Wednesday, June 26, 2013

கருணை புரியகரைசேரயிலாது எனத் தெரிந்தும்
மூழ்காமலிருக்க இயலவில்லை

வற்றிய குளத்தில் வனாந்தரத்தில்
வறண்ட தொண்டைக்குள் சிக்கி
வார்த்தைகள் தற்கொலை செய்ய
கண்ணீரால் கருணைமனு போட்ட
காலம் இன்னும் மறக்கவில்லை.

ஒரு சொட்டிற்கான ஏக்கம் தவிர்க்க
கடலை கண்முன் நிறுத்திய
கருணை புரிய..........

மூழ்காமலிருக்க இயலவில்லை
கரை சேரும் எண்ணமுமில்லை.

ஒழுகிய அன்புஓங்கிய குரலில்
ஒடுங்கிய பாசம்
ஒழுகிய அன்பில்
ஒய்யாரமாக பூக்க,

ஓயாத காலச்சக்கரத்தில்
ஒடிந்த மனம்
ஒவ்வொரு துளியன்பையும்
ஒட்டுமொத்தமாக நிரப்பிக்கொள்கிறது
ஓய்வேயில்லாமல் இதயக்கூட்டில்.......
 
 

தொலைத்த கவிதைதொலைத்த கவிதையில்
சிதறிய வார்த்தைகளை
நினைவுக்குள் சிறையெடுக்க முயல
சிக்காத வண்ணத்துப் பூச்சியாக
கை நழுவி காணாமல் போகிறது.........

தடயங்கள் தேடி கண்கள் பரபரக்க
வெள்ளைத்தாள்களின் வெறுமையை
நிரப்பிக் கொள்கிறது மனம்.

கணத்த இதயத்தின் பாரம் நீக்க
புதிய எழுத்துக்கள் கொண்டு
தொலைத்த கவிதையை மீட்டு
எடுக்க முயல்கிறேன் மெதுவாக.....

சமாதானமாகத மனம்
சத்தியாகிரகம் செய்கிறது
தொலைத்த எழுத்துக்களை வேண்டி......

மீட்டெடுக்கும் நம்பிக்கையுடன்
தேடல்கள் தொடர்கின்றன அனுதினமும்

எங்க வீட்டுப் பெரிய மனுசனுங்க
இவங்க இரண்டு பேரைப் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகனும். ஸங்கீத் ராஜ், ஃபென்னி..... எங்க வீட்டுப் பெரிய மனுசனுங்க. ஸ்ங்கீத் என்னோட பையன். மிகவும் அமைதியானவன் ஃபென்னி தங்கையின் பையன். சரியான இரட்டை வாலு . இரண்டு பேருக்கும் வெறும் 6 மாதம் தான் வயது வித்தியாசம். ரெண்டு பேரும் பயங்கர பாசக்கார பயலுகனு நாம நினைக்கிறதுகுள்ள பாகிஸ்தான், இந்தியா மாதிரி சண்டை போட்டுக்குவாங்க. அடுத்த நிமிடம் அன்பு மழையா
பொழிஞ்சுகுவாங்க. இவங்க ஏரியாக்குள்ள எங்க யாருக்கும் “நோ எண்டரி” தான்.

ஃபென்னி மேல எப்போதும் ஒரு தனிப்பாசம் பொங்கி வரும் உள்ளே. நான் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குப் போன போது அவன் 6 மாதக் குழந்தை. என்னிடமே தான் இருந்தான். முதன் முதலில் அவன் “அம்மா” என்றதும் என்னைத்தான். மேலும் என்னுடைய அத்தனை வால்த்தனங்களும் அவனிடம் உண்டு.. அதற்கும் மேல் என்னை அறிவாளினு எங்க வீட்ல ஒத்துக்கர ஒரே ஆள் அவன் தான்.

இவங்க இரண்டு பேரும் பிறந்த பிறகு எங்க பேச்சுக்கள் அத்துணையும் இவங்கள சுத்தியே இருக்கும்.
”ஸ்ங்கீத்துக்கு கீழ் பல்லு முளைச்சுடுச்சு வனி,” நான்
“ஃபென்னிக்கு மேல தான் பல்லு முளைச்சுது அனி” என் தங்கை
”ஸ்ங்கீத்துக்கு ஆப்பிள் வேக வைச்சு குடு, நல்லதாம் உடம்புக்கு, ஃபென்னி சாப்பிடறான்” வனி
“சரி குடுக்கரேன் வனிக்குட்டி” நான்
நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டு இருப்போம் இந்த வாண்டுகளைப் பத்தி.

நான் மும்பையில் இருந்ததால் வருடம் ஒரு முறை தான் ஃபென்னிக்குட்டியை பார்க்க முடியும். ஆனாலும் ஃபென்னி,ஸ்ங்கீத் ரெண்டு பேருக்குள்ளும் இருக்கும் பாசம் மிக மிக அடர்த்தியானது.

இப்பொழுது ஊருக்கு போனால் இரண்டு பேரும் எங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஒரே ஆட்டமா இருக்கும். பெரிய மனுசங்க மாதிரி இரண்டு பேரும் நடந்துக்கரதைப் பார்த்து நாங்க கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.

இவங்க புராணம் சொல்ல ஆரம்பித்தால் சிந்துபாத் கதை மாதிரி நீண்டுகொண்டே போகும். இருவரும் வளர்ந்து வருவதை பெருமிதத்துடன் பார்த்து, இரசித்தபடியே நாட்கள் நகருகின்றன.

மலரும் நினைவுகள்படித்துக் கொண்டிருந்த ஸங்கீத் “அம்மா, நேத்து ஒரு ஸ்வீட் கனவு வந்துச்சு” என்று சொல்ல, நானும் மோகனும் அவனை நோக்கினோம்.
“என்னடா குட்டி கனவு” என்றேன்.
“நான் வானத்தில பறந்தேன்மா” ஸங்கீத்
“அப்படியா தங்கம்,சூப்பர் “என்றேன்
“அங்க என்ன பார்த்த குட்டி” மோகன்
“பறவை மாதிரி பறந்தேன் நான்,அம்மாவை பார்த்தேனே” ஸங்கீத்
இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் மென்று விழுங்கினோம்.
“சரிடா குட்டி,முதல்ல ஹோம்வொர்க் முடி” என்றேன்
“அம்மா, நீ என்ன கனவு கண்ட நேத்து” ஸங்கீத்
“நேத்து நானும் பறந்தேன் வானத்துல....உன்ன கூட பார்த்தேனே, நீ அப்பாவை பார்த்தாயா” என்றேன்.
“இல்லமா, எங்க இருந்தார் அப்பா” ஸங்கீத்.
“சரிடா தங்கம் முதல்ல ஹோம்வொர்க் முடி” என்றேன்.

பேசாமல் படிக்க ஆரம்பித்த மகனை பார்க்க பார்கக மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. அவனின் கற்பனைகளுக்கு சமாதி கட்டிவிட்ட என்மீதே கோபம் வந்தது.

அவன் வயதில் இருந்த போது நான் புனைந்த கதைகளைப் வீட்டில் அனைவரும் மிக பொறுமையாக கேட்டு இரசிப்பார்கள். அந்தப் பொறுமை எங்கே போனது இப்போது.
இத்தனை படிப்பு சுமை இருந்ததாக கூட நியாபகம் இல்லை. படிப்பு வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்தது. இன்று படிப்பு மட்டுமே வாழ்க்கையாகி போனது.
படிப்பு கற்றுக் கொடுத்தது என்று பார்த்தால்......நாலு வார்த்தை ஆங்கிலம், வெளிநாட்டு கம்பெனியில் வேலையாளாக வாழ்நாளை கழிக்க கற்றதைத் தவிர பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் இலட்சியமாக மாறியதை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தாலும் நிசர்சனமான உண்மையாக நம் கண் முன் நிற்கிறது.
படிப்பு ஏன் பண்பைக் கற்றுத் தரவில்லை. வாழ்க்கையை வாழக் கற்றுத் தரவில்லை. பகுத்தறியும் குணம் படிக்காதவர்களிடமே மேலோங்கி இருக்கிறது. படிப்பு சுயநலத்தையும்,அகங்காரத்தை மட்டுமே கற்றுத் தருகிறதோ????

மெதுவாக அருகில் சென்று “நாய்க்குட்டி,அப்புறம் என்ன பார்த்த கனவுல” என்றேன். அவன் முகத்தில் 1000 வாட்ஸ் மகிழ்ச்சி மின்ன ஆரம்பித்தது.
“பறவைகள் எல்லாம் பக்கத்துல பறந்ததுமா” ஸங்கீத்
“பறவைகள் பேசுச்சா குட்டி”

“ஆமாம்மா, பாட்டு கூடா பாடுச்சு” ஸங்கீத்
“நானும் உங்க ரெண்டு பேரை பார்த்து கை அசைச்சேன் தெரியுமா” மோகன்

எங்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது.. மூடி வைக்கப்பட்ட கணித புத்தகம் பார்வையாளனாக அமைதியாக இருந்தது.. ஸங்கீத்தின் பேச்சிலும்,முகத்திலும் தெரித்த மகிழ்ச்சி வீடு முழுவதும் ஆக்ரமித்து சிரிப்பு அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. வாழ்க்கை மற்றுமொரு பாடத்தை அன்று அழகாக விளக்கிச் சென்றது.