Friday, October 28, 2011

மாற்றங்கள்

இளமைகளில் துளிர்விடும் போராட்ட குணம்
தற்காப்பாகிறது முதுமைகளில்,

குருகுலத்தில் பெருக்கெடுத்த அறிவின் ஊற்றுகள்
வற்றிய கிணறுகளாகிறது பள்ளிகளில்,

காட்டாற்று வெள்ளமென ஆர்ப்பரிக்கும் மனம்
நதியாகிறது சுயம் தேடலில்,

எரிமலையென வெடிக்கும் கோபம் கூட
அன்பெனும் மழையாகிறது புரிதலில்,

தனதென்பதால் அமுதசுரபியாய்  வழியும் அன்பு
நீர்த்துப் போகிறது பொதுவுடமையில்,

தெரிதலில்  பொங்கும் ஆர்ப்பாட்டம்
அமைதியாகிறது அறிதலில்.

மயான அமைதி

நானெனும் அகங்காரம்
உடைந்த போது

பெரியவனெனும்
பிம்பம் சிதைந்த போது

எதுவுமே எனதில்லையென
தெரிந்த போது

எதையும் ஆள முடியாதென
உணர்ந்த போது

பிரபஞ்சத்தின் சிறு புள்ளியென
தெளிந்த போது

ஆட்டுவிப்பவன் ஒருவனென
புரிந்த போது

தான் ஒன்றுமில்லையென
அறிந்த போது

மனம் போர்த்தியது
மயான அமைதியை

Tuesday, October 18, 2011

பாக பிரிவினை

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வரும் சந்தோஷம், போகும் போது யாருக்கும் இருப்பதில்லை. 5 ஆம் ஆண்டு படிக்கும் நமது நாயகி அனுராதாவும் இதற்கு விதி விலக்கு இல்லை. டியூசனுக்கு போவதற்கு முன் சிறிது நேரம் விளையாட வேண்டி பள்ளி முடிந்ததும் ஓடி வந்தாள் வீட்டிற்கு.
வீட்டின் முன் கிடந்த பல ஜோடி செருப்புகள் அவளது புருவத்தை உயர்த்தின.அதில் அவளுக்கு பிரியமான அத்தையின் செருப்பை பார்த்ததும் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.
“அத்தைஎன்று கத்தி கொண்டே உள்ளே ஓடினாள்.அங்கே அத்தையின் வறண்ட சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது.அதற்குள் அம்மா அவளை கூப்பிட்டார்கள்.
“அனு,பெரியவங்க பேசர போது அங்க போய் தொந்தரவு பண்ணாதே
“ஏன்மா,அத்தை வரத என்கிட்ட சொல்லலஅம்மாவை கோபித்து கொண்டாள் அனு என்கிற அனுராதா.
“பேசாம சாப்பிட்டு விட்டு போய் விளையாடு,இன்னைக்கு டியூசன் போக வேணாம்
எப்பவும் அத்த வந்தா டியூசன் போகமாட்டேன் தான, விளையாட போகல அம்மா, எனக்கு அத்தை கிட்ட பேசனும்
“அனு,சொன்ன பேச்ச கேளு,இப்ப போய் தொந்தரவு பண்ணாத,திவ்யா வீட்ல விளையாடு,எல்லாம் முடிஞ்சதும் நானே கூப்பிடறேன்
அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை.அத்தை வீட்டிற்கு வந்தால் அவர்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருப்பாள்.இன்று அம்மா பேச்சை தட்ட மனமில்லாமல் திவ்யா வீட்டிற்கு சென்றாள்.
அத்தைக்கு திருமணம் ஆகும் வரை எல்லாம் அத்தை தான் அவளுக்கு. சாப்பாடு ஊட்டுவதில் தொடங்கி படுக்கும் போது கதை சொல்வது வரை எல்லாம் அத்தை தான். அடி பட்டாலோ,ஏதாவது வலி வந்தாலோ அத்தையிடம் தான் ஓடுவாள்.
அத்தை சொல்லும் கதைகள் அனுவிற்கு மிகவும் பிடிக்கும்.அதுவும் அவளைப் பற்றிய கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
அனு கட்டை விரல் அளவு தான் இருப்பாளாம் குழந்தையாய் இருக்கும் போது.அனுவை அத்தை குளிக்க வைக்கும் போது ஒரு நாள் காணாமல் போய் விட்டாளாம்.
தேடிப் பார்த்தா ,தண்ணீர் போற ஓட்டை வழியா தோட்டத்திற்கு போய்ட்ட குட்டி நீ அத்தை.
“அப்புறம் என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க அத்தை
“என்கிட்ட இருந்த பெரிய பூத கண்ணாடி வைச்சுதான் தான் குட்டி உன்ன தேடினேன்.என்ன பார்த்ததும் ஓடி போய் பூக்குள்ள ஒளிஞ்சுட்ட நீ
அப்புறம்
“ரொம்ப நேரம் தேடி பார்த்து,நீ கிடைக்காம போக, அத்த அழ ஆரம்பச்சுட்டேன், அப்ப நீ பூக்குள்ள இருந்து என்னை கூப்பிட்ட,அப்படியே உன்னை வாரி அனைத்து முத்தம் குடுத்தேன் 
“ரொம்ப அழுதையா அத்த
அத்தையை கட்டிக் கொண்டு தான் தூங்குவாள் அனு. நிறைய கதைகளின் முடிவுகள் சொல்லும் முன் தூங்கி விடுவாள்.
அத்தை கிட்ட கண்டிப்பா இன்னைக்கு கதை கேட்கனும் என்று நினைத்துக் கொண்டே திவ்யாவின் வீட்டிற்க்குள் சென்றால் அனு.
“அனு, சொத்து பிரிக்கராங்களா உங்க வீட்டுள இன்னைக்குதிவ்யாவின் அம்மா ராணி
“அப்படினா என்ன மாமி
“ஒன்னுமில்ல போய் விளையாடு
திவ்யாவுடன் விளையாடினாலும் மனம் அத்தையை சுற்றியே வந்தது. கவலையான அத்தையின் முகமே நியாபகம் வந்தது. நேரம் செல்ல,செல்ல அவளுக்கு அத்தையை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
மாமி ,நான் வீட்டிற்கு போறேன்
வேண்டாம் அனு, அம்மா வரும் வரை இங்கேயே இரு
“எனக்கு அத்தையை பார்க்கணும் “அழ ஆரம்பித்தாள் அனு
அதே நேரம் அனுவின் அம்மா வானதி உள்ளே நுழைந்தார்.
“எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா வானதி
“ஒரு வழியா முடிஞ்சுது மாமி,அவர் கோபமா இருக்கார்,அனுவை கூட்டிட்டு போறேன்,நாளை சொல்லறேன் எல்லாம்
அனு அத்தையை பார்க்க வேகமாக ஓடினாள் வீட்டிற்கு. வெறும் வீடு மட்டுமே வரவேற்றது அனுவை.
சாப்பிடாமல் அத்தை வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கும் மகளை பார்த்து திகைத்த படி நின்றனர் அனுவின் பெற்றோர்.

Monday, October 17, 2011

கொல்லும் மெளனம்

கண்ணுக்கு தெரியாத ஓர் சுவர்
மெதுவாய் எழுகிறது நமக்கிடையில்,

உடைத்திட மனம் விளைந்தாலும்
ஏனோ மெளனமாய் நான்.

பழகிய நாட்கள் மனதில்
நிழற் படமாய் ஓட

உன் நட்பை இழக்கும் தைரியம்
இல்லாமல் நான்

வார்த்தைகள் தேடுகிறேன்
என்னை உனக்கு உணர்த்த

தேய்பிறையாகும் நம் நட்பை
வளர்பிறையாக்க வழி தெரியாமல் நான்

திருவிழாவில் தொலைந்த குழந்தை போல்
நீ இல்லாமல் விழிக்கிறது என் மனம்

எனது ஒவ்வொரு முயற்ச்சிக்கும் உனது
விமர்சனத்தை எதிர்நோக்கிய படி நான்

மெளனம் கொல்வாயா இல்லை
மெளனமாய் இருந்து எனைக் கொல்வாயா

எதுவாய் இருந்தாலும் உன் அடி
தொடர தயாராய் நான்
இறப்பு

என்னை மிகவும் பாதித்த ஒருவரது மரணத்தை பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு சிங்கபூரில் அறிமுகமான முதல் நபர் ”நர்மதா”.
எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும்,முகம் நிறைய புன்னகையுடன் வலம் வரும் அவரை பார்த்து பலமுறை அதிசியத்ததுண்டு. நான் சோர்ந்து போகும் தருணங்களில் உற்சாகமான வார்த்தைகளால் ஆறுதல் கூறியவர்.
வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று உழைக்கும் அவரை கண்கள் விரிய நிறைய நாட்கள் பார்த்து வியந்து இருக்கிறேன்.
போன வருடம் டிசம்பர் மாதம் புது வீடு வாங்கிய சந்தோஷமான செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஊரிலுருந்து வந்த பிறகு வீட்டிற்கு வருவதாய் சொன்னேன்.தனது புது வீடு பற்றியும்,அதற்காக தான் வாங்கிய பொருட்களை பற்றியும் மகிழ்ச்சியுடன் விவரித்தார்.அவரிடம் இருந்த உற்சாகம் என்னுள்ளும் ஒட்டிக் கொண்டது.
மணிகனக்காக பேசிய பிறகு விடைப் பெற்றேன் அவரிடம்.
ஜனவரி மாதம் ஊரிலுருந்து வந்தவுடன் அவரிடம் தான் முதலில் பேசினேன்.
புது வீடு போய் 20 நாட்கள் ஆகி விட்டதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
ஜனவரி மாதம் 27 ம் தேதி காலை 10 மணி அளவில் வந்த செய்தி என்னை நிலைகுலைய செய்தது.ஆம் நர்மதா அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தி இடியென என் காதுகளில் விழுந்தது.ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.பதறி அடித்து ஒடினேன்.
தூங்குவது போல் அமைதியாக இருந்தது அவரது முகம். நான் பார்த்து வியந்த பெண்மணியின் உடலை கண்களில் கண்ணீர் வழிய பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தேன்.
இது தான் வாழ்க்கை என்று எனக்கு புரிய வைத்த மரணம்.
எதுவும் நிரந்தரமில்லை என்ற உண்மையை உரக்க சொன்ன மரணம்
எனது கர்வங்களை உடைத்தெரிந்த மரணம்
எனக்கு வாழ்க்கை பாடம் கற்றுக் கொடுத்த “நர்மதா”அவர்களின் மரணம்

Thursday, October 13, 2011

சிந்தனைத் தோழன் – தாத்தா

அன்று அந்த அறை மிக அமைதியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறான அமைதி. நானும் தாத்தாவும் இருந்தால், பேசிக்கொண்டேயிருப்போம். இன்று கண்கள் மூடி அமைதியாய்ப் படுத்து இருந்தார். முகத்தில் பெரிய சிந்தனை தெரிந்தது.அவரது கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தேன்.

“வலிக்குதா தாத்தா” 100வது முறையாகக் கேட்டேன்.

“இல்லடா அனிக்கண்ணூ” என்று தாத்தா சொன்னாலும் அவரது வலியை உணர முடிந்தது.

அவரது பெட்டிக்குள் இருந்த ஓலையை எடுத்துத் தரச்சொன்னார்.

அது அவரது ஜாதகம். நிறையமுறை அவர் படிக்கும்போது அருகில் இருந்திருக்கிறேன். “இதில் எழுதி இருக்கிற மாதிரியேதான் என் வாழ்க்கையில் நடக்கிறது அனிம்மா” என்று பல முறை வியந்திருக்கிறார்.
இப்ப எதற்குக் கேட்கிறார் என்ற குழப்பத்துடனேயே எடுத்துக் கொடுத்தேன்.

அமைதியாக படித்துவிட்டு...... அம்மாவை கூட்டி வரச் சொன்னார்.

“எனக்கு நேரம் வந்திருச்சுமா” என்றார்.
“என்ன மாமா சொல்றீங்க” அம்மாவின் கண்களில் கண்ணீர்.

நான் தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். மரணத்தைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறோம். ஆனாலும் தாத்தாவின் மரணம் தாங்கமுடியவில்லை. மறு பிறப்பில் அவருக்கு நம்பிக்கையில்லை.


”சக்கரம் சுத்தும்போது சத்தம் வருது, அது சுத்துறத நிறுத்திய பிறகு சத்தம் எங்கு போச்சுனு ஆராய்ச்சி பண்ணறதுல எனக்கு விருப்பமில்லை, மனம் சம்மதிக்காமல் மரணம் வராது அனி” என்றார்.

”என்னை விட்டுப் போய்ருவிங்களா” என்றேன்.
”மனம் வராது அனிமா, உன் கண்கள் கலங்கினால் மரணத்தை விரட்டிவிடுவேன்” என்று சொல்லி தாத்தா சிரித்தது நியாபகம் வந்தது.
”என்னை விட்டு போகமாட்டேனு சொன்னீங்களே” அழுதுகொண்டே கேட்டேன்.
“நீ அழும்பொழுது போகமாட்டேன்”என்றார்.ஏதோ மனதில் பாரமாய் அழுத்த தாத்தா தூங்கும் வரை அவருடனே இருந்தேன்..
எனக்கு மகாபாரதத்தை சொல்லிக்குடுத்தார். பிறகு ஒருநாள் என்னைக் கதை சொல்லச்சொன்னார். பாண்டவர்கள் ஐந்து பேர் என்று ஆரம்பித்தேன். ”ஏன் ஐந்து பேர்” என்றார். புரியாமல் விழித்தேன். ”யோசிடா.....ஏன் ஐந்து?” என்றார்.
”கதைய மட்டும் படிக்காதடா...என்ன சொல்ல எத்தனிக்கிராங்கனு யோசி”
”ஐம்புலன்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.” என்றார்
”கெளரவர்கள்?” என்றேன்
”நமது குணங்கள்” என்றார்
”கண்ணன்?” என்றேன்
”மனம்” என்றார்
”அப்ப மனம்தான் கடவுளா?” என்றேன்”கேள்வி கேள், உன்னை நீயே கேள்... அமைதியா யோசி.... காலப்போக்கில் எல்லாம் புரியும்” என்றார். எனக்கு ஒவ்வொன்றையும் சிந்திக்க கற்றுக்கொடுத்துவர். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

 காலையில் கண் விழித்தபொழுது வீடே அமைதியாய் இருந்தது. தாத்தா அன்றைய பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். முகத்தில் சோர்வு நிறைய இருந்தது.
தாத்தாவை தொந்தரவு செய்யாமல் எனது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தேன். காலை உணவை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் சென்றேன்.அவரால் அதிகம் பேச முடியவில்லை.

“வலி இன்னும் இருக்குதா தாத்தா?” என்றேன்.

”அதிகமாகுதுடா” என்றார்.
காலை உணவை அவருக்கு ஊட்டிவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து இருந்தேன். ஏதோ மனதில் இனம் புரியாத பயம். கண்களில் கண்ணீர் வழிந்தோட அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“அழாதடா......எதுவும் மாறாது நான் இல்லை என்றாலும்”

“விட்டுட்டு போகாதிங்க”

“உலகத்துல எதும் நிரந்தரமில்லை”

ஏதும் பேசவில்லை நான். அவர் அருகிலேயே இருந்தேன். நகர்ந்தால் போய்விடுவார் என்ற பயம்.

”நீ போய்ட்டு ஒரு மணி நேரம் கழித்து வா அனிம்மா”

“போக மாட்டேன்”

“முடியல கண்ணம்மா, போ, எல்லாம் சரி ஆகிடும்”

“என் கூடயே இருந்தரலாம் தான?”

“இருப்பேன்டா”

“நிசமா?”

“உனக்காகவே, உன் கூடயே இருப்பேன்டா”

“சரி, கொஞ்ச நேரம் கழித்து வரேன்”

”சரிடா, நிறைய நல்ல புத்தகம் தேடிப் படி”

“நீங்க இருக்கீங்க தானே?, நல்ல புத்தகத்தை தேடி குடுக்க”

என்னை விட்டுப் போகமாட்டார் என்ற எண்ணம் மகிழ்ச்சி தர அவ்விடம் விட்டு நகர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து தாத்தாவின் அருகில் சென்றேன் மதிய உணவை எடுத்துக் கொண்டு.

எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அழுகையோடே தாத்தா என்றேன். அதற்குள் எல்லோரும் வந்தார்கள். அம்மா அருகில் வந்து ”தாத்தா நம்மள விட்டுட்டு போய்ட்டாரு” என்றார்.

ஒன்றும் புரியவில்லை எனக்கு. தாத்தா பொய் சொல்ல மாட்டார்.

 “பொய் சொல்லி மத்தவங்களுக்கு வேணா நல்லவன் ஆகலாம், ஆனா மனசாட்சிக்கு” என்பார்.

இன்றும் எனக்கு யாராவது நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யும் பொழுது தாத்தாவின் உருவம் என் கண்களில் தோன்றி மறைவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

ஆமாம், தாத்தா என்றும் பொய் சொல்ல மாட்டார்.

Wednesday, October 5, 2011

சுயம் தேடல்

தனிமையை நேசிப்போம்.
மெளனத்தை இரசிப்போம்.
மனதை உற்று நோக்குவோம்.
சுயமதிப்பீடு செய்வோம்.
மனசாட்சியின் முன் நாம் குற்றவாளியாவோம்.
வக்கீலாக வாதாடாமல் தவறு எங்கே என்று ஆராய்வோம்.
ஆராய ஆராய மனசாட்சி நம்மை வழிநடத்தும்.
மனசாட்சி உயிர்ப்பாக இருந்தால் மனிதம் வாழும்.
மனிதம் வாழ உயிர்களை மதிக்கும் திறன் பெருகும்.
மற்ற உயிர்களை உற்று நோக்க இயற்கையின் சூட்சமம் புரியும்.
இயற்கையின் சூட்சமம் புரிய மொழி மறந்து போகும்.
மொழி மறக்க உணர்வுகள் ஆளப்படும்.
சந்தோஷமோ,துக்கமோ,குரோதமோ உற்று நோக்கப் படும்.
உற்று நோக்க எல்லாம் மாயை என புலப்படும்.
காரியத்தின் காரணங்கள் விளங்கும்.
காரணங்கள் விளங்க பிறப்பின் சூட்சமம் வெளிப்படும்.
பிறப்பின் சூட்சமம் வெளிப்பட கடமைகள் நமக்கு உணர்த்தப்படும்.
கடமைகள் உணர, அதன் வழிகள் தெளிவாக விளக்கப்படும்.
இயற்கையின் துணையோடும்,இறையின் அருளோடும் கடமைகள்
செவ்வனே நிறைவேற்றப்படும்.
வாழ்க்கை சுகமாகும்.