Sunday, March 24, 2013

வலி



ஒரு நிமிட நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. மெதுவாக துளிர்விட்ட வலி புத்தி முழுவதும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஒரு சிறு சத்தமும் வலியை அதிகப்படுத்தியது. தனிமையை மட்டுமே நாடி பயணிக்கிறது மனம். அழக்கூடாது என்ற தீர்மானம் முதலிலேயே மனதில் திடமாக நிறைவேற்றப்பட்டதால் கண்ணீர் துளிகள் ஜனிக்காமலே வலியை உடல் முழுவதும் உணர முடிந்தது. புத்தியும் மனமும் ஸ்தம்பித்து போய் இருந்தது. சில மணித்துளிகள் கடந்தபின.. வலி புத்தியின் கட்டுக்குள் ஆரவாரத்தோடு வர ஆரம்பித்தது. 

மெதுவாக வலியை உற்று நோக்க இனம் பிரிக்க இயலாத வர்ணங்கள் புத்தியை அக்கிரமித்தது. கோப வர்ணம் உயிர்த்தெழுந்து எதிர்ப்படுபவர்கள் மேல் கொட்டும் எண்ணம் மேலோங்கியது. எதிர்ப்படுபவர்கள் வெற்றுப்படகாக காட்சியளிக்க அடர்த்தி மெதுவாக நீர்த்துப் போனது. வலியை அனுபவிக்க அனுபவிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவரும் எண்ணம் மேலோங்கியது. வலியுடனான போராட்டம் நீண்டு கொண்டே போனது. புத்தியின் ஒரு பக்கம் கற்பனை குதிரை சிறகுகள் விரித்துப் பறந்து கொண்டு இருந்ததை தடுக்க இயலவில்லை.

உறக்க தேவதை மெதுவாக அணைக்க எல்லாம் மறந்த நிலையில் மனம் அமைதியாக அடங்கியது. விடியலில் வலிகள் வடுக்களாக உருமாறியிருந்தன. ஆகாயம் நோக்க நீலவர்ணம் மெதுவாக மனதில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் உள்ளே நுழைந்து வியாப்பித்தது. எதையோ சாதித்த திருப்தி இதழ்களில் புன்னகையாக ஒட்டிக் கொண்டது. மெதுவாக கைகள் எழுதுகோலை நாடியது வலியின் அனுபவத்தை எங்காவது எழுத்துக்களாக பதியும் ஆர்வத்தில்..........





உன் வரவை எதிர்நோக்கி


காத்திருக்கும் காலமெல்லாம்
வீண்னென்று உணர்ந்தாலும்,
கருகாத நம்பிக்கை மொட்டு
சாட்சியாகிறது அன்பிற்கு......

மெளனக்கதவின் அருகில்
எதிரும்புதிருமாய் வீற்றிருக்க,
தாள் திறக்கும் ஒற்றைச் சொல்லை
தேடிக் களைக்கிறது மனம்......

செவிக்குள் நுழையும்
ஆயிரம் வார்த்தைகளில்
எனக்கானவை யில்லாததால்
தாமரையிலைத் தண்ணீராக
மனதில் ஒட்டாமல் ஓடுகின்றன
கோப அலைகளை எழுப்பிவிட்டு.......

இன்னதென்னறியா உணர்ச்சிகளால்
சிறைப்பட்டு மெளனமாய்
கட்டுண்டு கிடக்கிறது மனம்,
விடுவிப்பாயென்ற நம்பிக்கையில்
உன் வரவை எதிர்நோக்கி.......