைக்கும் அடி சறுக்கும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா” என்று ஒன்னுமே நடக்காதது மாதிரி பில்டப் பண்ணி சமாளிச்சுடுவேன். பல்பு வாங்கிப் பழகிப்போனாலும், கல்யாணம் ஆகி மாமாவிடம் முதன்முறையாக சொல்லி செய்ததலிலும் பல்பா என்று மனம் கொஞ்சம் சுருங்கத்தான் செய்தது.

“கிண்டல் பண்ணரீங்கனு நினைச்சேன்பா....உண்மைதான்” என்றேன். அன்று மாலை வந்ததும் தங்கம் விலை குறைந்துவிட்டதுனு மாமா சொன்ன போது விளையாடரார் என்றே நினைத்தேன்....
நிலம் வாங்கலாம் என்று சொன்னவரிடம், தங்கம் வாங்கலாம் நல்ல விலை உயரும் என்று சொல்லி 2 நாட்கள் முன்பு தான் வாங்கி வந்தோம். இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறி வயிற்றில் புளியைக் கரைத்தார் மாமா.

“சரி விடுங்கப்பா.....எல்லாம் நம்ம மருமகளுக்கு தான சேர்த்தரேன். அதுல போய் லாப நஷ்டம் பார்க்க முடியுமா” என்று நான் நிலைமையை சமாளிப்பதாக நினைத்து கொண்டு கூற, மாமா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார் தன் அருகில் நிற்கும் 10 வயது மகனைப் பார்த்து.

ஸ்ங்கீத் புரியாமல் “என்னப்பா சிரிக்கர” என்றான்.

“உங்க அம்மா சமாளிக்கர அழகைப் பார்த்து தாங்கலடா” என்றார்.
கையில் கிடைத்த பல்பை அமைதியாக கொண்டு வந்து பல்பு குவியலில் சேர்த்துவிட்டேன்.
இதனால ஒன்னே ஒன்னு நல்லா புரிந்தது “விதி ரொம்ப வலியதுங்கோ”

இப்போ லட்சுமணன் சார். : தனக்கு திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகவும், TNEB பேங்கில் வேலை செய்வதாகவும் கூறி வீடு வந்து பார்த்த போது அம்மாவுக்கு அப்பாவுக்கும் ஒரே தயக்கம். கல்யாணம் ஆகாதவருக்கு காம்பவுண்டில் வீடு எப்படி கொடுப்பது என்று. நான் தான் நல்லவரா தெரியரார் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்தேன். மேலும் இன்னொரு வீட்டில் குடியிருந்த மாமாவும் அதே பேங்கில் தான் வேலை செய்தார். அவரும் சாருக்கு சிபாரிசு. வீட்டிற்கு வந்த அன்று இரவு அரட்டையில் கலந்து கொண்ட போது பேசவே இல்லை சார். நான் தான் ஓட்டிக் கொண்டு இருந்தேன் “நான் சிபாரிசு செய்து தான் உங்களுக்கு வீடு கிடைத்தது,பேசரதுக்கு எத்தன ருபாய் சார் கேட்பீங்கனு “ . பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார் பாருங்க. ஏன்டா பேசச் சொன்னோம் ஆகிடுச்சு. என்னை செமையா ஓட்டுவார். சரவணன் அண்ணன் வேறு கூட்டு சேர்ந்து கொள்வார்கள். லட்சுமணன் சார் வந்த பிறகு சரவணன் அண்ணன் சார் வீட்டில் தான் இருப்பாங்க, அவங்க வீட்டுக்கு போரதே இல்லை. நமக்கு ஒரு விசயம் கிடைத்தா விடுவோமா என்ன
ஒரு நாள் பேசும் போது “நீங்க கிரேட் சார், கல்யாணம் ஆகாமலே 25 வயது பையனை தத்து எடுத்து இருக்கீங்க” என்று சொல்ல அவருக்கு ஒன்னுமே புரியலை. பிறகு அம்மா அவருக்கு விளக்கி சொல்ல அன்று ஒரே சிரிப்பாய் இருந்தது. சாரோட கல்யாணம் திருநெல்வேலில நடந்தது. தேவிக்கா(இலட்சுமணன் சார் மனைவி) வந்த பிறகு தான் என் அணி கொஞ்சம் வலுவாச்சு. 2 பேரும் சேர்ந்து எல்லோரையும் ஒரு வழி பண்ணிடுவோம். தேவிக்கா எனக்கு நல்ல தோழியா மாறிட்டாங்க. தேவிக்கா வந்த முதல்நாள் சார் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.என்னை அறிமுகப்படுத்தும் போது ”அருமையா சமைப்பா அனி, அமைதியின் மறுவடிவம், ரொம்ப பொறுப்பான பொண்ணு, பிசினஸ் மேக்னட் “ என்று சொல்ல, எல்லோரும் பயங்கரமாக சிரிக்க ஆரம்பிக்க அக்காவிற்கு ஒன்னுமே புரியலை.

“நல்லா சமைப்பியா, எது சூப்பரா பண்ணுவ அனி” என்றார். சமையல் கட்டு பக்கமே போகாத நான் என்னத்த சொல்ல
“அதையும் சார் கிட்டேயே கேளுங்க” என்றேன். முதல் நாளே ஓட்டராரே என்ற கோபத்தில். சார் விடுவதாக இல்லை
“தேவி, அனி சூப்பரா சுடு தண்ணி வைப்பா” என்று கூற தேவிக்கா தான் எனக்கு முழு சப்போர்ட் பண்ணினாங்க. அப்புறம் எங்க கூட்டணிய அடிச்சுக்க ஆளே இல்லை. ஒரு வயது குழந்தையோடு அவர்கள் மாற்றலாகி போன போது கண்ணீர் பூத்ததை தடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். இன்று தொடர்பில் இல்லை என்றாலும் அவர்களுடன் பேசி மகிழ்ந்த காலங்கள் மனதின் ஓரத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது.

மெளனத்தின் கருமை


மெளனத்தின் அடர்த்தியில்
கரைகிறது சத்தங்கள்
சத்தமேயில்லாமல் முழுவதுமாய்....

நடப்பவையெல்லாம நல்லதாகவே
நடந்தாலும் மகிழ்ச்சியின் இடத்தில்
ஆட்கொள்கிறது வெறுமை முற்றிலுமாய்.

மெளனத்தை வெல்லும்
ஒற்றைச் சொல்லுக்கான
தேடல் தொடங்குகிறது இதயத்தில்....

இதயத்தின் காயங்களில்
கசியும் வலிகளில்
ஒற்றைச்சொல் காணாமல் போக
மெளனத்தின் கருமை
கூடுகிறது மெளனமாய்.....

ஒற்றை முத்தம்



விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க
ஒற்றை முத்தம் போதுமென்ற இரகசியம்
அறியாமல் மன்றாடுகிறாய் மணிக்கனக்காக .

நீ வீசிய சமாதான வார்த்தைகளை
மெளனமாக தின்று செரிக்கரேன்,
புரியாத நிலை பார்த்து பரிதாபப்பட்டு.

புரியவைக்க யத்தனிக்கையில்
புரியாது விழிக்கும் உன்விழி
பார்த்து கோபக் பந்தை வீசுகிறது இதயம்

கத்தி ஆர்ப்பாட்டங்கள் முடிந்து
சோர்ந்து போய் அபலையாக
அடைக்கலமாகிறாய் தலையணைக்குள்

புரண்டு படுக்கும் என் கைகளுக்குள்
உன் விழியின் ஈரங்கள் முத்தமிட,
கோபங்கள் எல்லாம காணாமல் ஓட,

ஒற்றை முத்தம் நான் தந்து
முடித்துவைக்கிறேன்  சண்டைகளென
நாம் நினைத்த அன்பு பரிமாற்றத்தை