Monday, January 30, 2012

மனமெனும் மாயமான்பிடிக்க நினைத்தால்  ஓடுகிறது
அமைதியாய் இருந்தால் நர்த்தனமாடுகிறது முன்னால்.


 மலராய் மலர்கையில் முள்ளாய் இடறுகிறது
முள்ளாய் உறுமாறினால் மலராய் பூக்கிறது.


அடங்காதென நினைத்தால் அடக்கமாய் சிரிக்கிறது

அடக்கிவிட எத்தனிக்க காட்டாற்று வெள்ளமென சீறுகிறது


சோர்ந்து துவள்கையில் மீட்டெடுக்கும் தோழனாகிறது
வெற்றிக்களிப்பில் ஆடுகையில் பிடறிதட்டும் எதிரியாகிறது


சந்தோஷ எக்களிப்பில் நிரந்தரமில்லையென சிரிக்கிறது
சோகத்தில் மூழ்குகையில் கடந்து போகுமென கைகொடுக்கிறது.

 எண்ணங்களால் எனை மூழ்கடித்து
சுயமெனும் முத்தெடுக்க தூண்டுகிறது.


இதுவல்ல நானென்று உணர்த்தி
ஓடவைக்கிறது எதையோ சாதிக்க
திராவகம் ஊற்றிய மனம்.


ஓடிக் களைத்து ஏதோ சாதித்த
திருப்தியில் நிமிர்கையில்
தொடங்கிய இடத்திலேயே நான்…….


தாயுமானவன்


கடலில் கரைகாணாது தவித்தவளுக்கு
கலங்கரை விளக்காய் இருப்பவனே……

விதையாய் இருந்த என்னை
மரமாக்கி வேராய் தாங்குபவனே……..

எல்லா முயற்ச்சிகளுக்கும் நம்பிக்கை
நீரூற்றி வளர்ப்பவனே…………………………………………

புள்ளிகள் வைத்து வழிகாட்டி
கோலமிடும் அழகை இரசிப்பவனே…….

நல்ல எண்ணங்களை விதைத்து
அடைகாக்கும் பண்பாளனே……….

சுகமோ,துக்கமோ தோள் கொடுத்து
ஆறுதல் மொழி கூறுபவனே……….

சுகமான சுமையாக மனதுள் கருவாய்
எனைச் சுமக்கும் தாயுமானவனே……

ஒற்றைக் கண் அசைவில் மனம்
உணரும் மர்மம் புரிந்தவனே……….

முட்களாய் கீறினாலும்
மலரை மட்டும் இரசிப்பவனே…..

சொன்னது கடுகளவு
சொல்லாதது கடலளவு

தொடர்கதையாய் நீள்கிறது
உன்மேல் கொண்ட நேசம்

நீ காட்டும் அன்பில் நனைந்த படி
உன் விரல் பிடித்து நடக்கும் குழந்தையாய் நான்.

Sunday, January 29, 2012

காத்திருக்கிறேன்


விதையாய் புதைகிறேன்
மரமாகும் வேட்கையோடு.

மழைத்துளியாய் வீழ்கிறேன்
கடலாகும் நம்பிக்கையோடு.

மண்ணாய் படர்கிறேன்
கோட்டையாகும் கனவோடு.

காற்றாய் வீசுகிறேன்
இசையாகும் ஏக்கத்தோடு.

எழுத்துக்களாய் தவமிருக்கிறேன்
கவிதையெனும் வரமாக.

எண்ணங்களாய் வியாப்பிக்கிறேன்
சூழ்நிலையாகும் ஆவலோடு.

வர்ணங்களாய் எழுகிறேன்
ஓவியமாகும் ஆசையோடு.

கனவுகளாய் காத்திருக்கிறேன்
நினைவாகும் கனவோடு…………………………………

உனக்காக


முன்பே பிறந்து எனக்காய்

காத்திருந்தவனே………………………..

வாழ்க்கைப் பயணத்தில்

எல்லாமுமாய் இருந்தவனே……..

சுகமான சுமையாய் மனதில்

எனைச் சுமந்தவனே………………….

உனக்கானதையும் எனக்காக

விட்டுக் கொடுத்தவனே……..

உன் அரவணைப்பில் கர்ப்பத்திலிருக்கும்

பாதுகாப்பை உணரவைத்தவனே……….

எனக்காய் நீ தந்த சுகங்கள் அனைத்தையும்

இருமடங்காய் உனக்களிக்க

உனக்கு முன்னே சென்று

காத்திருக்கிறேன்…………..

ஆருயிரே……….

மணாளனாய் உன் கைப்பிடிக்க

Saturday, January 21, 2012

கிறுக்கல்கள் : கடலெனும் போதிமரம்”கடல் என்ற வார்த்தையே மனதில் இருக்கும் குழந்தைதனத்தை  தட்டி எழுப்பியது. அதுவும் கடற்கரையில் நிரம்பி இருக்கும் மனிதர்களை பார்க்கும் போது அவர்களின் குழந்தைத்தனம் மட்டுமே மேலோங்கி தெரிந்தது.

குழந்தைகளுக்காக அலையில் கால் நனைத்து தாங்களே குழந்தையாய் மாறிப் போன பெற்றோர்கள், மணலில் வீடு கட்டி விளையாடும் குழந்தைகள், கண்ணுக்கு தெரியும் தூரம் வரை தண்ணீர், அலைகளின் ஓசை, மனதிற்குள் இனம் புரியாத ஒரு நிம்மதியை தந்தது.

கையில் செருப்பை எடுத்துக் கொண்டு,கால்கள் மணலில் புதைய நடந்த போது சிறகடித்துப் பறந்தது மனம்.எத்தனையோ நாள் கனவு கடலில் கால் நனைப்பது.

சின்ன வயதில் வாய்க்காலில் விளையாடும் போதும், ஓடையில் கால் நனைக்கும் பொழுதும் எழும் கடல் பற்றிய கற்பனையை அடக்க முடியாது.

கடல் பற்றி தாத்தா சொல்லும் போது வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அடர்த்தியானது.

கல்கியின் ”பொன்னியின் செல்வன்”  கடலின் மீது இருந்த காதலை அதிகரித்தது. பூங்குழலியின் கடல் பயணம் பிரமிப்பை உண்டாக்கியது. கனவில் பூங்குழலியாய் கடல் பயணம் நிறைய செய்ததுண்டு.

கால்கள் வலிக்க நடந்து விட்டு மணலில் அமர்ந்த போது இயற்கை தாயின் அரவணைப்பில் இருப்பது போன்று எண்ணம்.

இயற்கையின் அதிசயங்கள் பிரமிக்க வைக்கின்றன. மனதை கடலோடு இரு விசயங்களுக்காக ஒப்பிட தோன்றியது.

அலைகள் என்பது கடலின் இயல்பு போல மனதின் இயல்பு தான் ஆசை,கோபம்,அன்பு,பொறாமை,பயம் போன்ற எண்ணங்கள். அடக்க முயலாமல் அனுபவித்து வாழ்வோம். எல்லா எண்ணங்களையும் அனுபவிப்போம்.கோபத்தை ,பயத்தை முழுதாய் அனுபவித்த பிறகு ஆராய்ந்தால் அவை நீங்கும் போது அன்பு எனும் மிகப் பெரிய ஆற்றலை நம்முள் விதைத்து சென்று இருக்கும்.

மனதின் ஓரமாக நின்று பார்த்தால் அலைகள் போல நமது எண்ணங்கள் ஓயாமல் ஓசை எழுப்பி கொண்டு தான் இருக்கும். மனதின் உள்ளே சென்றால் ஆழ்கடலின் அமைதியை அனுபவிக்கலாம்.

அலைகளில் நனைய,நனைய, மனதில் எழும் அத்துனை எண்ணங்களையும் அவைகள் தங்களோடு எடுத்து சென்று விட தெளிந்த நீரோடை போல் அமைதியாய் நான்.


Monday, January 16, 2012

உன்னுள் நான்


என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

உன் கண்களுக்குள் நிறைந்திருக்கும் பிம்பமாகவா.....
உன் கண்ணீரில் வழிந்தோடும் நிஜமாகவா.....

உன் இதயச் சோலையை நனைக்கும்
அன்பெனும் மழையாகவா......
மலர்களை கொய்தெறியும் சூறை காற்றாகவா.......

என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

உன் மனப்பூக்களை
சுடு சொற்களால் துவம்சிக்கும் புயலாகவா.....
ஆறுதல் மொழி பேசும் தென்றலாகவா.....

உன் வாழ்க்கை நிலத்தை
மேம்படுத்தும்  உரமாகவா.....
வளம் கொல்லும் திராவகமாகவா....

என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

வாழ்க்கையைத்  தடம் மாற்றிப் போடும்
சூழ்நிலைகளை கையாளும் அறிவாளியாகவா...
சூழ்நிலை கைதியாகும் முட்டாளாகவா...

உன்னை கைப்பிடித்து அழைத்துச்
செல்லும் அன்னையாகவா......
உன் கரம் பிடித்துச் செல்லும்
பிள்ளையாகவா.....................

என்னவாய் இருக்கிறேன் நான் ! உன்னுள்
என்னவாய் இருக்கிறேன் நான்.

எதுவாகினும் நினைவில்
நிற்பதே நிம்மதி.


உணர்ச்சிகளின் உறுமாற்றம்


வெள்ளை நிறம் ஒன்று இச்சைப்பட்டது
வர்ணம் பூச.......................................................

அங்கே பச்சை கிளி ஒன்று பறந்து வந்து
கொஞ்சும் மொழி பேச,
சொக்கி விட்டது அந்நிறத்தில்.

கிளி பறந்த பின் நீர்த்துவிட்டது
பச்சை நிறத்தின் மீதான தாகம்.

கண்ணில் பட்டது இம்முறை நீலவானம்
நீல வர்ணத்தில் லயித்திருக்க,
நிறமற்ற வானம் நீலமாய் தெரியும் உண்மைபுரிய
கண்கள் மூடியுது வெள்ளை நிறம்.

ஒரு நொடி வானவில்லும் வந்து மறைய
வர்ண ஜாலங்களில் மயங்கியது சில நிமிடம்.
மறைந்த வர்ணங்கள் மறந்து போக
மயக்கம் தெளிந்தது  வெள்ளை நிறம்.

கடந்து போன வண்ணத்துப் பூச்சி கவனம் ஈர்க்க
கலவையான வர்ணங்கள் எண்ணம் நிறைக்க
தனித்தன்மை இல்லாதது புத்தியில் உறைக்க....

இருளுக்குள் இல்லாத நிறங்களை
ஒளி உமிழும் உண்மைபுரிய

வர்ணத்தின் மேல் கொண்ட
இச்சை விட்டது வெள்ளை நிறம்.

Thursday, January 5, 2012

வரமாகிய மகன்பத்து மாதம் கர்ப்பத்தில் சுமந்து
இன்றுவரை நெஞ்சினில் சுமக்கும்
சுகமான சுமை அவன்

அவன் கண்ணசைவில் பம்பரமாய்
சுற்றுகிறது என் உலகம்

எங்களது சண்டைகளை விசாரித்து
ஒருதலைப் பட்சமாய் தீர்ப்பெழுதும்
எனது நீதிபதியும் அவன்தான்

எனது தவறுகளுக்காய் வாதாடும்
பணம் வாங்காத வக்கீலும் அவன்தான்

எனது குழந்தைதனத்தை மீட்டுக் கொடுத்த
தேவனும் அவன்தான்

எனை அன்பெனும் உருவமாய் செதுக்கும்
அழகான சிற்பியும் அவனேதான்

அவனுக்காகவே மலர்ந்து,மறையும்
மலராய் என் வாழ்க்கைWednesday, January 4, 2012

பிரபஞ்ச வலம்அழகாய்  சிறகுகள் முளைக்க
மெதுவாய் பறக்கிறேன் நான்

காடு கடந்து,மலை தாண்டி
எல்லாம் இரசித்த வண்ணம்
இனிதாய் ஒரு பயணம்.

அன்பெனும் மழையை பொழிந்த வண்ணம்
கோப வெறுப்பு மேகங்களை விலக்கிய படி
மிதக்கிறேன் வானத்தில்.

என் சிறகசைப்பிற்கு காற்றும் இசையமைக்க,
பறவைகள் கீதம் பாட
இரசித்தபடி நான்.

புருவ அசைவிற்கு மழையும் நடனமாட
மயிலும் சேர்ந்தே ஆட
மகிழ்ச்சியில் நான்.

என்னை மகிழ்விக்க வானவில்லும் வந்து சேர
வர்ணங்களை என்னுள்ளே வாங்கிக் கொண்டு
பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கறேன்.
தேவேந்திரனை மிரட்டுகிறேன்
அமுதத்தை அனைவருக்கும் பங்கிட சொல்லி

பிரம்மனுக்கு ஆணையிடுகிறேன்
ஊனமுள்ளவர்களை படைக்க கூடாது என்று

விஷ்னுவிற்கு கட்டளையிடுகிறேன்
யுத்தங்கள் இல்லாத பூமி வேண்டுமென்று

சிவனுக்கு உத்தரவிடுகிறேன்
நூறு வயது வரை யாருக்கும் சாவே கூடாதென்று

மெல்ல தேவலோகம் தாண்டி எமலோகம் பறக்கிறேன்

எமன் வந்து மண்டியிடுகிறான் என்முன்னே
எல்லோருடைய பாவங்களையும் மன்னித்துவிடு என்றேன்
சிரம் தாழ்த்தி உத்தரவு என்றான்.

பிரபஞ்சம் முழுதும் இரசித்துவிட்டு
பூமி வருகிறேன்

பஞ்ச பூதங்கள் அமைதியாய் அருள் புரிய
எங்கும் இயற்கை எழில் கொஞ்ச
துக்கமே இல்லாத மனித இனம்....
சிறகுகள் நீக்கி கலக்கிறேன் அவர்களோடு.......
Tuesday, January 3, 2012

பேதை மனம்முத்தாவாய் என சிப்பிக்குள் நீராய்
உனை சேமிக்க
நீராவியாய் போன மாயமென்ன.

வெள்ளை  நிறமென நம்பியிருக்க
வஞ்சிப்பதேன்
நிமிடத்திற்கு நிமிடம் வர்ணம் மாறி.

எவ்விடத்தும் என்னவனாய் நீ இருப்பாய்
என நினைத்திருக்க
எல்லோருக்கும் எல்லாமுமாய் இருப்பதேன்.

உன் அத்துனை பிழைகளையும் தண்டிக்க
விரும்பினாலும்
மனம் மன்னிக்கவே துடிப்பதேன்.

உணர்ந்து வருவாயென
காத்திருக்கிறேன்
அமைதியாய்......
உனக்காக......


வண்ணத்துப் பூச்சி
பறந்து திரிந்த  வண்ணத்துப் பூச்சி ஒன்று
மரத்தின் மேல்  நம்பிக்கை  கூடுகட்ட
வைத்தது புத்தி எனும் வர்ணத்தை அடகாய்......

கூட்டைக் கட்டிய பெருமிதத்தில் மிதக்கையில்
கலைந்தது கூடு புயல் காற்றினால்......

கலைந்த கூடு வெறுமை ஊட்ட
மீண்டும் முனைந்தது  கூடுகட்ட
இம்முறை வைத்தது சுதந்திர வர்ணத்தை அடகாய்......

அழகாய் கட்டிய கூட்டில் அடி எடுத்து வைக்க
பெரும் மழையால் கூடு சிதைய...........

உடைந்த மனதுடன் இன்னுமோர் முயற்ச்சி
இம்முறை அடகு போனது சுயமரியாதை வர்ணம்....... 
    கட்டுவதும்.....கலைவதுமாய்
    போன வாழ்க்கையில்.........
    இனி
    அடகு வைக்க ஏதுமில்லாமல்
    வண்ணத்துப் பூச்சி
   

மரத்தின் தன்மை புரிய........
சட்டென ஏதோ உள்ளே உடைய
பட்டென பற்றைத் துறந்தது   வண்ணத்துப் பூச்சி
மரங்கள் நிறைந்த காடை விட்டு
விண் நோக்கிப் பறந்தது   வண்ணத்துப் பூச்சி
தன் அத்துணை நிறங்களையும் மீட்டுக் கொண்டு...........