Thursday, March 29, 2012

குழந்தை தொழிலாளி


கண்களில் கனவுகளையும்
கைகளில் புத்தகங்களையும்
மனதில் மகிழ்ச்சியையும்
சுமந்தபடி பூரிப்போடு
பள்ளி செல்கிறேன் முதல்முறையாய்.

முதல் அடி வைக்கையில்
பசிக்காய் அழும்
தங்கையின் குரல்
செவிகளை அடைக்க
கால்கள் தள்ளாட

அடுத்த அடி வைக்கிறேன்.
பசியால் களைத்துப் போன
தாயின் முகம்
கண்களில் நிழலாட
கனத்த மனதோடு
முன்னேறுகிறேன்.

நோயால் அவதிப்படும்
தந்தையின் நிலைமை
மனதை நிலைகுழைக்க
புத்தகப்பையை எறிந்துவிட்டு
சோற்றுப்பையை தூக்கிக் கொண்டு
மீண்டும் குழந்தை தொழிலாளியாகிறேன்

வானவில்லாய் இலட்சியங்கள்
மறைந்து போக
கனவுகளைத் தின்றுவிட்டு
நிஜங்களில் வாழப் பழகுகிறேன்.

வேர்களை அழியவிட்டு
மரங்களைக் காக்க
முயலும் சமூகத்தை
நினைத்துப் புன்னகைத்தபடி
தொடர்கிறது பயணம்.

Wednesday, March 28, 2012

கொள்வாயா, கொல்வாயா


தொடுவானமாய் காட்சியளித்து
நெருங்கி வருகையில்
விலகிச் செல்கிறாய்.........

பேசா பொழுதுகளில்
உயிர் துடிக்கிறாய்.
பேசும் நொடிகளில்
புறக்கணிக்கிறாய்.
 
கோட்டைகள் கட்டுகிறாய்
ஆவலாய் நுழைகையில்
தரைமட்டமாக்குகிறாய்.

 உன் அழகிய மொழிகளில்
மயங்கி அருகில் வர
மெளனம் கொள்கிறாய்.
மெளனத்தை மொழிபெயர்க்க
முடியாமல் விலகுகையில்
கார்மேகமாய் அன்பைப்
பொழிந்து திணறடிக்கிறாய்.

முழுவதுமாய் அறிந்தவளென
இறுமாப்பு கொள்ளுகையில்
ஒன்றுமே அறியாதவளென
உணரவைக்கிறாய்
உனது செயல்களால்....

நீ எரியும் மெளனக் கற்களால்
குழம்பிய குட்டையாகிறேன்.
அதிலும் உன் நலம் நாடியே
துடிக்கிறேன் அணுஅணுவாய்.

புரிந்து கொள்வாயா
விலகிக் கொல்வாயா
 

நானாக........பாத்திரத்திற்கு ஏற்ப உருமாறும்
திரவம் போல இல்லாமல்
நான் நானாக இருப்பது
உன்னிடத்தில் மட்டுமே....

புவியீர்ப்பு விசையாகி
என் எண்ணங்களை
கோள்கலாய் உனைச்
சுற்ற வைக்கிறாய்.

பொருளில்லா இடத்தில்
காற்று புகுவது போல்
நீயில்லா இடத்தில்
வெறுமை சூழ்கிறது.
 
தன்முனைப்பு தற்கொலை செய்ய
முகத்திரை முற்றிலும் கிழிய
இயல்புகளை இழக்காமல்
மலர்கிறேன் உன் தோட்டத்தில்.


Sunday, March 25, 2012

விதவைகட்டிய கூடு புயல்காற்றில்
சிதைந்தது போல்,
உனை இழந்து தவிக்கிறேன்
ஓர் நொடியில்.

 உன் சிரிப்பின் எதிரொலி
அடங்கும்முன் ஆவிஅடங்க
ஆற்றாமையின் உச்சத்தில்
உறைந்து நிற்கிறேன்.

எனை முழுமையாய் ஆண்டவன்
இன்று பிடிசாம்பலாய்
குவளையில் அடைய,
படல் இழந்த கொடியாகிறேன்.

அரவணைப்பின் கதகதப்பில்
பிறக்கப் போகும் வாரிசுக்காய்
அட்டவணையிட்ட எதிர்காலம்
அடியோடு தகர்ந்த்தை
விதியென நினைத்து
வாழ்கிறேன் விதவையாய்.

வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
விழிமுன் காட்சியாய் விரிய
விழிதிரையை நீர் மறைக்க
வீழ்கிறேன் காலத்தின்முன்
வழிதெரியாத குருடன் போல்.

இணையை இழந்ததால்
இனிமைகள் இல்லாதுபோக
இல்லாத இல்லறத்தில்
இனிமையான நினைவுகளோடு
இனிவரப்போகும் நம் குழந்தைக்காக
இயங்குகிறேன் இயந்திரமாய்.
 

எனையறிந்தவன்சீனப் பெருஞ்சுவராய் நீளும்
மெளனத்தை உடைக்க நினைக்க,
உடைத்து காட்சியளிக்கிறாய் என்முன்னே.

பொக்கிஷம் கிடைத்த பரமஏழை போல்
மனம் பரவசம் கொண்டு துள்ள,
அன்பெனும் புயல் காற்றில்
வேருடன் சாயும் மரம் போல்
சாய்கிறேன் உன் தோள்களில்.
 
எனைத் தோள் சேர்த்து, கை கோர்த்து
கேசம் கோதி, உச்சியில் முத்தமிட
மீண்டும் ஜனிக்கிறேன் இப்புவிதனில்
சாகாவரம் பெற்று.

ஜனனமும், மரணமும் ஒருசேர
நிகழ்கிறது என்னுள்ளே,
உன் விழிப்பார்வை என்னுள்
கதிர்களாய் ஊடுருவியதால்.

என் அத்துனை கேள்விகளுக்கும்,
கோபங்களுக்கும்,சமாதானப் புறாவாய்
உன் அணைப்புகளே தூது செல்கிறது.

செவ்வானமாய்  சிவக்கவைக்கும்
உன் காதல் மொழிகள்,
எனை நிழலாய் பின்தொடர,
வெட்கத்தில் மூழ்கி திணறுகிறேன்
கரையேரத் தெரியாமல்.

காதல் மழையில் பூக்களை
திணறடித்துவிட்டு,
ஏதும் நடவாதது போல்
அமைதியை போர்த்திக் கொள்ளும்
நீலவானமாய், ஓரப்புன்னகை புரிகிறாய்.

நிலமாய் நானும், பெருங்கடலாய் நீயும்
காற்றாய் நம் பேரன்பும் திகழ,
ஜென்மம் தோறும் இணைபிரியாது
இனிதாய் தொடர்கிறது நம் பந்தம். 

Friday, March 23, 2012

புரிந்து கொள்வாயா ????


ஒரு துளியாய் கடலில்
வீழ்ந்திருந்தால் கரைந்து
காணாமல் போயிருப்பேன்.
உன் அன்பெனும் சிப்பிக்குள்
விழுந்ததால் விலைமதிப்பில்லா
முத்தாகிறேன்.


சூரிய புயலாய் உன் பேரன்பு
எனைத்தாக்க மின்சாதனமாய்
உணர்விழந்து உருகிப் போகிறேன்.
 

கரும்புக் காட்டில் புகுந்த யானையாய்
என் சிந்தைக்குள் நுழைந்து
மனதை ஆள்கிறாய்.


ஒவ்வொரு நொடியும்
உனையே நினைப்பதால்
எல்லாம் காட்சிப் பிழையாக
மனம் பேதலிக்கிறேன்.


என் காதலை மொழிபெயர்க்க
தெரியாமல் விழிபிதுங்க,
எரிமலையாய் வெடித்து
குழம்பாய் வடிக்கிறது.


என் மொழியும் வஞ்சிக்கிறது
தொண்டையில் சிக்கிக் கொண்டு,
உன்னருகில் இருக்கும் போது.
 

முழுதாய் காதலை சொல்லவந்து,
ஒவ்வொரு முறையும் திரும்புகிறேன்
தோல்வியுற்ற வீரனாய்.
 

புரிந்து கொள்வாயா என் அன்பே
உணர்ச்சிகளைச் சொல்லத்
தெரியாத ஊமை போல்
நான் படும் பாட்டை.

வழியும் கண்ணீரை ஆராய்ந்து
பார்த்தால் என் அணுக்களின்
காதலை புரிந்துவிடுமே.......
 

சொல்லித்தான் புரிய வேண்டுமா
கதிரவனின் காதலுக்காய்
மலராய் மலரும்
செடியின் காதலை..........

Tuesday, March 20, 2012

மாயக்கார கண்ணன்உன் தோள் சாய்ந்தால்,
துக்கங்கள் தன் ஆயுளை இழக்க
சந்தோஷங்கள் இரட்டிப்பாக
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.


உன் சிறு அணைப்பில்
அணுக்களெல்லாம் புத்துணர்வு பெற
சோம்பல்கள் சவக்குழி ஏற
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.
 

உன் விழிப் பார்வையிலே
பாலைவன நாட்களெல்லாம்
பூஞ்சோலையாய் மாற
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.
 

விரல்களால் கன்னங்களில்
நீ வரைந்த ஓவியம்
சாகாவரமாய் நெஞ்சினில் பதிய
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.


காதோரம் நீ கிசுகிசுத்த
காதல் கீதங்கள் பசுமரத்தாணி போல்
புத்தியில் உறைய
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா


உன் அருகாமையில்
கோபங்களெல்லாம் துறவறம் பூண
அன்பு மட்டுமே மனதையாள
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா


காற்றிற்கு இசைந்தாடும் இலைபோல
உன் தாளத்திற்கு நானாட
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா
 

Monday, March 19, 2012

விலகிச் செல்கிறேன் சிலகாலம்

பட்டுக் கம்பளமாய் உன் பாதையில்
படற நினைத்து கூரிய கற்களான
மாயம் அறியாமலே மருகி
விலகிச் செல்கிறேன் சிலகாலம்

மனமகிழ்ந்து மகிழ்ச்சிகடலில்
மூழ்கடிப்பதாய் நினைத்து
அக்னிக் குழம்பில் தள்ளியதால்
தள்ளாடுகிற மனதோடு
விலகிச் செல்கிறேன் சிலகாலம்

உனக்கு அமுதமாய் இருந்து
உயிர் தரயெண்ணி அளவுமிஞ்சியதால்
விஷமாகி உயிர்பறித்த வினையால்
விக்கித்துப் போன உணர்வோடு
விலகிச் செல்கிறேன் சிலகாலம்.

உன் இலட்சிய வாழ்வில்
வழிகாட்டியாய் வாழ நினைத்து
தடைக்கல்லானதின் தடயம் தெரிய
விலகிச் செல்கிறேன் சிலகாலம்.

உள்ளங்கை நெல்லிக்கனியென
உன் உள்ளம் புரிந்தாலும்
உன் நலம் நாடியே, நினைவுகளை
நெஞ்சுக் கூட்டில் சுமந்தபடி
விலகிச் செல்கிறேன் சிலகாலம்.

குடத்திலிட்ட விளக்காய்
நீ இருந்தாலும்
குன்றிலிட்ட விளக்காவதற்காய்
பாதையில்லுள்ள முட்களை
அகற்றி மலர்களைத் தூவி
விலகிச் செல்கிறேன் சிலகாலம்
உன்முன்னே உனக்காக.

Sunday, March 18, 2012

கடைசி ஆசை


குற்றம் என்னதென்றே அறியாமல்
தண்டனைகளை அனுபவிக்கும்
ஓர் அபலைத் தாயின்
கடைசி ஆசை.

அலைகடலென பொங்கும்
மகனின் மேல கொண்ட
பாசத்தால் பகுத்தறியாமல்,
கணவனின் கருத்தையும்
மதியாமல் உயிலெழுதியதால்
அசோகவன் சீதையானேன்.

மருமகளின் குறைகள் சொன்னதால்
மகனும் ஐ.நா சபையாய் மெளனமாக,
கூட்டணியமைத்து வெற்றிபெற்ற
ராஜ்பாக்‌ஷேவாய் மருமகளாக,
வீட்டிலேயே அகதியானேன்.

நாடுகடத்தைபட்டேன்
முதியோர் இல்லத்திற்கு.
மகனைச் சுற்றியே
மனமும் சுழல்வதால்
தனித்தீவானேன் இங்கும்.

வாரமொரு முறையாய்
இருந்த மகனின் தரிசனமும்
தேய்பிறையாகி.............
இல்லாமலே போய்விட்டது.

இத்தனை நாட்கள்
அவனைச் சுற்றியே
என் உலகமானதால்,
எங்கும் அவனுருவமே
நிறைய, மகனின் பெயர்தவிர
எல்லாம் மறந்து போக,
பைத்தியம் என்ற பட்டப்பெயரோடு
ஓடியது வாழ்க்கை.

இன்று மரணப்படுக்கையில்
கடைசி மூச்சை பிடித்தபடி
மகனின் முகமே எனது
கடைசி காட்சியாய வேண்டி
காத்திருக்கும் எனதாசை நிறைவேறுமா?????


உன்னாலே

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடுவது போல்
உன்னால் நானும்
கவி படைக்கும் பிரம்மனாகிறேன்.

மரணப்படுக்கையில் நானிருக்க
அமுதமாய் வந்து
மீட்டெடுக்கிறாய் என்னை.

நீயும் நானும் கூட
இரட்டைக்கிளவிதான்
தனித்து செயல்பட முடியாததால்.

பூஜ்யமாய் நானிருக்க
எண்களாய் முன்நின்று
மதிப்பு கூட்டுகிறாய்.

”தானே” புயலே வந்தாலும்
தாங்கும் விழுதாய் நீயிருக்க
தயக்கமே இல்லாமல்
தாண்டுகிறேன் தடைகளை.

என் எண்ணங்களை பட்டைதீட்டும்
துரோணராய் நீ இருப்பதால்,
கதிரின் ஒளியை உள்வாங்கி
வைரமாய் ஜொலிக்கிறேன்.

தடாகத்தில் தனிதெழுந்து
தாமரையில் விழுந்த
ஓர் துளியாய் உன்னுள்
வீழ்ந்ததால் தனித்தன்மை பெற்று
திகழ்கின்றேன் இப்புவியினிலே.

தேடும் மனம்.
இலையிடை புகுந்து
காதலியைத் தேடும்
கதிரவனின் கதிர்களாய்
மனமும் உன்னைத்
தேடியே அலைகிறது.


என் மெளனவிரதமெல்லாம்
கல் பட்டுத் தெறிக்கும்
கண்ணாடியாய் கலைகிறது
உன் விழிப் பார்வையாலே.


நயாகரா வீழ்ச்சியாய்
கொட்டிய உன் அன்பெனும்
தேன் தடவிய வார்த்தைகள்,
இன்று வற்றிய குளமாய்
போனதன் காரணம்தேடியே
அலைகிறது மனசு.


செல்லரித்த புத்தகமாகிறேன்
உன் நினைவுகள் கொல்வதாலே.
முற்றுப்புள்ளியாய் நீயில்லாத்தால்
முடிவுரா வாக்கியமாய்
தொற்றியே நிற்கிறேன்.


தாய் கண்ட சேய்போல்
ஓடிவருகையிலே
மேகத்தின் பின் மறைந்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்.


நீ உதிர்க்கும்
அன்பில்லா வார்த்தைகளால்
திராவகம் குடித்த புழுவாய்
துடிக்கும் மனதை மறைக்க
கோபமெனும் கவசம் அணிகிறேன்.


சண்டை போட்டுப் பிரிந்திருந்தால்
சட்டைசெய்யாது இருந்திருப்பேன்.
பிரியம் சொல்லிப் பிரிந்ததால்
உன் நினைவுகள் தின்று
உயிர்த்திருக்கிறேன் உனக்காக.

 

Friday, March 16, 2012

கவிஞனின் காதல் - இறுதிப் பாகம்

ஞாயிறுக்கும் திங்களுக்குமான
ஊடலில் உலகமே பரிதவிக்க
ஆதவனுக்காய் நிலவிடம்
மும்மூர்த்திகளும் தூது சென்றனர். 


பற்ற வைத்த விறகாய் இருந்த
சினமும் தனிய, நிலவும்
தன் காதலனை நாடி செல்ல
அமாவாசையானது.

நிலவினைக் காணாது
அதன் ஒருதலைக்
காதலனான கடலும்
சேயைக் காணாது
துடிக்கும் தாய் போல
பெரும் ஓசையெலுப்பி
சோகப் பெருமூச்சுவிட,
கரைகளின் காதல் கீதங்கள்
ஆறுதல் மொழிகளானது

கவிஞனோ காதல் கடலினில்
முத்தெடுத்துக் கொண்டிருந்தான்
தன்நிலை மறந்து.

கவிஞனின் காதலால்
பிரபஞ்சமே இயங்குவதால்
கடைசிமூச்சு வரை
காதலித்துக் கொண்டே இரு
கவிஞனே......................

Wednesday, March 14, 2012

கவிஞனின் காதல் - பாகம் 2


பனித்துளியின் வருகையைப் பார்த்த
மொட்டும் இதழ் விரித்து எட்டிப் பார்க்க
வண்டுகள் பறந்து வந்து பூவுக்குள் ஒளிந்தது.

இதுஏதுமறியா கவிஞனோ தின்று வளர்வதே
குறிக்கோளாய் கொண்ட புழுவைப்போல
மூழ்கியிருந்தான் காதலில்.

கவிஞனின் காதலின் புனிதத்தையுணர்ந்த
கதிரவன் அவனை ஆரத்தழுவ
இளம் வெய்யிலை அனுப்பினார்.

ஆதவனின் செயலால் அகமகிழ்ந்த
பறவைகள் சந்தோஷ கீதம் பாடி
சிறகை விரித்து வானத்தில் பறந்தன.

கதிரவனின் மனமாற்றத்தைப்
கண்ட நிலவோ நிலமையறியாமல்
அலைகளாய் தனது கோபத்தை
வெளிப்படுத்தும் கடலைப்போல
கோப அலைகள் எழுப்பி
ஊடல் கொண்டது.

ஊடலின் காரணமாய் நிலவும்
பசலை நோய் கொண்ட
பெண்ணைப் போல
உடல் மெலிந்தது.
தேய்பிறையில் உலகமே
சோககீதம் இசைத்தது.

Tuesday, March 13, 2012

கவிஞனின் காதல் - பாகம்1


நிலா முற்றத்திலே
பெளர்ணமி ஒளியினிலே
தன் காதலியை
கவிஞன் மொழியால்
அலங்கரிக்க
அழகிய பாசுரங்கள்
உயிர் பெற்றன.

பிரபஞ்சமே அமைதியாய்
இலயித்திருக்க........
தென்றலும் அதற்கு
இசையமைக்க........
தேவர்களும் நட்சத்திரங்களாய்
எட்டிப் பார்த்து இரசிக்கிறார்கள்.

கவிஞனின் காதலில்
உருகும் பனிக்கட்டியாய்
மயங்கிய உயிரிணங்கள்
அத்துணையும் காதல் செய்தன.

பனித்துளி ஆழ்ந்து விழ
இதழ் விரிக்கும் மெல்கிய மொட்டாய்
அவனின் அடர்த்தியான காதல் கவியில்
சொக்கிய நிலவு பிரகாசித்து
உலகையே இரம்மியமாக்கியது.

நிலவின் ஒளி முகத்தில் தெறிக்க
அழகோவியமாய் காதலி மிளிர
மதிமயங்கிய கவிஞன்
காதலியே நிலவைவிட
அழகிற்சிறந்தவள் என கவிபாடினான்.

கோபமுற்ற நிலவும்
தன் காதலனாம் கதிரவனிடம் கூற
செங்கதிர்களுடன் கோபமாய் சூரியனும் வர,
பயந்து போன இலைகளின் வேர்வைத்துளிகளாய்
பனித்துளிகள் எட்டிப்பார்த்தன.


Monday, March 12, 2012

இதுவல்லவே நான்


கடலின் வர்ணத்தை போல
இல்லாததை இருப்பதாய்
நினைத்து நித்தமும்
கனவில் மிதக்கும்
இதுவல்லவே நான்

மழைமேகமாய் அன்பை
பொழியயெண்ணி
அடைமழையாய்
இடியுடன் பெய்து
வெறுப்புக்கு ஆளாகும்
இதுவல்லவே நான்

கல்லைக் கட்டிக் கொண்டு
பறக்க நினைக்கும் பறவைபோல்
தடைகளை வெல்லாமல்
வெற்றியைத் தேடும்
இதுவல்லவே நான்

காற்றின் போக்கிற்கு அசையும்
சிறு சிறகு போல்
சுயம் தொலைத்து வாழும்
இதுவல்லவே நான்

முட்களை நீக்கி
மலரை இரசிக்காமல்
பூதக் கண்ணாடி கொண்டு
முட்களை பார்க்கும்
இதுவல்லவே நான்

அழகான இசையாகயெண்ணி
எங்கேயோ இலயம் தப்ப
அபஸ்வரமாய் ஒலிக்கும்
இதுவல்லவே நான்

சிலந்திவலையாய்
சூழ்நிலைகள் பிண்ண
போராடாமல் இரையாகும்
இதுவல்லவே நான்

எங்கே தொலைத்தேன்
என் இயல்புகளை
மீட்டெடுக்கும் முனைப்போடு
தொலைத்த இடம் தேடி
வெறுமையின் துணையோடு
ஆரம்பக்கிறேன் பயணத்தை.

தவிக்கும் மனம்வைரத்தை இழந்த
குருடன் போல
சிலவற்றை இழந்த பிறகே
இழந்ததின் மதிப்பு தெரிகிறது.
மீட்டு எடுக்க நினைக்கையில்
தன்முனைப்பு தடுக்கிறது

காட்டாற்று வெள்ளமென
சீறும் எண்ணங்களுக்கு
தடை போட முயற்சித்து
வெடிக்கும் பாறையாய்
சிதறித் தான் போகிறேன்.

எண்ண அலைகளை
அடக்க முயற்சிக்க
பெளர்ணமி அலைகளாக
மேலெழும்பி மூழ்கடிக்கிறது.

இதழ்கள் மலர பேசினாலும்
வார்த்தைகள் ஏனோ
குளத்தின் பாசி போல
சோகத்தை அப்பிக் கொண்டே
உதிர்கிறது

சோகத்தை மறைக்க
மெளன கவசம் அணிகிறேன்.
மணித்துளிகள் நகர
அணலில் இட்ட மெழுகாய்
கவசமும் உருக,
நீர் கசியும் அணையாகிறேன்.

நிலவைச் சிறைவைத்த குளமாய்
எல்லாமே காட்சிப் பிழையாக
வேரறுந்த மரமாய்
வீழ்கிறேன் மண்ணில்
செய்வதறியாமல்