Thursday, August 30, 2012

சூறாவளிப் பேரன்பில்





உன் சூறாவளிப் பேரன்பில் திசை தெரியாமல்
சுழன்றடிக்கப்படுகிறேன் சிறு இலை போல்.
ஒரு நிமிடம் சந்தோஷமெனும் கோபுரத்தில் ஏற்றுகிறாய்
மறுநிமிடம் துன்பமெனும் குப்பைத்தொட்டியில் எறிகிறாய்.
மாறி மாறி நீ ஆடும் கண்ணாபூச்சி ஆட்டத்தில்
கருணையே இல்லாமல் பந்தாடப்படுகிறேன்.......... 
 
விரும்பியே வந்தடைந்ததால் விலகாமல்
பயணிக்கிறேன் உன்னுடன், உன் ஆசைப்படி.
உன் அரவணைப்பின் நிழலுக்குள்ளே
வார்த்தை அம்புகளால் இதயத்தை கீறிவிட்டு
உதடுகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறாய்.
 
சிலசமயம் வெறுமையில் மனம் உறைய
தனிமை தேடி சிறைப்படுகிறேன்.
உன் அன்பின் அடர்த்தியில் இரத்தம்
சொட்ட சொட்ட காயப்படுகிறேன். 
 
விரும்பியே சிலுவை சுமக்கிறேன்
என்றேனும் சூறாவளி ஓய்ந்து
தென்றல் வீசுமென்ற நம்பிக்கையில்.

மழை



மழையின் அறிகுறி மனதில் கீதம்பாட
வரவேற்க விரைகிறேன் வாசலுக்கு.......
மேகத்திடம் விடைபெற்ற மழைத்துளிகள்
வேகமாய் வீழ்கிறது புது உலகு காண......
 

எனக்கான முதல்துளி நடு உச்சியில்
நயமாய் விழுந்து பரவசத்தில் ஆழ்த்துகிறது.
இரண்டாம் மழைத்துளி தோளில் தரையிறங்கி
மனதில் மகிழ்ச்சிபூவை தூவிவிட்டு
விரல்நுனி நோக்கி விரைகிறது.
 

அடுத்தடுத்து வீழ்ந்த துளிகள்
மேனி முழுதும் நனைத்து
இன்பத்தால் இதயத்தை நிரப்புகிறது.
 

பாதங்களை மூழ்கடித்த தண்ணீரில்
தாளமிடுகிறேன் தப்புத்தப்பாய்.........
மழைத்துளிகள் அதற்கும் அழகாய்
நர்த்தனமாடி மகிழ்விக்கின்றது.
 
மறுஜென்மம் எடுக்கிறது குழந்தைத்தனம்.
அடித்துச் செல்லும் மழைக்கு வழித்துணையாய்
சோகங்கள் விடைபெறுகின்றன என்னிடமிருந்து.

மழை கடந்த பின்பும் அதன் நினைவாய்
மேனியெங்கும் பரவிக்கிடக்கின்றன
சில மழைத்துளிகள்..............................


எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது



சோகமும்,சுகமும் கலந்த கலவையாய் மனம்
 ஏனோ தானோ என்றே நகர்கிறது மணித்துளிகள்
 மகிழ்ச்சிப்பூக்கள் மலராமல் மொட்டாகவே கருகிறது
 என்னவென்றே தெரியாத இருள் மெதுவாய் சூழ்கிறது
 எதையையோ சாதிக்க துடிக்கிறது புத்தி
 தோல்வியுண்ட வீரனாய் மனம் துவள்கிறது
கண்டறியும் சக்தியில்லாமல் கட்டுண்டு கிடக்கிறது. 

தனிமையைத் தேடியே ஓடும் மனதை,
சிறைப்பிடித்து கேள்விகளால் கதறடித்து
பேரிண்பம் காணும் புத்தியிடம் சிக்கி
கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சாய்
நடுங்கிறது மனம் நிர்கதியாய்..........
 

புரியாத புதிராய் வாழ்க்கை சிரிக்க
துடுப்பை இழந்து ஓட்டைப்படகில்
தன்னம்பிக்கையோடு எதையோ
எதிர்பார்த்து மனம் காத்துக்கிடக்கிறது.......

 


Sunday, August 26, 2012

சமாதானம்


விலகுகிறேன் மனதளவில்
என்னையறியாமல் .............
காலங்கள் பிரித்த பொழுது
வாழத் துடித்த மனது
காலம் கைகூடி வரும் போது
சண்டிமாடாய் சதிசெய்கிறது.

கண்ணீர் மல்க மன்றாடுகிறேன்
கதவடைத்துவிட்டது செவிடன்போல்
அவிழ்கமுடியா முடிச்சாகிறது வாழ்க்கை

விளையாட்டாகவோ,வினையாகவோ
நீ செய்த சில செயல்கள்
மனதைக் காயப்படுத்தி
புண்ணாகவே இருக்கிறது இன்னமும்
 
புண்களில் வழியும் வெறுப்பினால்
கருணையேயில்லாமல் காயப்படுத்தபடுவாய்
சொல்லாமலே விடைபெறுகிறேன்
உன் முத்தங்களின் ஈரங்களோடு
நலமாயிருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
 

வாழ்க்கைத் தண்டவாளம்


நம் அன்புக் கூட்டுக்குள்ளே
திகட்ட திகட்ட தேனருந்திய பின்
அரவணைக்கும் உன்கரங்களுக்குள்
தஞ்சமாகிறேன் குழந்தைபோல
உன் கரிசனத்தில் கரைந்து
உன் அன்பினில் ஆழ்ந்து
உன் அணைப்பில் மலர்ந்து
உன் கோபத்தில் கருகி
காற்றின் திசைகேற்ப
திரும்பும் இறகாய்
உன் உணர்ச்சிகளுக்குகேற்ப
உடை பூண்கிறது உள்ளம்

தடுமாறும் தருணங்களில்
தாங்கிப் பிடித்து தடம்
வகுத்து வழிநடத்துகிறாய்
 
ஆர்வத்தினால் அதிவேகமாய் சென்று
அடிபட்டு விழும் நேரங்களில்
கவசம் போல் காக்கிறாய்
சிறு கீறல் கூட விழாமல்

என்னுடனான உன் பயணம்
கஷ்டமெனும் போதினிலும்
இஷ்டமாக இணைகிறாய்
வாழ்க்கைத் தண்டவாளத்தில்
 

சிலந்திக் கூடு


வாழ்க்கைச் சிலந்திக் கூட்டில்
விடுதலை கிடைத்தும் அடிமையாய்
விரும்பியே கிடக்கிறோம் இருவரும்.

கூட்டின் ஒரு முனையை நீயும்
மறுமுனையை நானும் பற்றியிருந்தாலும்
உன் கழுகுப் பார்வையால்
என் ஒவ்வொரு அசைவையும்
வழிநடத்துகிறாய் உனை நோக்கி.....

புரிதலெனும் போர்க்களத்தில்
உயிர்த்தெழும் சண்டைகளனைத்தும்
உரமாகின்றன நம் அன்பெனும் மரத்திற்கு

மரம் பூத்துக் குலுங்குகையிலும்
நிழலில் இளைப்பாறிய படியே
தொடர்கிறது நமது சண்டைகள்

பயணத்தில்......


 
அடித்துப் பிடித்து அமர்ந்தபின்
மறைகிறாய் இரயிலின் ஓட்டத்தில்
ஒரு புள்ளியாய், உன் வாசனையை
காது வருடும் காற்றில் கசியவிட்டு.......
நினைவுகளில் நாழிகைகள் நகர்வதால்
பலவித பாவங்கள் நர்த்தனமாடுகின்றன,
முகத்தினில், பைத்தியமோ என்ற ஐயத்தை
உயிர்தெழவைக்கிறது சகபயணியிடம்

அசை போட்டு ஆனந்தப்படுவதில்,
மனம் நிரம்பி, இதயத்தில் வழிந்து,
இரத்த நாளங்கள் துடித்தெழுந்து
சிவப்பு பூக்களாய் பூக்கின்றன
வெண்மையான கன்னங்களில்.

இதழ்களோ உன் நாமத்தையே
தவமாய் உச்சரிப்பதால் வரமாய்
புன்னகை அங்கே தவழ்கிறது.
 
நினைவுகளில் மூழ்கி நினைவிழந்ததால்
இறங்க வேண்டிய இடத்தை கடந்தபிறகே
இறங்க யத்தனிக்கிறேன் உனைத் திட்டியபடியே.......
மெதுவாய் நீட்டினார் டாக்டரின் விலாசத்தை
அந்த பக்கத்து சீட்டுக்காரர்.................................

அவரின் பரிதாப பார்வை புரிந்து
இடி போல் நான் சிரிக்க
மின்னலென மறைந்தே போனார்

தொலைவிலிருந்தும் எனைப்
பைத்தியமாக்கும் உன்னை
ஆயுள் தண்டனைக் கைதி
ஆக்கிவிட்டேன் இதயச் சிறையிலே........
 

பறக்கிறேன் இலக்கினையடைய


 
நினைவுகளை மட்டுமே நிழல்போல்
நிறுத்திவிட்டு, நிறுத்திவிட்டாய்
உன் கடைசி மூச்சினை.......

பாறாங்கற்கலாய் பாரங்கள்
இறகுகளை சுற்றி இறுக்க
பறக்கநினைக்கிறேன் பலவந்தமாய்....

ஒவ்வொருமுறையும் தன்னம்பிக்கைச்
சிறகிழந்து வீழ்கிறேன் விடியல்களில்...
முயற்சிகள் தொடர்கின்றன் விடாமல்
முற்றிலுமாய் சிறகுகள் இழக்கும் வரை......

வற்றிய கண்ணீரும்,சோர்ந்த உள்ளமும்
தவியாய் தவிக்கிறது உன் அருகாமைக்காக,
தவிப்புகளை கோர்த்து வைராக்கியமாக்குகிறேன்.
அதுவே உந்து சக்தியாக மாற வானம் நோக்கி
சிறகுவிரித்துப் பறக்கிறேன் இலக்கினையடைய..........

வீறு கொண்டு எழுவோம்


தன்னம்பிக்கையிழந்து, தைரியமிழந்து
கண்ணீர் விட்டு,காலடியில்
வீழ்வோம் எனக் கனவு கண்டாயோ?

வேர்களை வெட்டி விட்டு
நீ அர்ப்பரிக்கும் நிமிடத்தில்
ஆயிரம் விதைகளை விதைத்ததை
அறியாயோ.......

உன் இராஜதந்திரத்தால் இன்று
வீழ்ந்தது போல் தோன்றினாலும்
வெட்ட வெட்ட துளிர்க்கும்
அதிசய சீவன்கள் நாங்களென்பதை
அறியாத மூடன் உனை வீழ்த்த
வீறு கொண்டு எழுவோம்...........

தெரிந்தே தொலைகிறேன்


 
உன் தேடல்கள் தெரிந்தே தொலைகிறேன்
தூரமாய் நின்று இரசிக்கிறேன் உன் தவிப்புகளை
தவிப்புகளில் தெறிக்கும் அன்புச் சாரலில்
சொட்டச் சொட்ட நனைகிறேன். 
கண்களும் மனமும் சோர்ந்து
துவளுகையில் ஓடி வந்து
தாங்கிக் கைப்பிடிக்கிறேன்.

சிறு அழுத்தலில் என் அன்பினை
கரத்தின் வழி இதயம் நிரப்புகிறேன்.
நாடகமறிந்து கோபம் கொள்கையில்
அன்பெனும் புயல் காற்றால்
வேரோடு சாய்க்கிறேன் உன் கோபத்தை

துக்கங்களை தூக்கிலிட


 
துருவங்களாய் நாம் பிரிந்து
துக்கங்களைப் பெரிதாக்கி
துன்புறும் வேளையிலே
தூக்கத்திலும் துக்கமடைக்கிறது.
துயரங்களை தூக்கிலிட
துடிக்கிறது துவளும் மனம்.

ஆயிரம் அர்த்தங்கள்
அமிழ்ந்த அருஞ்சொற்களை
அருவியாய் கொட்டும் உன் அதரங்கள்
அமைதியெனும் ஆடைபூண
ஆற்றாமையில் அரற்றுகிறேன்.

காற்றினிலே கலந்துவந்த
கலங்கவைக்கும் கட்டிலடங்கா
கற்பனைகளிலுள்ள கபடங்களை
கண்டுணர காதல்மனமும்
காலதாமதமாக்க, காலமும்
காலனாய் காட்சியளிக்க
காத்திருக்கும் பொறுமையற்று
காணாமல் போனாயோ?
 
இன்பமாய் நாமிருந்த காலங்களில்
இனியதாய் நீயுரைத்த இன்சொற்கள்
இகழ்ச்சியாய் இன்று எனை நோக்க
இறக்கும் என் இதயத்திற்கு
இதமாய் நீயிருக்கும் நாளுக்காக
இருவிழி பூக்க காத்திருக்கிறேன்.
 

Friday, August 10, 2012

பொறுமை விடாதிருக்க யாசிக்கிறேன்



சிறு சலசலப்பிற்கும்
சஞ்சலப்பட்டு ஓடி வருகிறேன்
உன்னிடமே, சமாதானங்களுக்காய்....


ஒவ்வொருமுறையும்
தாயின் பொறுமையோடு
செவிசாய்த்து,விளக்கமளித்து
தெளிந்த நீரோடையாக்குகிறாய்.


சபதம் ஏற்கிறேன்
இதுவே கடைசிமுறையென்று.
பிரசவ கால வைராக்கியமாய்
உடைக்கப்படுகிறது அடுத்த சலசலப்பில்.


உன் பொறுமைகள் உடைபடுவதையும்,
மெளன அணைப் போட்டு தடுத்து
நீ தவிப்பதையும் உணரமுடிகிறது.


சிறிது கால அவகாசம் கேட்கிறேன்
என்னை திடப்படுத்திக் கொள்ள,
அதுவரை பொறுமை விடாதிருக்க
யாசிக்கிறேன் உன்னை.........

மலரும் நினைவுகள் - 5



சில நெருங்கிய உறவினர்களின் பெயர்களும்,முகங்களுமே பல வருடங்களுக்குப் பிறகு மறதிப் பட்டியலில் சேர்ந்து விடும். ஆனால் சில காலம் மட்டுமே பழகிய சிலரின் முகம் பசுமரத்தாணி போல் மனதில் பசுமையாக இருக்கும். அப்படி ஒரு நபர் தான் “விசாலம் அக்கா” அவரைப் பற்றிய சில நினைவுகள் இந்தப் பதிவில்.

விசாலம் அக்கா

விசாலம் அக்கா என்றாலே அவரது வேகம் தான் நியாபகத்திற்கு வரும். நான் அவரை முதன் முதலாக பார்த்தது அவரது 5 வயது குழந்தையுடன் தான். தீபாவளி சமயங்களில் கை முறுக்கு சுற்றித் தர வருவார். பாட்டிக்கு உதவிக்கு ஆள் தேவை எனும் போது வீட்டு வேலைகளில் உதவுவார். கடகடவென 200 முறுக்குகள் அரை மணி நேரத்தில் சுற்றி விடுவார். அவரது கைகளில் லாவகத்தை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருப்பேன்.

”எனக்கும் சுத்த ஆசையாய் இருக்கு அக்கா” என்ற போது கொஞ்சம் மாவை எடுத்து சுற்றுவதற்கு சொல்லிக் கொடுத்தார். அன்று முழுவதும் அந்த மாவு என்னிடம் பட்ட பாடு ஆண்டவனுக்கே வெளிச்சம். எப்படியோ ஒரு வழியாக கற்றுக் கொண்டு ஒரு முறுக்கு சுற்றுவதற்குள் அவர் 20 முறுக்குகள் சுற்றி முடித்திருப்பார். ”எப்பக்கா உங்கள மாதிரி வேகமா சுத்த வரும்” என்று ஆதங்கத்தோடு கேட்பேன். “வயித்துப் பொழப்பே இது தான் கண்ணு,வேகம் தானா வந்துருச்சு” என்பார்.

18 வயதில் ஒருவனைக் காதலித்து திருமணம் முடிந்த பிறகே அவனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பது தெரியவர, பெரிய பிரச்சனைக்குப் பிறகு குழந்தையுடன் தனியாக வாழ்கிறார் என்பதை அம்மாவில் மூலம் கேட்ட போது அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.அவரது பையன் சேகர் என்னை விட 6 வருடங்கள் சிறியவன். அப்பா இருந்தும் இல்லாத அவன் மேல் தனிப் பாசம் எப்போதும் உண்டு எனக்கு.

“அந்த ஆளு முன்னால என் பையனை படிக்க வைச்சு பெரிய ஆளாக்கனும்” என்று சொல்லுவார். ஒரு சிறிய அறை தான் அவரது குடித்தனம். அவனை நல்லவனாக வளர்த்த வேண்டும் என்பதற்காக அடித்துத் தான் வளர்த்தினார். அவர் சேகரைக் கொஞ்சி நான் பார்த்ததே இல்லை.அவன் ஒரு முரட்டுக் குழந்தையாகவே வளர்ந்தான்.

படிப்பிலும் சுமாரான மாணவனாகவே இருந்தான். எப்பொழுதாவது விசாலம் அக்காவுடன் வீட்டிற்கு வரும் போது ஒரு மூலையில் எதுவும் பேசாமல் அமர்ந்து இருப்பான். அம்மா,அப்பா எங்களைக் கொஞ்சும் போது, ஒரு ஏக்கமான பார்வையே அவன் கண்களில் இருந்து வெளிப்படும். “இங்க வாடா சேகர்” என்ற அப்பாவின் குரலுக்கும் பதில் வராது அவனிடமிருந்து. நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு பலகாரங்கள் கடையில் வாங்க ஆரம்பித்ததால் விசாலம் அக்காவை அதன் பிறகு பார்க்கும் சந்தர்பம் அமையவில்லை.

ஒரு நாள் பல் டாக்டரிடம் சென்ற போது அங்கே வேலை செய்து கொண்டு இருந்தான்
“அக்கா,என்னைத் தெரியுதா,சேகர்” என்றான்.நன்றாக வளர்ந்து இருந்தான். அடையாளமே கண்டு பிடிக்க முடியவில்லை.
“டேய் சேகர், நீயா, அடையாளமே தெரியலை, அம்மா எப்படி இருக்காங்க, என்னடா இங்க வேலை செய்யர,படிக்கலையா” என கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு இருந்தேன்.
“அக்கா, மூச்சு விடுங்க முதல்ல” என்று சிரித்தான்.முழுவதுமாய் மாறிப் போய் இருந்தான். முரட்டுத்தனங்கள் போய் அமைதியான பையனாக காட்சியளித்தான்.
”8வது முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்துட்டேன் அக்கா, அம்மாவை எங்கேயும் வேலைக்குப் போக வேண்டாமுனு சொல்லிட்டேன், அம்மாவை நல்லா பார்த்துகனும் அக்கா” என்று சொல்லும் போது குரல் லேசாக தழுதழுத்தது. அவனைப் பார்க்க பெருமையாய் இருந்தது. சின்ன வயதில் அவனது பொறுப்புணர்ச்சி ஆச்சரியமாக இருந்தது எனக்கு. அதே சமயம் வீட்டில் குழந்தைத்தனமாய் அடம்பிடித்து எல்லோரையும் படுத்தும் என்னை நினைத்து ஒரு ஓரத்தில் வெட்கமாக இருந்தது. நானும் இனிமேல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டேன். நம்ம சபதத்திற்கு ஆயுள் என்றுமே ஒரு நாள் தான் என்பது தான் ஊரறிந்த இரகசியமாயிற்றே.பொள்ளாச்சி விட்டு சென்ற பிறகு அவர்களைச் சந்திக்கவே இல்லை. திருமணம் முடித்து மும்பை சென்ற பிறகு பொள்ளாச்சி பக்கமே போகவில்லை.

ஒரு நாள் அலைபேசியில் அம்மா அழைத்த போது குரல் ஏனோ பிசிறு தட்டியது. நல விசாரிப்புகளுக்குப் பிறகு அம்மா சொன்னது காதில் இடிபோல் இறங்கியது.
“என்னமா சொல்ர, நல்லா தெரியுமா, நம்பவே முடியலை” என்றேன்.
“விசாலம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா அந்தப் பையனை, இப்படி பண்ணிட்டானே, காதல் தோல்வினு தற்கொலை பண்ணி அவளை நட்டாத்துல விட்டுட்டான்” என்று புலம்பித் தீர்த்து விட்டார்.
மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம் அது. தற்கொலை செய்யும் முன் ஒரு நிமிடம் தாயைப் பற்றி யோசிக்காத சேகர் மேல் கோபம் கோபமாக வந்தது. என்னை அறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
காதலித்து ஏமாற்றிய தந்தை
காதலுக்காக தற்கொலை செய்து கொண்ட மகன்
இருவராலும் பாதிக்கப்பட்டது என்னவோ விசாலம் அக்கா தான்.




உறுத்தல்கள் துறந்து


எங்கே தொலைத்தேன் இயல்புகளை
சுற்றி, சுற்றித் தேடுகிறேன்,
தொலைத்த இடம் தெரியவில்லை

வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கி
உயிர் துறந்தனவா? இல்லை
குற்றுயிரும் குலையுயிருமாய்
எங்கேயாவது எனக்காக
காத்திருக்கின்றனவா?

தொலைத்தது புரியவே பலகாலமானது
மீட்டெடுக்கும் காலம் எப்போது?
கண்ணாடியில் காட்சியளிக்கிறது
என் முகமே எனக்கே அந்நியமாய்..........

இழந்த இயல்புகள், மறந்த இயல்புகளாயிடுமோ?
மீட்பதும் சாத்தியமா? என ஆயிரம் கேள்விகள்
அலையலையாய் எழும்பி மூச்சைத் திணரடிக்க
அமைதியாய் அமர்கிறேன் அகல் விளக்கின் முன்...

எரியும் திரியும், குறையும் எண்ணையும்
எதையோ புத்திக்கு உணர்த்த தெளிகிறேன்,
அழைக்கும் மகனின் குரல் சிந்தையை நிரப்ப
கலக்கிறேன் வாழ்க்கைக் கடலில்
உறுத்தல்கள் துறந்து.......................

உயிர்ப்போடு நானிருப்பேன்


என்றோ நீ உதிர்த்த வார்த்தைகள்
சிதையாமல் சிந்தையில் சிந்துபாட
சிக்குண்டு கிடக்கிறேன் அதனுள்ளே....

சிந்தையில் ஒர் ஓரமாய் உனைப்பற்றிய
சிந்தனைகள் சிறகடித்துப் பறந்து கொண்டே
இருக்கின்றன சலிப்பேயில்லாமல்.....

உருவாக்கிய எதிர்காலத் திட்டமெல்லாம்
துருப்பிடித்து தூங்குகிறது ஒரு மூலையில்,
செயல்வடிவம் கனவானதால்.......

எங்கேயிருக்கிறாய் ?
எப்படி இருக்கிறாய் ?
ஆயிரம் கேள்விகள் பதில் தெரியாமலேயே
தொக்கி நிற்கின்றன மனதினுள்
நலமாய் இருப்பாய் என்ற நம்பிக்கையோடு...........

எதிரெதிர் திசையில் பயணித்தாலும்,
சந்திப்புகளைப் புறக்கணித்தாலும்,
உன் கடைசி சுவாசம் வரை
உன்னுள் உயிர்ப்போடு நானிருப்பேன்
என்பது திண்ணம்................................


மலரும் நினைவுகள் - 4



ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும் போது நிறைய திட்டங்கள் உயிர் பெற்றிருக்கும். ஆனால் அம்மா வீட்டு வாசற்படி எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும்.

“நிறைய வேலை இருக்குனு சொன்னியே அனி” அம்மா

“எல்லாம் அடுத்தமுறை வரும் போது பார்த்துக்கலாம்மா” இது ஒவ்வொருமுறை நான் செல்லும் போது பரிமாறப் படும் சம்பாஷைனைகளில் ஒன்று. 

ஆறுமாத அம்மாவின் பிரிவை ஆறு நாட்களுக்குள் சரிகட்டி விடத் துடிக்கும் மனதிற்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது குறைவாகவே தோன்றும். என்னவோ அந்த நாட்களில் தான் பூமி வேகமாய் சுத்துவதைப் போல் பிரம்மை ஏற்படும்.

அதுவும் அம்மாவிடம் ஒருமுறையாவது திட்டு வாங்கவில்லையென்றால் அந்தப் பயணமே அர்த்தமில்லாதது போல் ஆகிவிடும். எனது மகனிற்கு ஒரே சந்தோஷம்,அம்மாவையும் திட்ட ஒரு ஆள் இருக்காங்களேனு.....

அன்றும் அப்படித்தான் ஆனது

“அனி, பரண்ல இருக்கற உன்னோட பழைய புத்தகத்தையெல்லாம் பார்த்து வேண்டாததைத் தூக்கிப் போடேன், நான் குழந்தைகளைக் கொஞ்ச நேரம் வெளியில கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்”

“நானும் வரேன்மா”

“ஒன்னும் வேண்டாம்,இந்த வேலையை முடிச்சு வை நாங்க வரதுகுள்ள”

பயங்கர கோபத்தோடு பரணில் கை வைத்த எனக்கு கண்களில் பட்டது அந்த நோட் புக். இளநிலைப் படிப்பின் கடைசி நாளன்று அனைவரிடமும் வாங்கிய பிரிவு மடல். ஒவ்வொரு பக்கங்களை புரட்டும் போதும் மனதில் தோன்றிய உணர்வுகளை மொழியில் சிக்கவைக்க முடியவில்லை.

கரங்கள் ஒவ்வொருவர் எழுத்தையும் வருடுகையில்,மனம் அவர்களைப் பற்றிய எண்ணங்களை அசை போட ஆரம்பித்தது.

சம்பிரதாயத்துக்காய் சில எழுத்துக்கள்
அக்கரையுடன் சில எழுத்துக்கள்
அன்பொழுக சில எழுத்துக்கள்

எதையோ சொல்லத் தொடங்கி சொல்லத் தெரியாமல் பாதியில் விட்ட சில எழுத்துக்கள்.


பாதிப்பேரின் முகம் நியாபகப்பெட்டகத்திலிருந்து காணாமல் போயிருந்தது.
சில பேரின் முகம் மங்கலாய் கண்முன் நிழலாடியது.
சிலரின் முகமோ கல்வெட்டாய் மனதில் காட்சிதர
பின்னோக்கி நகர்கிறது காலம்.

எத்தணை சண்டைகள், சமாதானங்கள்,கோபங்கள்,அன்புப் பரிமாறல்கள். நட்பு எனும் கயிறு அனைவரையும் இணைக்க, நட்புக்களே உலகம் என வாழ்ந்த காலம். வாழ்க்கைப் பற்றிய பயமேதுமில்லாமல் சுற்றித் திரிந்த காலங்கள்.

கடைசி நாள் உண்டென்று உணர்ந்தாலும், இனி தினமும் பார்க்கமுடியாதே என்ற எண்ணம் கண்களில் கண்ணீரைத் தாரை வார்க்க, மொழிகள் மெளனவிரதம் இருக்க, ஊமைகளாய் உணர்வுகளை எழுத்துக்களில் வடித்துத் தீர்த்தோம். மாதமொரு முறையாவது சந்திப்பது என்ற முடிவோடு பிரியாவிடை கொடுத்தோம். தைரியம் போல் நடித்து விட்டு, கண்ணீரோடு இரவைக் கழித்தது கண்களில் நிழலாடுகிறது இன்றும். அன்று தான் நான் நிறைய நண்பர்களை கடைசியாகப் பார்த்தது.வாழ்க்கை ஓட்டத்தில் திசைக்கொருவராக பிரிந்து விட்டோம்.

சந்திக்கவே கூடாது என நினைத்த சில முகங்கள்
சந்திக்க ஆசைப்பட்ட சில முகங்கள் என

யாரையும் சந்திக்காமலேயே நகர்கிறது காலம்.

“என்ன அனி பண்ணர, இன்னுமா சுத்தம் பண்ணலை” என்ற அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. அவசரமாய் பரணில் போட்டு விட்டு “பிளீஸ்மா, திட்டாத, அடுத்த முறை பண்ணித்தரேன் “ என்று சொல்லி விட்டு குழந்தைகளோடு விளையாட ஓடிவிட்டேன்,அம்மா திட்டுவதற்குள். ஆனாலும் அம்மாவின் திட்டு மெல்லியதாய் காதுகளில் ஒலித்தது. அப்புறம் என்ன........திட்டு வாங்காம ஜென்ம சாபல்யம் அடைவது எப்படி.

Tuesday, August 7, 2012

வழிகாட்டுவாயென............


உருகி உருகி உயிர் உருக உருக
வாசிக்கிறேன் உனக்கான பாசுரங்களை,
உன் இதயத்தில் நுழைந்து தன்னிடத்தை
அடைந்ததா என அறியாமலேயா ?
கசியும் பாசுரங்கள் நிரப்புகிறது
உன்னைக் கொண்டு என்னுள்ளான
வெற்றிடத்தை குறையேயில்லாமல்.

அந்தி நேரத்தில் கூடு தேடி ஓடும் பறவையாய்,
என் இதயமோ உன்னைத் தேடியே வருகிறது.
உன் வெற்றுப் பார்வை அம்புபட்டு இரத்தம்
கசிய வீழ்கின்றது உன் காலடியில்.

கோபத்திற்கான காரணமும் புரியவில்லை
கோபம் போக்கும் வழியும் புலப்படவில்லை.
உன் கைப்பிடித்தே வாழப் பழகியதால்
இதற்கும் உன்னையே எதிர்பார்க்கிறேன்
வழிகாட்டுவாயென............
..........................

நிழல் போல் நீயுடனிருப்பதால்


காதுமடலில் நீ கிசுகிசுத்த
காதல் மொழிகளெல்லாம்
காவியமாய் உறைந்து,
மனதினுள் கவிபாட
மயங்குகிறேன் உன்னிடத்தில்....

நீ அணைத்துக் கூறும் சமாதானத்திற்காகவே
செல்லச் சண்டையிடுகிறேன் நாள்தோறும்,
முடிவுகள் தெரிந்ததாலேயே ஆவலாய்
எதிர்நோக்குகிறோம் நாம்மிருவருமே......

குழந்தை போல் அடம்பிடிக்கும் நேரங்களில்
தாயைப் போல் பொறுமை காக்கிறாய்.......
தவறுணர்ந்து குன்றிப் போகும் நேரங்களில்
அரவணைத்து ஆறுதல் சொல்கிறாய்......

நிழல் போல் நீயுடனிருப்பதால்
நிம்மதியாய், நிறைவுடன்
நகர்கிறது காலச் சக்கரம்.

கண் கெட்ட பின்


முற்றுப் பெறாத கவிதையாய் முற்றத்தில்
கேட்பாரற்று கிடக்கிறேன் ஒரு மூலையில்,
உன் நினைவுகளில் மூழ்கிய படி ...

குருடன் உணர்ந்த யானை போல்
முழுதாய் உனையறியாமல்
கற்பனைகளால் வாழ்க்கையை இழந்துவிட்டு
கனவுகளில் வாழ்கிறேன் உன்னோடு.

உன் அன்பால் திளைத்த நாட்களெல்லாம்
கண்முன் காட்சிகளாய் வலம் வர,
மருகுகிறேன் மனதிற்குள்.....

அன்று நீ வண்ணங்களால் என் வாசல்
நிரப்பிய போது, நீரூற்றி கலைத்து விட்டு,
இன்று ஒற்றைப் பனைமரமாய் தவமிருக்கிறேன்
தோப்பாகும் கனவுகளோடு உன் வரவுக்காக.

கடைசி சுவாசம்


முடிந்தவரை மூச்சை இழுத்து
நுரையீரல் நிரப்புகிறேன்,
கடைசி சுவாசம் என்பதினால்........

 புத்தியில் புலம்பிக் கொண்டிருந்த
முடிக்கப்படாத கடமைகள்
காணாமல் போயின சட்டென்று....

என்னுடையது என்றிருந்த
அத்துணையும் அந்நியமாயின
ஒரு நொடிக்குள்........

பிரபஞ்சம் பதிவிறக்கம் செய்கிறது
தன்னுள் என் விவரங்களை விரைவாக......

அணையுமுன் சுடர்விடும் தீபமாய்
இதயம் வேகமாய் துடித்து
அடங்குகிறது அமைதியாய்.......

கடலில் கலக்கும் துளி தன்
அடையாளம் இழப்பதைப் போல்,
வெளிவராத கடைசி சுவாசத்திற்குள்
கரைந்து போகிறேன் நான்.......

மதம் கொண்ட யானைப் போல்


அதிகாலை ஆதவனின்
மென்கதிர்கள் மென்மையாய்
வையகத்தை வாஞ்சையுடன்
கட்டியணைக்க, அக்காதலுக்கு
காற்றும் மெல்லிசையமைக்க,....
இவற்றையெல்லாம் இரசித்தவண்ணம்
ஓவியமாய் நீ நின்றிருக்க,உனை
அணுஅணுவாய் இரசிக்கறேன்..........

மெதுவாய் கரம் பற்றி
காதல் கவி நீ சமைக்க
அறுசுவையுண்ட அரைமயக்கத்தில்
தோள் சாய்கிறேன் கொடி போல்.

உன் கவிபடிப்பது ஒரு சுகமெனில்
உன் குரல்வழி அதைச் சுவைப்பது
அடிக்கரும்பின் தித்திப்பை செவிவழி
இதயத்தில் நிரப்புவது போல் நிறைவாயிருக்கிறது.
 
மணித்துளிகள் நொடிகளாய் மாற
மாலைப் பொழுதும் மலர
மனதிற்கினியவன் மாயமாய் மறைய
மதம் கொண்ட யானைப் போல்
உனைத் தேடும் மனதிற்கு,
நினைவுகளெனும் மயக்க ஊசி பாய்ச்சி
மட்டுப்படுத்துகிறேன் வேகத்தை.
 

எப்படிப் புரியவைப்பேன்


நீ உதிர்த்த வார்த்தைகளை
மனப்பெட்டகத்தில் பூட்டிவைத்து
காவலுக்காய் உன் நினைவுகளை
நிறுத்துகிறேன்........
நினைவுகளில் கசியும்
உணர்வுகளை வடிவமாக்கி
உன் பார்வைக்கு அனுப்புகிறேன்

ஆசானின் கண்டிப்போடு
குறைகளைப் பட்டியலிட்டு
முத்திரையாய் ஜீவனில்லை
எழுத்துக்களில் என்றுரைத்தாய்.

நீயில்லாப் பொழுதுகளில்
எனைப் போலவே எழுத்துக்களும்
ஜீவனிழந்தே உலவுகின்றன என்பதனை
எப்படிப் புரியவைப்பேன் உனக்கு

தாரைவார்க்கிறேன் உன்னிடமே



உன் வாய்மொழிச் சொற்களெல்லாம்
சத்திய ஆடை பூண்டிருக்குமென
நம்பிக்கை கடலில் நான் நீந்திக்கொண்டிருக்க
பொய்களெனும் பேரலைகளால்
புரட்டிப் போடுகிறாய் கரையினிலே........
அகதியாய் கரையினில் காத்திருக்கிறேன்
உன் தரப்பு நியாயங்களுக்காய்.......
வாய்மூடி மெளனியாய் நீயிருக்க
கோபக் குழம்பில் மூழ்குகிறேன்.

அடைகாக்கிறேன் அத்துணை கோபங்களையும்
கோபக்கணைகளாய் உன் மீது வீச,
அன்பாய் வெளிவந்து அதிசயத்தில்
ஆள்த்துகிறது என்னை.

வாய் திறந்து, மெய் மொழிந்து
அன்புச் சிறைக்குள் அடைபடுவாயா?
ஊமையாய், உண்மை மறைத்து
நம்பகத்தன்மையிழந்து பழி ஏற்பாயா?
தீர்ப்புகளையும் தாரைவார்க்கிறேன் உன்னிடமே........

Thursday, August 2, 2012

சராசரி மனுஷி



இடியென சோகம் வாழ்க்கையை தாக்கினாலும்
புன்னகையால்  சேதமில்லாமல் கடப்பவள்.

இன்பத்தில் முழுவதுமாய் மூழ்கித் திளைப்பவள்
துன்பத்தையும் அழகாய் கடக்கத் தெரிந்தவள்

எல்லா விஷயங்களையும் அறிந்த அறிவாளி அல்ல
தேவையானதை தெரிந்து கொள்ளும் புத்திசாலி

கடவுள் இருக்கிறாரா எனத் தர்க்கம் செய்யாமல்
சக்தி ஒன்று உண்டு என சமாதானம் ஆனவள்

புத்தியால் எல்லாவற்றையும் ஆராயாமல்
மனதால் வாழ்பவள் வாழ்க்கையை.

எல்லோருக்கும் அனுசரித்தே வாழ்பவள்
அதிலும் தன்சுதந்திரம் போற்றுபவள்.

உலகத்தைப் புரட்டிப் போடும் புரட்சிக்காரியல்ல
தன் சுற்றத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழும் சாதாரண மனுஷி

வண்ணங்கள் தொலைத்த வானவில்லாய்



நமக்கான பூஞ்சோலையில்
காலடி பதிக்கிறேன் கனவுகளுடன்.....
நீ வந்து விட்டு போனதிற்கான
காலடிச்சுவடுகள் வரவேற்கின்றன.

உன் சுவடுகள் பதித்த
இடங்களில் எல்லாம்
நீ விட்டுப்போன மலர்களை
மாலையாய்த் தொடுத்து
காத்திருக்கிறேன் உன் வரவுக்காய்

சுனாமியாய் சில செய்திகள்
காதில் இடியாய் விழ
சுருண்டு போகிறது மனம்
தொட்டாச்சிணுங்கியாய்

தன்னிச்சையாய் கைகள்
மாலையைத் தவறவிட
தவிக்கிறேன் வண்ணங்கள்
தொலைத்த வானவில்லாய்......

Wednesday, August 1, 2012

பயணம்



ஏதோ ஒன்று புத்தியைக் குடைந்து
மனதில் பாரமாய் கிடக்கிறது

அந்த ஒன்றை ஆராய போக
அனுமார் வாலாய் நீண்டு
எங்கோ அழைத்துச் செல்கிறது

செல்லும் பாதையெங்கும் உணர்ச்சிகளெனும்
அக்னிக் குழம்புகளில் மூழ்கி
கரைசேர முடியாமல் தத்தளிக்கிறேன்

எதையோ பற்றி
எப்படியோ நீந்தி
கரைசேருகையில் தான்
தெரிகிறது, தொடங்கிய
இடத்திலேயே நிற்பது.