Saturday, August 27, 2011

இன்னும் எத்தனை காலம்


 
சுயசிந்தனையற்ற ஆட்டுமந்தையாய்
இருக்கும் எண்ணத்தோடு

பணத்திற்க்காக தனது சுயத்தை
இழக்கும் எண்ணத்தோடு

துக்கமோ,துரோகமோ  நம் வீட்டு கதவை
தட்டினால் மட்டுமே போராடும் எண்ணத்தோடு

வீட்டைச் சுற்றி வறுமை இருந்தாலும் தான்
மட்டும் அறுசுவை உண்ணும் எண்ணத்தோடு

தனது தலைமுறைக்கு பணத்தை மட்டுமே
சொத்தாக சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தோடு

மற்றவர்களின் தியாகங்களிலே நமது
வாழ்க்கையை அனுபவிக்கும் எண்ணத்தோடு

சுற்றுச் சூழல் பற்றி சிறிதும் கவலையில்லாமல்
தன் செளரியத்தையே முன்னிருத்தும் எண்ணத்தோடு

இன்னும் எத்தனை காலம்
இருக்க போகிறோம் இப்படியே.........

சிந்திப்போம்......செயல்படுவோம்.............
மாற்றத்திற்கான முதல் அடி நமதாக இருக்கட்டும்.


Friday, August 26, 2011

இருப்பாயோ

இருப்பாயோ என்னுடன்
என் ஆருயிர் மகனே.......

என் பல் விழுந்து, முடி நரைத்து,
நடை தளர்ந்து, துவழும் காலத்தில்
ஆலம் விழுதென உடன் இருப்பாயா
இல்லை
பணம் பெரிதென வேறு தேசம் சென்று
என்னை நிலை குழைய வைப்பாயா
துணை தேடும் காலத்தில் என் சொல் கேட்பாயா?
இல்லை
இவள் தான் துணை என அறிமுகம் செய்வாயா?

நான் விரும்பும் பாதையில் என் கைப்பிடித்து செல்வாயா?
இல்லை
உன் பாதையில் என் கைப்பிடித்து அழைத்து செல்வாயா?


என்னை தோழியாய் ஏற்றுக் கொள்வாயா?
இல்லை
நண்பர்களுக்காக என்னை தனிமையில் விடுவாயா?

 
எப்படி நடந்தாலும் என் செல்ல மகனே
என் வாழ்வு என்றும் உன்னை சுற்றியே.....


நீயரியாயோ

நீயரியாயோ.....
என் மெளனத்தின் அர்த்தங்களை
என் மனதின் மொழியை…..
எங்கே மலரும்
எங்கே வாடும்
எங்கே கருகும்
அறிந்தவன் தானே நீ.......

ஒவ்வொரு முறையும் விளக்கம்
கேட்ட படி நீ
மெளனத்தில் நான்

எனக்கும் மெளனம்
கலைக்க ஆசை தான்.

என் மனதை பிரதிபலிக்கும்
கண்ணாடியாய் வார்த்தைகள்
தெரிந்தால்...............

காலம் விந்தையானது

நதியாய் ஓடினேன்,

காற்றாய் வீசினேன்,

மேகமாய் தவழ்ந்தேன்,

நெருப்பாய் உதிர்ந்தேன்,

மணலாய் தவம் இருந்தேன்.

எதோ ஒரு வெறுமை.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

அன்பு இல்லாததால் என்றது

அன்பு என்றால் என்ன என்றேன்.

அனுபவித்து பார் என்று தாய் தந்தையை தந்தது.

அன்பில் திளைத்தேன் நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

 சிறிது சண்டை போட,எண்ணம் பகிர்ந்து கொள்ள யாரும்

இல்லாததால் என்று சகோதிரியை தந்தது.

செல்ல சண்டை ,பகிர்தலில் திளைத்தேன் நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

உனக்காக ,உனக்காக மட்டும் என்று யாரும்

இல்லாததால் என்று கணவனை தந்தது.

சந்தோஷத்தில் திளைத்தபடி நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு

கேள்வி குறியோடு காலத்தை நோக்கினேன்.

நீ அன்பை கொட்ட ஆள் இல்லாததால்

என்று மகனை கொடுத்தது.

ஓ,இன்று அன்பு மட்டுமே சுரக்கும்

அட்சய பாத்திரமாய் என் மனது.

தாய்மை வெறுமையை வென்றது.

கொடுப்பதில் இருக்கும் சுகம் பெறுவதில் இல்லையோ.

இதை முதலில் செய்து இருக்கலாமே என்றேன் காலத்திடம்.

விதை தான் மரமாகும் என்று கூறி சென்றது காலம்.

காலம் ரொம்ப விந்தையானதுதான்.

வாழ்க்கை பந்தயம்

எல்லோரும் ஓடுகிறார்கள் இந்த பந்தயத்தில்

சிலர் காரில்,
சிலர் பைக்கில்,
சிலர் சைக்கிளில்,
சிலர் மாட்டுவண்டியில்,
சிலர் கால்நடையாய்

கால்நடையாய் போகிறவன் ஓடுகிறான் மாட்டுவண்டிக்காக,
மாட்டுவண்டியில் போகிறவன் ஓடுகிறான் சைக்கிளிலுக்காக,
இப்படியே தொடர்கிறது இவர்களது ஓட்டம்.

தனக்காக ஓடவில்லை இவர்கள் யாரும்
தனது தலைமுறைக்காக ஓடுகிறார்கள்.

தன்னை முந்துபவர்களை பொறாமையாய் பார்த்தவண்ணம்,
தன்னைவிட பிந்தியவனை ஏளனமாய் பார்த்தவண்ணம்,
தன்னுடன் சமமாக வருபவனிடம் சினேக பார்வை கூட வீசாமல்
தன்னை விட முந்தி விடுவானோ என்ற அச்சத்தோடு
ஓடி கொண்டே இருகிறார்கள்,
தொடக்கமும் தெரியாமல் முடிவும் தெரியாமல்.

நீ இல்லாததால்

கண்மூடி சாய்ந்தபடி நான்
விடியலின் சாட்சியாக கதிரவனின் ஒளிகள் என்மேல்
வீதிகளில் மனிதர்களின் ஆரவாரம்
மனம் உன் நினைவை அசை போட்டபடி
மூளையோ இன்றைய வேலைகளை பட்டியலிட்டபடி


என் தோட்டத்தில் அடிஎடுத்து வைக்கிறேன் மெதுவாக
எனக்காக பூத்த மலர்கள் புன்முறுவல் புரிய
என் இதழ்களோ மலராத மொட்டாய்

மற்றவர்கள் பேசுவது விழுகிறது காதில்
எட்டவில்லை அதன் அர்த்தங்கள் மூளைக்கு
இன்று தெரிகிறது எல்லாம் எனக்கு அந்நியமாய்

எனது பொழுது நகர்கிறது மெதுவாக
எல்லா வேலைகளையும் செய்தபடி இயந்திரதனமாய்
என் கண்கள் மட்டும் அலைபேசியை நோக்கியபடி

அலைபேசியின் நாதம் என் செல்களுக்கு புத்துணர்வு ஊட்ட
நலம் என்ற ஒரு வார்த்தை எனக்கு உயிர் ஊட்ட
உன் நினைவில் நான்
உன் வரவை எதிர்நோக்கி

புன்னகை

அன்னையின் அன்புப் புன்னகை
தந்தையின் கண்டிப்புப் புன்னகை
சகோதரியின் பாசப் புன்னகை
காதலர்களின் குறும்புப் புன்னகை
நண்பனின் ஆதரவுப் புன்னகை
கணவன் மனைவியின் உரிமைப் புன்னகை
பணக்காரனின் கர்வப் புன்னகை
ஏழையின் இயலாமைப் புன்னகை
வெற்றி பெற்றவனின் தன்னம்பிக்கைப் புன்னகை
தோல்வி அடைந்தவனின் சோகப் புன்னகை
ஞாநியின் அர்த்தமானப் புன்னகை

ஏனோ இத்தனை புன்னகை இருந்தும்
நம்மை கவர்வது அர்த்தமே இல்லாத
கள்ளம் கபடம் இல்லாத
குழந்தையின் புன்னகையே

எனது தோட்டத்தில் மயில்

முதன்முறையாக அமைந்தது ஒரு மயிலின் வருகை
எனது தோட்டத்தில்

எனக்காக தோகை விரித்து ஆடியபடி மயில்
அதன் அழகில் மயங்கியபடி நான்
மனதின் ஓரத்தில் அதன் வருகை மீது சந்தேகம் தோன்ற
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

ஓர் நாள் அமைந்தது சொந்தங்களின் வருகை
எனது தோட்டத்தில்

அவர்களுக்காக தோகை விரித்து ஆடியபடி மயில்
மனதின் ஓரத்தில் பொறாமை தீ எரிய
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

சுற்றத்தினர் எல்லோரும் மயிலை புகழ
அவர்களின் அன்பில் மயில் திளைக்க
மனதின் ஓரத்தில் பிரிவின் பயம் எழ
பாராமுகமாய் நான்
சென்றது சிலகாலம் இப்படியே

எனது உணர்வுகள் அத்தனையும் ரசித்தபடி
என்னை மகிழ்விப்பது ஒன்றே வேலையாய்
தோகை விரித்து ஆடியபடியே மயில்

மெதுவாய் மயிலின் அருமை உணர்ந்தது மனது
அதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று தெளிந்தது
மனதில் அன்பு வழிய ,அதன் நலம் கருதி
இன்றும் பாராமுகமாய் நான்.

வரமே சாபமாய்

மூச்சிரைக்க ஓடிவந்தான் மன்னன்.
அவனால் கோபித்து கொள்ள முடியவில்லை அவளை.
என்ன செய்கிறாய் நம் மகனை என்றான்.
போக்குகிறேன் அவனது பயத்தை,
மாவீரனாவான் என்றால் அவனது
துணைவி தாய்மை பூரிப்புடன்.
துவண்டு போனான் காதலன்.
உரிமை கோருவானோ
ராஜ்ஜியத்தில் என்று.
முகம் அறிந்து மனம் உணர்ந்தவள் சொன்னால்
நாட்டில் அல்ல,பாசத்தில் என்று.
கண்ணீர் விட்டான் மன்னன்
மெதுவாய் தலை கோதி,
விரல் பிடித்து சொன்னால்
தெரிந்து தானே வந்தேன் என்று.
தெளிந்த மன்னன் ஆரத்தழுவினான் மகனை.
கனத்த மனதுடன் அரண்மணை
நோக்கி சென்றான்.
மெதுவாய் மகனை அனைத்தபடி
சென்றால் எதிர் திசையில் அவள்.

பெண்ணின் மனம்

நண்பர்களின் கவிநடையில் மனம் லயிக்க
நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை எழ
புலியை பார்த்து சூடு போட்ட பூனை
நிலை ஆகிடுமோ என்ற பயமும் எழ
பயத்தினை ஆசை வெல்ல
இதோ உங்கள் முன் நான்

பெண்ணின் மனம்

மங்கையவள் மனதை புண்படுத்தினால்
          என புலம்பும் மன்னவனே.
மங்கையின் மனதினை புண்படுத்திய
           நின் செயல் அறியாயோ.
தொட்டால் சிணுங்கி இவள் என தெரிந்திருந்தும்
          பல முறை தொட்டு விட்டு
சிணுங்குகிறாய் என புலம்புவதால் பயனேதுமுண்டோ.
       
        காரணம் கேட்கிறாயே,
அது கூட புரிந்து கொள்ள முடியாத அளவிலா
        உன் பிரியம்.
காரணம் அறிந்து,முரண்பாடுகள் களைந்து நீ வீசும்
         ஒளியின் விடியலுக்காய்
காத்திருக்கும் மங்கையின் மனம் அறியாயோ...

அழகோவியம்தூங்குகின்ற மகனை எழுப்பும் முயற்சியில் நான்.
அழகான ஓவியமாய் தூங்குகின்ற மகனை
நோக்குகையில் அன்பு பொங்க,
மெதுவாய் நெற்றியில் நான் முத்தமிட,
என் ஸ்பரிசத்தை உணர்ந்தவன்
கண் விழிக்காமல், இதழ் விரிக்கும்
அழகினுற்கு ஈடு உண்டோ இத்தரணிதனில்

மரணம்தூக்கம் தான் இதன்  ஒத்திகையோ
தவம் தான் இதன்  முன்னுரையோ
அறிந்திட்ட சித்தர்களும் மெளனம் காக்க
அறியாத பலபேர் விளக்கம் சொல்ல
குழப்பத்தில் எனது மனம்

சில மரணங்கள் மனம் கலங்கடிக்க
சில மரணங்கள் பயம் எழுப்ப
சில மரணங்கள் பாடம் புகட்ட

மரணபயத்தை மனம் ஆராய
காரணமாய் மன்னவனின் முகமும்,
மகனின் முகமும் கண்முன் விரிய
அவர்களுக்காய், அவர்களுடன் வாழும் ஆசை எழ
மரணத்தை பயத்துடனே பார்க்கும் பலபேரில்
ஒருத்தியாய் நான்

என் மகன்என் உலகத்து சூரியன் அவன்.
அவனை சுற்றியே எனது வாழ்க்கை.
அவனுக்காகவே எனது ஒவ்வொரு செயலும்.
ஒவ்வொரு நொடியும் அவனது
குறும்புகளை இரசித்தபடி,
வளர்ச்சியை வியந்தபடி,
செல்ல சண்டைகள் போட்டபடி,
கால கடிகாரம் நகர்கிறது மெதுவாய்.
வற்றாத சுனைநீராய் எனது அன்பு.
வார்த்தைகள் போதவில்லை சொல்ல,
செயல்களாலும் முடியவில்லை
முழுதாய் உணர்த்த.
மலைத்து நிற்கிறேன் செய்வது அறியாது.
கண்களில் வழியும் பாசத்தை உணர்ந்த மகனோ
அழகாய் புன்னகைக்க
அதில் மெய்மறந்தபடி நான்.

கொன்று விடு
கொன்று விடு மனதின் வெறுமைகளை
மனிதன் வாழ்வு சில நாளாம்
அதில் உணர்வுகள் தான் எத்தனை

எல்லாவற்றிக்கும் ஆசைப்பட்டு
எல்லா நிலையிலும் போராடி
நினைத்தது கிடைக்கும்பொழுது
எத்தனை வெறுமைதான் மனதினில்

மகிழ்ச்சியான தருணத்திலும் வெறுமை
இகழ்ச்சியான தருணத்திலும் வெறுமை
கவலையான தருணத்திலும் வெறுமை
வெறுமை கொல்ல வழியேதும் உண்டோ இப்பாரினிலே

தாமரை இலை தண்ணீர் போல
வாழ்ந்து என்ன பயன் இவ்வுலகினிலே

தெரியவில்லை எல்லாம் முழுதாய் அனுபவிக்க
முயற்சித்தும் முடியவில்லை
இது வரமா சாபமா
அதுவும் தெரியவில்லை

வாழ்நாள் முழுதும்
வழிகாட்டும் குருவிற்காக ஏங்கியபடி
என் பயணம்....................

குழந்தை பருவம்எதுவும் அறியா பருவம்.
மழலை மொழியால் கவரும் பருவம்.
முதன்முறையாய் எல்லாம் பயிலும் பருவம்.
மகிழ்விப்பதற்காகவே இந்த பருவம்.
எல்லோரும் விரும்பும் பருவம்.
தாயின் துணையுடன் உலகை ரசிக்கும் பருவம்.
எல்லா குறும்புகளும் ரசிக்கப்படும் பருவம்.
எல்லா தவறுகளும் மன்னிக்கப்படும் பருவம்.
எனது குழந்தை பருவத்தை புகைப்படத்தில் ரசித்தபடி.
மகனுக்காக அவனது புகைப்படத்தை சேர்த்தபடி நான்.

முதுமை பருவம்
அன்பிற்காக ஏங்கியபடி,
குழந்தைகளின் அலைப்பேசிக்காக காத்திருந்தபடி,
பேரப்பிள்ளைகளின் வருகைக்காக தவமிருந்தபடி,
அர்த்தம் தெரியாமல் வாழ்ந்த
வாழ்க்கையை அசைப்போட்டப்படி,
வெள்ளை முடியின் கம்பீரத்தை ரசித்தப்படி,
இளமையின் வேகத்தில் ஓடும் மனிதர்களை
பார்த்து மெளனமாக புன்னகைத்தபடி,
சுருங்கிய தோல்களை,தளர்ந்த நடையை
பார்த்து இது தான்தானா என்று வியந்தபடி,
கேட்பார் யாருமில்லை எனத்தெரிந்தும்
அறிவுரை வழங்கியபடி,
ஆசைகளை அடக்கியபடி.......
மரணத்தை எதிர்பார்த்தபடி...........

அவள் இவள்

அவள் இதமான தென்றல்
இவள்  அழகான சூறாவளி

அவள் அமைதியான நதி
இவள் காட்டாற்று வெள்ளம்

அவள் கோபத்தையே அறியாதவள்
இவள் கோபத்தையே சுவாசிப்பவள்

அவள் எதையும் நம்புபவள்
இவள் எதையும் சந்தேகிப்பவள்

அவள் அன்பு இதமான மழை
இவள் அன்பு புயல் மழை

அவளிடம் தாயின் பொறுமை
இவளிடம் குழந்தையின் பிடிவாதம்

அவளின் கோபத்திலும் மென்மை இருக்கும்
இவளின் அன்பிலும் வன்மை இருக்கும்

அவள் தோல் கூட இனிக்கும் மாங்கனி
இவள் முள் கொண்ட அன்னாச்சி

அவள் கைப்பிடித்து இவள்
இருவரும் இணை பிரியா தோழிகள்

என் தோழியின் மகனே

என் தோழியை மீளாத் துயரில் ஆழ்த்தி
காலனிடம் சென்ற பூந்தளிரே...................
ஐயிரண்டு திங்கள் மட்டுமா, ஐயிரண்டு வருடங்கள்
தயாராக இருந்தாலே,உன்னை சுமக்க..........
ஏன் அவசரப்பட்டாய் தங்கமே.......

தலைக்கருவை இழப்பதன் வலி
மரணம் வரை துணைவருமே.......
எத்தனை கனவுகள்
சுமந்திருப்பாள் மனதினில்
அத்தனையும் கானல்நீராக்கி
ஏன் பிரிந்தாய் செல்லமே.....

கண்ணீரால் உள்ளத்துயர் அவள் கரைக்க
சொந்தங்கள் செய்வதறியாது சுற்றி நிற்க
காலங்கள் பல உருண்டோட......
இன்று மற்றவர்களுக்காக அவள் புன்னகைக்க.....
துயர் உணர்ந்த நான் அவளின் கைப்பிடித்தபடி.....

முகமூடி மனிதர்கள்
கோமாளியின் முகமூடிக்கு பின்
இருக்கும் ஆழ்ந்த சோகம்
தைரியசாலிகளின் முகமூடிக்கு பின்
இருக்கும் நம்பமுடியாத கோழைத்தனம்
கோழைகளின் முகமூடிக்கு பின்
இருக்கும் வியப்பில் ஆழ்த்தும் தைரியம்
நல்லவர்கள் முகமூடிக்கு பின்
இருக்கும் ஒரு அருவருப்பான முகம்
கெட்டவர்கள் முகமூடிக்கு பின்
இருக்கும் ஒரு அழகான முகம்
சுயம் காட்ட இயலாத முகமூடி மனிதர்கள்
சாத்தியமா  முகமூடி  இல்லாத வாழ்க்கை
மிக சிலரிடம் சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம்
முக மூடியே வாழ்க்கை ஆனதால்...........
அடையாளம் தெரிவதில்லை அவர்களை
முகமூடி இல்லாமல்

புத்தியும் மனமும்


மனம் எங்கு சென்றாலும்
புத்தியும் சென்றது
பாதுகாப்பிற்காக............

சில இடங்களில் தனியாக
செல்ல விரும்பியது மனது.
கடும் எதிர்ப்பு புத்தியிடமிருந்து

புத்தி செய்த எச்சரிக்கையை
மீறி சென்றது மனம்........
கவச குண்டலம் இல்லாத கர்ணன்
நிலமை ஆனது மனதிற்கு…........

குற்றுயிரும் குலை உயிருமாய்
மனம் வந்தது திரும்பி........
மனதை மெதுவாய் தேற்றியது புத்தி

 இன்று புத்தி எனும் ஆமைகூட்டில் மனம்
எதுவும் பாதிக்காமல்......
எதையும் சிந்திக்காமல்..........
எதற்கும் கவலைபடாமல்.......
பாதுகாப்பாய்...........

மகனின் முதல் ஸ்பரிசம்

 

ஒவ்வொரு செல்களிலும் சந்தோசம்
மனதில் பொங்கி இதழ்களில் வழிகிறது.
மகிழ்ச்சி மட்டுமே என்னை சுற்றி
தேடுகின்றன கண்கள் பரபரப்பாய்......
ரோஜா மலரை துணியில் சுற்றியது
போல் என் மகன்.....அம்மாவின் கைகளில்

மெதுவாய் கைகளில் ஏந்துகிறேன் பூபோல
உலகத்தின் மொத்த சந்தோசமும் கைகளில்
வந்தது போன்ற உணர்வு மனதில்.......
அவனது கைவிரல்களை தடவுகிறேன் மெல்ல
மேகத்தை தொட்ட சிலிர்ப்பு என்னுள்....

என்னுள் அணுஅணுவாய் செதுக்கப்பட்டவன்
பத்து மாதங்களின் தவம் அவன்.......
கண் விழித்து எனைப் பார்க்க
என்னையே மறந்த நிலை எனக்கு

அவன் அழுகுரலே இசையானது.....
அவன் சிரிப்பே சொர்க்கமானது.........
அவன் அசைவுகளே உலக அதிசயமானது......
அவனே என் உலகமாகிறான்.