Tuesday, July 31, 2012

ஒத்திகை



மெதுவாய் அழைத்த உன் குரல்
நரம்புகளில் நாதம் மீட்ட
கண்கள் உன் திசை தேட
வார்த்தைகள் தொண்டைக்குள்
சரணாகதியடைய, சிலையாய்
நிற்கிறேன் உன் எதிரில்.
 

எத்துணை ஒத்திகைகள் இதற்காக
அத்துணையும் தற்கொலை செய்து கொள்ள
முதல் சந்திப்பில் முற்றிலுமாய் பேச்சிழந்து
தோல்வி கண்ட வீரனாய் மண் நோக்குகிறேன்.


அருவி போல் கொட்டுகிறாய் கேள்விகளை
அத்துணையும் உள்வாங்கி சேமிக்கிறேன்
பிரிதொருநாளில் பதிலளிக்க.............
உன் ஒவ்வொரு அசைவையும்
தேக்கி வைக்கிறேன் விழிகளில்,
விழி பிதுங்கி கண்ணீராய் கொட்டுகிறது.
 

விடை பெறுகிறாய் வியப்புடனே
கண்ணீரின் காரணம் புரியாததால்,
தயாராகிறேன் நம் அடுத்த
சந்திப்பிற்கான ஒத்திகைக்கு

Monday, July 30, 2012

மெளன யுத்தம்



அறைமுழுவதும் அமைதியே ஆக்கிரமித்திருக்கிறது
அமைதியினால் ஆர்ப்பாட்டம் கொள்கிறது மனது
ஆர்ப்பாட்டக் குதிரையை அடக்க நினைக்க
பல வண்ண உணர்ச்சிகளைப் பூசிக் கொண்டு
ருத்ரதாண்டவம் ஆடுகிறது மனது.


தோல்வி கண்ட வீரனாய்
சரணடைகிறேன் மிச்சமில்லாமல்.
வெற்றிக் களிப்பில் வெறியாட்டம்
வேகத்துடன் அரங்கேறுகிறது.


போரிடும் எண்ணம் துறந்ததால்,
உணர்ச்சி வண்ணங்களில்
மூழ்கித் திளைக்கிறேன்.


காலடி ஓசை அறையின்
அமைதியை குலைக்க
ஆர்ப்பாட்ட மனது
அமைதியாகிறது. 

Thursday, July 26, 2012

பாசத்தின் அடிமை


கவிதைகளாய் விரல் வழி
கசியும் உன் மாசில்லா அன்பினை
துய்த்த பின் சொக்கித்தான்
போகிறேன் தேனுண்ட வண்டாய்.

என் சுதந்திரப் படகும்
தரைத்தட்டி நிற்கிறது
உன் பாசக் கடலில் அடிமையாய்.....

உன் பாதச்சுவடில்லாத பாதைகளும்
உன் வாசமில்லா பொருள்களும்
அந்நியமாகின்றன என்னிடத்தில்.

எதையோ தேடித் துவங்கிய
வாழ்க்கைத் தேடல் முற்றுப்பெறுகிறது
புதையலாய் நீ கிடைத்ததால்........

உன் கைப்பிடித்து


இரும்பை இழுக்கும் காந்தமாய்
வார்த்தைகள் அடிமையாக
ஊமையாகிறது மொழி
உன்னிடத்தில்.
 
கோபமெல்லாம் விரும்பியே
தற்கொலை செய்கிறது
உன் அருகாமையில்.

மடி மீது தலைசாய்த்து நீ
துயிலுகையில் இன்னொரு
தாயாகிறேன் உனக்கு

குழிகள் நிரப்பும் நீரைப்போல்
என் குறைகளை நிறைகளாக்கி
பட்டை தீட்டுகிறாய் என்னை.

கைகாட்டும் திசையில்
கைகோர்த்து பயணிக்கிறேன்
கண்களில் இலட்சிய கனவோடும்
மனதினில் நிறைந்த நம்பிக்கையோடும்.

ஒற்றைத் தீண்டலில்


கண்ணிமைக்கும் நேரத்தில்
உளம் புகுந்து உயிருருக வைக்கும்
வித்தையை எங்கே கற்றாய்

என் வெட்கத்தை
மொழி பெயர்த்து
மெளனத்தால்
கவிதையெழுதுகிறாய்


மெல்லிய அணைப்பில்
பூத்த பூக்களெல்லாம்
எட்டிப் பார்க்கிறது உனைக்காண
வியர்வைத்துளிகளாய்.

துளிகள் ஒவ்வொன்றும்
மோட்சம் பெறுகின்றன
உன் ஒற்றைத் தீண்டலில்.

மன்னிப்பாயா செல்ல மகளே


 
மன்னிப்பாயா செல்ல மகளே
ஜனனத்திற்கு முன்பே உனக்கு
மரணத்தைப் பரிசளிக்கப் போகும்
இந்தத் தாயை மன்னிப்பாயா.

கனவுகள் பல கண்டு
கருவினில் உனைச் சுமந்து
பூரித்து நிற்கையிலே,
மருத்துவரின் சொற்கள்
இடியாய் விழுந்தது செவிகளில்.

மூளை வளர்ச்சியற்ற கருவாதலால்
கலைத்துவிடுவதே உத்தமமாம்.

கற்பனையில் செதுக்கிய உன் முகம்
கண்முன்னே வந்து மறைய
கலங்கித்தான் நிற்கிறேன்.

மனதைக் கல்லாக்கி,
புத்தியின் சொல்கேட்டு
தலையசைத்தேன் சரியென்று.

உன் மரணத்திற்கு நாள்குறித்து
சொல்லுகையில் எல்லாம்
மரத்துப் போய் ஊமையானேன்.

என் செல்ல மகளே,
நாளை வரை என்னுள்
நீயிருக்க அனுமதியாம்.
வாழ்நாளெல்லாம் நெஞ்சில்
உனைச்சுமக்க யார் அனுமதியும்
தேவையில்லை கண்ணே.

உன்னுடனே என் உயிரும்
துணையாக வரத்துடிக்க,
உன் சகோதரனின் பிஞ்சுக்கரம்
என் முகம் வருட அவனுக்காய்
இப்பூமிதனில் வாழத் துணிந்தேன்.

உன் நலனுக்காய்
உன் உயிரை எமனுக்கு
தாரை வார்க்கும் என்னை
மன்னித்துக் கொள் செல்ல மகளே.......


 

மீட்க வருவாயா


உன்னுடனான வாழ்க்கை
தளிர் கனவாய் கலைந்திடுமா?
வைகறைக் கனவாய் உயிர்பெறுமா?

மண்கோட்டைதனை எழுப்பி
அலை வந்து கரைக்கையிலே
செய்வதறியாது விழித்திருக்க
இறுகணைத்து மாடமாளிகை
எழுப்பித்தந்தாய் எனக்காக....


மாளிகைதனிலே இறுமாந்து நானிருக்க
தனியே தவிக்கவிட்டு சென்றதேனோ?
கண்ணீரும் வற்றிப்போக,
வெறுமைதனை துணைகொண்டு
ஒற்றைப் பனைமரமாய்
காத்திருந்தேன் உனக்காக........

விடிவெள்ளியாய் வாழ்க்கைதனில்
மீண்டும் நீ நுழைந்தாய்.
அன்பை வார்த்து உயிர்பூ பூக்கவைத்தாய்.
பூக்களைத் தான் நான் கோர்த்து
மாலையோடு காத்திருக்க
மாயமாய் மறைந்ததென்ன......

உன் நினைவுகளே சிந்தனையில் நிறைந்திருக்க,
காணும் உருவமெல்லாம் நீயாய் காட்சிதர,
உன் பிரிவு என் பாதி உயிர் தின்ன
மீதி உயிர் போகுமுன்னே

மீண்டு வருவாயா?
மீண்டும் வருவாயா?
மீட்க வருவாயா?
மீளாத் துயரத்தில்
மீனாய்த் துடிக்கின்றேன்
கரையினிலே.......


 

வருவாயா


 
பள்ளம் நோக்கிப் பாயும் நதிபோல
உன்னைச் சுற்றியே வலம்
வருகின்றன என் சிந்தனைகள்.

நினைவுகளை மட்டுமே பரிசாய்
வாழ்க்கைப் பாதையில் விட்டுப்
போன உறவுகளுக்கிடையில்
எனக்காய் காத்திருக்கும் வரம் நீ.

முற்றுப் பெறாமலிருந்த வாழ்க்கை
முழுமையாவதை உணர்கிறேன்
உன் அருகாமையில்.........

உன் விழிதேடும் போது
வர இயலாமல் போனாலும்
துயரத்தில் தோள்கொடுக்கும்
முதல் ஆளாய் நானிருப்பேன்.

உன் நினைவுகளெனும் அமுதசுரபியால்
சாகாவரம் பெற்ற அன்போடு
புரிந்து கொள்வாயென மெளன
ஆடை பூண்கிறேன்.

விட்டில் பூச்சியாய் இரையாவாயா?
எல்லாம் தாண்டி என்னவனாய் வருவாயா?
விடைத் தெரியா வினாக்களோடு
காத்திருக்கிறேன் உனக்காக.........


 

மகனே உன்னால்


கருவினில் உன் அசைவினில்
வாழ்வதின் அர்த்தங்கள் புரியவைத்தாய்.

உன் சிரிப்பினில்,உன் மொழியினில்
உயிர்ப்பூ பூக்கவைத்தாய்.

உன் ஸ்பரிசத்தில்,உன் பிதற்றலில்
சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கவைத்தாய்.

“அம்மா” என்ற ஒற்றை அழைப்பினில்
உயிர்ப்போடு வாழவைத்தாய்.

துன்பத்தில் நான் தொலைந்திடும் வேளையிலே
அழகாய் எனை மீட்டெடுத்தாய்.

துகள்களாய் நொறுங்கிடும் தருணங்களில்
கோட்டைகள் எழுப்பித்தந்தாய்.

எல்லா நொடியிலும் உன் அன்பினால்
மனதை மலரவைக்கிறாய்.

விழலாகும் விழுது


பாதுகாக்க மகனில்லையென
ஊரார் உரைத்த போது,
அச்சனின் கழுத்தைக் கட்டியபடி
“நானிருப்பேன்” என்று தைரியம்
சொல்லமுடிந்தது பேதைப் பருவத்தில்....

உறுதுணையாய் இருக்கவேண்டுமென
உறுதி துளிர்விட்டது
மந்தணமாய் மனதினுள்...........

வாழ்க்கை நதியில் சிக்குண்டு
நிதர்சணங்கள் புரிபட
பார்வையாளனாய் நானிருக்க
நகர்கிறது வாழ்க்கை.

பெண் என்பதாலே
விழலாகும் விழுதானேனோ......
வீறு கொண்டு எழுவேனோ?
வீணாக மடிவேனோ?
வாழ்க்கையின் முன்
கேள்விக்குறியோடு நான்...........

வெறுமைப்படகை


மனதின் ஓரத்தில் நங்கூரம் போட்டு
அமர்ந்திருக்கும் வெறுமைப்படகை
வார்த்தை அலைகளால் அசைத்து
தள்ளிவிடப் முயல்கிறேன்.

அலைகளின் ஆட்டத்தில் அசைவதாய்
பாசாங்கு காட்டி விட்டு வெற்றிப்புன்னகை
சிந்துகிறது, இடத்தை விட்டு சிறிதும் அகலாமல்.

ஓய்ந்து போன அலைகள் தோல்வியை
ஏற்றுக் கொண்டு மெளனவிரதம் பூண்டன.
மெளனமே உணவாக வளர்ந்து முழுவதுமாய்
ஆக்கரமிக்கிறது மனதை வெறுமை.

சிறந்த மாலுமியாய் என்னுள் நீ வந்தாய்.
நங்கூரம் நீக்கும் வித்தை புரிபட
வாழ்க்கைப் பயணம் இனிதாய் தொடர்கிறது.

ஒற்றை ராகம்


 
தூரத்தில் இருந்து ஓர் ஒற்றை ராகம்
மெதுவாய் மனம் வருடிச் செல்கிறது.
தனிமையின் சுகத்தை மீட்டி
அழகாய் இசைக்கிறது...........

சுதந்திரக் காற்றை சுவாசிக்க
பயந்து ஒடுங்கிய மனம்,
மெதுவாய் தைரியம் கொண்டு
புயல் காற்றிலும் அழகாய்
பயணிக்கிறது.......

இலட்சிய மூட்டைகள் அவிழ்க்கப்பட்டு
அதற்கான பாதைகளில் விதைக்கப்படுகின்றன.
விதைகளின் வீரியத்தை பூத்துக் குலுங்கும்
மரங்கள் எதிர்காலத்தில் பறைசாற்றும்...........

உன்னைத் தேடியே

 
இன்று உன் முகம்
தேடியே அலைகிறது
பேதை மனது........

எங்கே உடைந்து
நொறுங்கினேன்
தெரியவில்லை.......

உடைந்த என்னை
உயிர்ப்பிக்கும்
சஞ்சீவி மலை நீ........

உன்னைக் கண்டதும்
மார்பில் முகம்புதைத்து
சோகங்களை கண்ணீரால்
கரைக்கவே ஏங்குகிறேன்......

என் வழிப்பாதையெங்கும்
உன் கால் தடத்தையே
துழாவுகின்றன கண்கள்......

மிக அருகில் நீ இருப்பதாய்
மனம் உணர உன்னைத்
தேடியே என் பயணம்.......

செல்லச் சண்டைகள்


கண்களில் காதலைத் தேக்கியபடி
மழைமேகமாய் அலைகிறேன்
உன் முகம் கண்டவுடன் பொழிய.

காட்டாற்று வெள்ளமாய் சீறும்
என் காதலில் நனைந்தபடி
கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறாய்.

எனக்காய் வாடி, கண்டதும் ஓடும்
உன் விளையாட்டில்
துவண்டு தான் போகிறேன்.

துவண்டு விழுமுன் நீள்கிறது
உன் கைகள் எனையேந்த.
செல்லக் கோபத்துடன்
உன்னுள் புதைகிறேன்.

சண்டைகளுக்கு பின்
வெறுப்பு வெளிநடப்பு செய்ய
அன்பு மட்டுமே மனதை ஆள
அன்பாய் தொடர்கிறது சண்டைகள்.

பயணம்

 
ஏதோ ஓர் இடத்தில்
உலகமே அந்நியப்படுகிறது.
எதற்கு என்ற கேள்வியால்
முற்றுப் புள்ளியாகிறது எல்லாம்.

ஏதோ ஒன்றைத் தேடிப் போகும்
மனதின் நெடுந்தூரப் பயணத்தில்
தனிமை மட்டுமே தோள் கொடுக்க
தவிக்கிறது தனியாய் ஆன்மா.

வார்த்தைகளாலும்,எழுத்துக்களாலும்
தனிமையை ஆராய முயல
கடலில் விழுந்த சிற்றெரும்பாய்
தத்தளிக்கிறது மனது.

ஆராய ஆராய கருமேகம் போல்
இருள் சூழ்கிறது உள்ளே.........
குருடன் போல் தடவியபடியே
நடக்கிறேன் நம்பிக்கையுடன்
வெளிச்சத்தை அடையவே...

வெற்றுப்படகாக


 
மணல் துகள்களாய் மனதில்
ஆங்காங்கே படர்ந்திருந்த
வெறுமை கூட்டணியமைத்து
குன்று போல குவிய
கரைக்க முயல்கிறேன்
கண்ணீரால்.............

கண்ணீர் துளிகளில் கரையாமல்
மேலும் அடர்த்தியாகிறது வெறுமை.

மனதை வெறுமை முழுதும்
ஆக்கரமிக்க தனிமை தேடுகிறேன்
உறவாகிறேன் தனிமையிடம் மட்டும்

தனிமையின் துணையுடன் என்னுள்
ஆழ்ந்து உள்ளிரங்க.......
பறக்கின்றன மணல் துகள்கள்
காற்றினில் சுவடுகளே இல்லாமல்.

தாமரை இலைத் தண்ணீராய்
மனமும் தனித்தன்மை பெற
வாழ்க்கைப் பயணத்தில்
முயற்சிக்கிறேன் வெற்றுப்படகாக......

நினைவுகளால் வாழ்கிறேன்


 
என்னுள் விருட்சமாய் விழுந்த
உன் நினைவுகள்
எனைதின்று வளர்ந்து
அழகாய் மிளிர்கிறது.

பேசும் பொழுதுகளில்
வியாபிக்கிறாய் முழுமையாய்,
பேசா பொழுதுகளிலும்
என்னுள் உயிர்த்திருக்கிறாய்
அழகான நினைவுகளாய்

உன் மூச்சுக்காற்றுக்கு என்
மனம் மலரும் இரகசியம்
புரியாமல் உருகுகிறேன்.
நரம்புகளை மீட்டி கீதம்
எழுப்புகிறாய் என்னுள்.

காதலால் கசிந்துருகி
நான் காணாமல் போய்
நீயே ஆக்கரமிக்கிறாய் என்னுள்

நான்


வெந்ததைத் தின்று
விதியிடம் மண்டியிட்டு
சுடு சொற்களுக்கு துவண்டு
சிறைப் பட்டு வாழும்
கூண்டுக் கிளியல்ல நான்.........

சிறைகள் உடைத்து
புது பாதையமைத்து
சிறகுகள் விரித்து
பறக்கும் பட்டாம்பூச்சி நான்......

மேகம் கீறும் மின்னலாய்
தடைகள் உடைத்து
வெற்றிப் பயணம் தொடரும்
விந்தையான தேரை நான்........

இல்லாததில் ஆரம்பித்து
இமயம் வரை வளரும்
அதிசய மலர்கொடி நான்......

வெட்ட வெட்ட துளிர்விட்டு
வானம் வரை கூரை அமைத்து
விழி உயர்த்த வைக்கும்
அபூர்வ பிறவி நான்...............


உன்னால்

 
 
உன் காதல் மொழி
செவி நுழைந்து
மனதை ஆக்ரமித்து
மகிழ்ச்சிப் பூ மலர

அடுத்த நொடி
கனல் போன்ற
உன் கோபப் பார்வை
அதைச் சுட்டுப் பொசுக்க

அந்தச் சாம்பலில் இருந்து
நம்பிக்கை பூ துளிர்விட
காத்திருக்கிறேன் உனக்காக

அருமை மகனே


 
வாழ்க்கை கீதத்தின்
இன்னிசையே

வருடங்கள் பல ஓடினாலும்
முதல் நாள் மலர் கொத்தாய்
என்கையில் நீ சிரித்தது தான்
கண்முன்னே விரிகிறது
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம்.

உலகமே தன் வண்ணத்தை மாற்றிக் கொண்டதும்
மனம் அன்பெனும் அமுதம் குடித்ததும்
உன் வருகைக்கு பிறகு தான், செல்லமே.

வாழ்விற்கு பொருள் தந்தவன் நீ.
என் வாழ்விற்கு அச்சாணி நீ.
உனக்காய் உயிர் வாழவும்
உனக்காய் உயிர் துறக்கவும்
என்றும் சம்மதமே ...........

வரமாய் நீ



தவங்கள் நீயிருந்து தருகிறாய் வரங்களை எனக்கு.
எனக்கான மலர்ப் பாதையமைக்க முட்களை
முத்தமிடுகிறது நின் பாதங்கள்...............


எனக்காய் நீ உழைக்க, அயல்நாடு செல்ல,
தனிமையில் சிக்குண்டு, நினைவுகளால் வதங்கிய
பேதை மனம், பொங்கும் அன்பைக் கூட
கோபக் கணைகளாகவே உன்னிடம் அனுப்புகிறது.


எதிர்ப்பில்லாமல் கணைகளைத் தாங்கி
மெளனமாய் அன்பினில் நீ நனைக்க
உடைந்து நொருங்குகிறேன்


தனிமையை துணைக்கமர்த்தி பயணந்தனை
துவங்குகையில், பாதங்கள் வருடும் மலர்களில்
உணர்கிறேன், உன் வியர்வையின் வாசத்தை.......


கண்ணீரோடு துழாவுகையில் எங்கோ தூரத்தில்
எனக்காக உழைத்தபடி நீ தெரிகிறாய் மங்கலாய்....... 





நீ வருவாயென



வாழ்க்கைச் சக்கரத்தின்
ஓட்டத்தில் எங்கேயோ
தொலைந்து போகிறேன்.
மீட்டெடுக்கிறாய் சேதமில்லாமல்..


நானே மறந்த கனவுகளுக்கும்,
சிதைந்த என் கனவுகளுக்கும்
உயிர் கொடுக்கிறாய் கடவுளாய்.....


கனவுச் சிறகுகள் உயிர்த்தெழ
பறக்கிறேன் விண்வெளியில்
எதையோ தேடி, எதையோ சாதிக்க....
நொடிப் பொழுதும் அயராமல்
விரைவாய் தொடர்கிறது பயணம்.


முடிவில்லாப் பயணத்தில்
கால் வைக்கிறேன்
மரண வாசலில்......................


கடந்து வந்த பாதையின்
அர்த்தங்கள் அறிந்தவுடன்
ஆர்ப்பாட்டங்கள் அடங்கி
அமைதியாகிறேன்........


மரண வாசலிலும் மனம்
உனையே தியானிக்க
வாழாத வாழ்க்கையை வாழ
எனை மீட்டெடுக்க நீ மீண்டும்
வருவாய் எனும் நம்பிக்கையோடு
புதைகிறேன் வாழ்க்கைச் சக்கரத்தில்.



மலரும் நினைவுகள் - 3


நம் குழந்தைகள் செய்யும் சில குறும்புகள் நம்மை பால்ய பருவத்திற்கு அழைத்துச் செல்லும். நாம் செய்த குறும்புகள்,வீரதீர செயல்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் செய்த கேணத்தனங்கள், மனதில் மலரும் போது நம்மையறியாமல் இதழ்களில் புன்னகை அழையா விருந்தாளியாய் வந்து அமர்ந்து கொள்ளும். நமது குழந்தைப் பருவத்தில் நெருக்கமாக இருந்த பலபேர் நம் நியாபகத்தில் இருந்து மறைந்தே போய் இருப்பார்கள். மீண்டும் அவர்களைச் சந்திக்கும் போது அவர்களின் பாசம் நிறைந்த கண்களும், உரிமையுடன் நம்மை அவர்கள் அழைத்துப் பேசும் விதமும் நமக்கு அவர்களின் அன்பை உணர்த்தும்.”இது நியாபகம் இருக்கா?, அது நியாபகம் இருக்கா? என்ற கேள்விகளுக்கு “இருக்குங்க” என்று பொய்யோ அல்லது மலுப்பலான புன்னகையையோ மட்டுமே பதிலாக  தந்து சமாளிக்க வேண்டி இருக்கும்.சில குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் கல்வெட்டாய் மனதில் பதிந்து விடும். அப்படிச் சில நிகழ்வுகளை இங்கே பதிகிறேன்.


“நானும் தைரியசாலி தான்”




““நானும் தைரியசாலி தான், நானும் தைரியசாலி தான்............” என்று வடிவேலு மாதிரி வாண்டடா வண்டியில ஏறினா தான் உண்டு. ஏன்னா நம்ம தைரியம் தான் ஊரறிந்த இரகசியமாயிற்றே..........


 “எங்க நம்ம தைரியசாலி அனிதா” என்று சொல்லி விட்டு அவர்கள் சிரிக்கும் நமட்டு சிரிப்பில் எதிரில் உள்ளவர்க்கு நம்ம தைரியம் புரிந்து போகும். ஒரு சின்ன முள் குத்தினா கூட நாம பண்ணர ஆர்ப்பாட்டம் தெரு முழுதும் கேட்கும். “யானைக்கு முள் குத்தி நடக்க முடியாம போயிடுச்சாம், யானைக்கே அப்படினா, நான் எம்மாத்திரம், போச்சு இனி மேல் என்னால் நடக்க முடியாது” என்று ஒரு சிறு முள் குத்தியதற்கு நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரைக் கூட்டியதை அவர்களால் மறக்கவே முடியவில்லையாம். எல்லோரும் சேர்ந்து செயற்குழு கூட்டி ”தைரியசாலி அனிதா” என்ற பட்டப் பேரை கொடுத்த பிறகு தான் நிம்மதியா தூங்கினாங்க.  அன்றிலிருந்து நம்ம தூக்கம் போச்சு......


யாருக்காவது பொழுது போகலைனா நம்ம தைரிய புராணப் படம் தான் ஓடும். நாங்களும் ஒரு காலத்துல தைரியமா தான் இருந்தோம். நம்ம தைரியத்துக்கு ஆப்பு வைச்ச பெருமை ஒரு நாயையே சேரும். பள்ளிக்கூடத்தில் மதிய நேரத்தில் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது தான் அந்த நாய் அருகில் வந்தது. வாலை ஆட்டிட்டே வந்துச்சா, நல்லவன்னு நம்பி இருந்த இரண்டு பிஸ்கட்ல ஒன்னைக் கொடுத்தேன். சீக்கரமா சாப்பிட்டு கையில இருந்த இன்னொரு பிஸ்கட்டை புடுங்க வந்த போது தான் அதோட புத்தியே புரிந்தது......குடுக்க மாட்டேனு நான் ஓட, விடாம அது துரத்த அங்க ஒரு நாடகமே நடந்துச்சு. அந்த களேபரத்துல நாய் என்னைக் கடித்து இரத்தம் வந்தது கூட தெரியலை எனக்கு. நாம யாரு....கடைசி வரை பிஸ்கட்டை நாய்க்கு குடுக்கவேயில்லை.

இரத்தத்தைப் பார்த்து அம்மா பயந்து போய் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் 14 ஊசி போட்டது எல்லாம் தனிக் கதை. அதிலிருந்து இரத்தம், ஊசினா கொஞ்சம் அலர்ஜி நம்மளுக்கு. நம்மள கிண்டல் பண்ண பெரிய ஆயுதம் கிடைச்ச மகிழ்ச்சி எல்லோருக்கும். 

அன்றைக்கு எல்லோருமே சோகமாக இருந்தார்கள். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்று விட்டார்களாம். பள்ளிகள் எல்லாம் விடுமுறை.......ஒரே சந்தோசத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். “அப்படியே இரத்தம் கொட்டுச்சாம், அப்புறம் செத்துப் போய்ட்டாங்கள்” என்று நேரில் பார்த்தது போல் கதை விட்டுக் கொண்டிருந்தான் ஒரு நண்பன்.

“இரத்தம் வந்துச்சுனா செத்துருவாங்களா” பயத்தோடு நான் கேட்டேன்.

“ஆமாம் அனி, உனக்குத் தெரியாதா,,,இரத்தம் வெளிய வந்துச்சு செத்தோம்” என்று கூறி என்னுடைய பயத்தீயில் பெட்ரோல் ஊற்றி விட்டுப் போனான் அவன். 

அன்று ஞாயிற்றுக் கிழமை, மாம்பழ சீசன் என்பதால் அப்பா மாம்பழம் வாங்கி வந்தார். மாம்பழம் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றியது.அம்மா வேலையாய் இருந்ததால் நானே கத்தி எடுத்து நறுக்க ஆரம்பித்தேன். அவசரத்தில் கையையும் சேர்த்து நறுக்கிக் கொண்டேன். லேசாக இரத்தம் வர ஆரம்பித்தது.” இரத்தம் வந்துச்சு செத்தோம்”என்று நண்பன் கூறியது அநியாயத்திற்கு அப்பொழுது நியாபகத்திற்கு வர பயத்தில் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். கண்விழித்துப் பார்த்தால் என்னைச் சுற்றி எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். ”நான் இன்னும் சாகலையா, இரத்தம் வந்துச்சே “ என்று சொல்லி நடந்ததை விளக்கினேன். லேசாக வழிந்த இரத்தமும் நின்று போய் இருந்தது. அந்த காயத்தையும் தேடிப்பிடித்து காண்பித்தேன். எல்லோரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். “தைரியசாலினு நிரூபித்து விட்டாள்” என்று பாட்டி கிண்டலாக சொன்ன போது தான் அழுகை பீரிட்டு கொண்டு வந்தது. 

”அழாத அனி,உன்னை இனிமேல் அப்படிக் கிண்டல் பண்ண மாட்டோம்” என்று பக்கத்து வீட்டு மாமா சொல்ல தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். எல்லோரும் ஒரே குரலில் “மாங்காய் அறுத்து மயக்கம் போட்டு விழுந்த அனி” என்று சத்தமாக கூற அங்கே ஒரே சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அப்புறம் என்னனு கேட்கறீங்களா......நம்ம தைரியப் புராணத்தில் இன்னொரு கதை சேர்ந்தாச்சு............அவ்வளவு தான்...நாம யாரு.......தலைல இடியே விழுந்தாலும் அசால்டா தட்டி விட்டுடே போய்டுவோம்......








Friday, July 20, 2012

மெளனமாகிய மொழி




நமக்கான மணித்துளிகளில்

அன்பை மட்டுமே இட்டு

நிரப்புகிறாய் குறைவேயில்லாமல்


திகட்டத் திகட்டத் திளைத்த பிறகு
மயான அமைதியாகிறது  மனம்.

அமைதியில் ஆழ்ந்து
மெளனப் பூக்களாய்
சிரிக்கிறது உன் நினைவுகள்


 நினைவுகளை அசைபோட
அழகிய காவியமாகிறாய்
என்னுள்ளே நீ


காவியத்தை எழுத்துக்களால்
உயிர்கொடுக்க எத்தனிக்க
குடத்துக்குள் அடங்கா கடல்போல
மொழிகளுக்குள் சிக்காமல்
நர்த்தனமாடுகிறது.


Wednesday, July 18, 2012

மலரும் நினைவுகள் - 2


                              நாம் சந்திக்கும் சில மனிதர்கள் நம் வாழ்வில்  நீங்கா இடம்  பெற்று விடுகிறார்கள். அவர்களுடன் நாம் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவர்கள் அறியாமலேயே நம்மை மெருகேற்றும் அவர்களது சிந்தனைகள், நாம் வெளிகாட்டியே இருக்காத அவர்கள் மீதான அன்பு போன்ற சிலவற்றை பின்னாளில் நினைத்துப் பார்க்கும் போது அந்த காட்சிகள் மீண்டும் உயிர் பெற்று நம் கண்முன் நடமாடுவதை உணர முடியும். அப்படி நான் சந்தித்த ஒரு நபர்தான் “பாப்பா”. அவரைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துள்ளேன்.

பாப்பா





                               எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே ”பொன்னா” தான் எங்கள் வீட்டுச் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து வந்தார். ஒரு நாள் காலை தனது மனைவியை கூட்டி வந்து
“இனிமேல் இவதானுங்க வருவா சுத்தம் செய்ய” என்றார்
“உன்னோட பேர் என்னமா” அம்மா
“பாப்பாங்க”
                            இத்தனையும் தூக்கக் கலக்கத்துடன் அப்பாவின் மடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.பாப்பா அதிகம் பேசி நான் பார்த்ததேயில்லை.அளந்து தான் வார்த்தைகள் விழும். நிறைய இடங்களில் புன்னகை மட்டுமே பதிலாக இருக்கும்.மாநிறத்துடன் பெரிய கண்களை கொண்ட பாப்பாவைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது எனக்கு.
                            காலையில் வந்தவுடன் கடகட வென வேலைகளை முடித்துவிட்டு பழையது இருந்தால் வாங்கிக் கொண்டு சென்று விடுவார். நானும் தங்கையும் விளையாடும் போது கடக்க நேர்ந்தால் புன்னகைத்து விட்டுப் போவார்.
                              ஒரு நாள் பாட்டி வேலையாய் இருந்ததால் பாப்பாவிற்கு பழையதை என்னிடம் குடுத்துப் போட சொன்னார்.போடும் போது பாத்திரம் பாப்பாவின் பாத்திரத்தில் பட்டுவிட்டது.
“ஏன்டி அனி, பாத்திரத்த முட்டாம போடத் தெரியாதா,? போய் பாத்திரத்த நல்லா கழுவிட்டு வா”  பாட்டி
எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது பாட்டியின் வார்த்தைகளைக் கேட்டு. பாப்பாவின் முகமோ எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தது.
“முட்டாம போடு கண்ணு” என்றார்.
நான் ஏதும் பேசாமல் வீட்டிற்குள் வந்து பாட்டியிடம் சண்டை போட்டேன்.
“முட்டினா என்னவாம்,ஏன் முட்டக் கூடாது பாட்டி”
“அவங்க எல்லாம் கீழ்சாதிக்காரங்க, நாம தொடக் கூடாது”
“ஏன் பாட்டி அப்படி சொல்லறீங்க, பாப்பாவிற்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்”
“முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள பேசரப் பேச்சப் பாரு, எனக்கே அறிவுரை சொல்லரா.....போய் வேலையைப் பாரு”
“அவங்களும் மனுசங்க தான, நீங்க பண்ணறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை,இனிமேல் என்னைப் போடச் சொல்லாதிங்க” சொல்லிக் கொண்டே வெளியில் வந்த போது தான் பாப்பா அங்கேயே நின்று கொண்டு இருப்பது தெரிந்தது.
”பெரியவங்கள எதிர்த்துப் பேசரது தப்பு கண்ணு” பாப்பா
“தப்புனு தோணினா யாரா இருந்தாலும் எதிர்த்து பேசரது தப்பில்லை பாப்பா, உனக்கு கஷ்டமா இல்லையா கேட்கரப்ப”
“பழகிருச்சு கண்ணு எனக்கு” என்று சொல்லி புன்னகைத்தார்.அந்தப் புன்னகையில் இருந்த வலியை உணரமுடிந்தது.
“இனி வரும் காலத்துல சாதிமதம் பார்ப்பது குறைந்து விடும் பாப்பா”
“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு கண்ணு” என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அன்று தான் முதன்முதலாக பாப்பாவிடம் நான் அதிகம் பேசியது. அதன் பிறகு பாப்பாவை எங்கு பார்த்தாலும் பாசத்தோடு இரண்டு வார்த்தைகளை உதிர்த்து விட்டே செல்லுவார்.
                             ஆறாம் வகுப்பு வந்த பிறகு துவைக்கர கல்லில் அமர்ந்து படிக்கும் பழக்கம் தொத்திக் கொண்டது. அதன் பிறகு பாப்பாவிடம் அதிகம் பேசுகின்ற வாய்ப்பும் உருவானது. அவருக்கு புஷ்பா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் ,என்னை விட 5 வயது குறைவு என்றும் கூறினார்.
                              “நல்லாப் படிக்க வைக்கணும் கண்ணு என் பொண்ண, என்ன மாதிரி அதுவும் கஷ்டப்படக்கூடாது” எப்பொழுது என்னிடம் பேசினாலும் வந்து விழும் கடைசி வாக்கியம் இதுவாய்த் தான் இருக்கும்.
                           சில வருடங்கள் கழித்து நீண்ட நேரம் பாப்பாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தனது கனவுகள்,குடும்பச் சூழல்,பெண்ணைப் பற்றிய கனவுகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார். அவரது பெண்ணின் படிப்பிற்கும்,திருமணத்திற்கும் நான் வேலைக்குச் சேர்ந்ததும் உதவுவதாக சொன்னேன். அன்று அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் எழுதி விட முடியாது.
                        காலம் வேகமாக உருண்டோடியது. இளங்கலைப் பட்டம் முடித்து விட்டு மேலே படிப்பதா,இல்லை தொழில் துவங்குவதா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான்.
                        “3 நாள் ஆச்சு பாப்பா வேலைக்கு வந்து, எப்பவும் இப்படி பண்ண மாட்டாளே “ என அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.
                        “உடம்பு சரியில்லாமல் இருக்கும் அம்மா” சொல்லும் போதே என்னவாகி இருக்கும் என்ற கவலை மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது. வீடு எங்கே இருக்கிறது என்றும் தெரியாது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக வேலைக்கு வரும் பாப்பாவைப் பற்றி எந்தளவு அக்கறையாய் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது என் மேலேயே எனக்கு கோபம் வந்தது.
                      2 நாட்கள் கழித்து பாப்பாவே வந்தார். முகமெல்லாம் அழுது வீங்கிப் போயிருந்தது. ஏதோ விபரீதம் நடந்து இருப்பது பார்த்ததும் புரிந்தது. எனைப் பார்த்ததும் மீண்டும் அழ ஆரம்பித்தார். அவரே சொல்லும் வரை பொறுமையாய் இருப்பது என்று முடிவு செய்தேன். அழுது ஓய்ந்த பிறகு அவர் சொன்ன வார்த்தை பெரும் அதிர்ச்சியையைத் தந்தது.
“பொண்ணு ஓடிப் போய்ட்டாமா”
                    ஒரு நிமிடம் உலகமே தலை கீழாய் சுத்துவது போல் இருந்தது. பாப்பாவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. இன்னும் பாப்பா அழுது கொண்டே இருந்தார். அவரைச் சமாதானப் படுத்த வார்த்தைகளைத் துழாவிக் கொண்டிருந்தேன். எல்லோரும் ஆறுதல் சொல்லி பாப்பாவை அனுப்பி வைத்தார்கள். பாப்பாவின் கனவுகளைத் தூள் தூளாக்கிய புஷ்பா மேல் கோபமாக வந்தது.
                    அதன் பிறகு பாப்பா வெறும் நடைப் பிணமாகவே உலா வந்தார். கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே ஒரு வார்த்தையில் பதில் வரும். சிரிப்பு, மகிழ்ச்சி என்ற வார்த்தைகள் அவர் வாழ்க்கைப் புத்தகத்தில் இருந்து தொலைந்து போய்விட்டது. அவரிடம் ஏதும் பேசி கஷ்டப் படுத்த கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
                     ஒரு நாள் முகம் நிறைய மகிழ்ச்சியோடு வந்தார். அவரது மகிழ்ச்சி என்னையும் தழுவிக் கொண்டது. ”எனக்கு பேத்தி பொறந்து இருக்கா கண்ணு, இப்பதான் பார்த்துட்டு வந்தேன்.அப்படியே புஷ்பாவைப் பார்த்த மாதிரி இருக்கு.” பாப்பாவைப் பழைய படி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.அதன் பிறகு தினமும் பேத்தியைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.
                     அவர் மறந்தாலும் “உன் பேத்தி இன்னைக்கு என்ன புதுசா பண்ணினா” என்று யாராவது ஒருவர் கேட்க தவற மாட்டோம். பேத்தியைப் பற்றிப் பேசும் போது பாப்பாவின் முகத்தில் தெரியும் பூரிப்பு,பேச்சில் தெரிக்கும் சந்தோஷம் எங்களையும் தொத்திக் கொள்ளும்.
                     ஒரு நாள் காலை புஷ்பாவை கூட்டிக் கொண்டு வந்தார் பாப்பா. “இதுவும் வேலைக்கு போக வேண்டிய சூழல் கண்ணு, நல்லாப் பாத்துக்கர வீட்டுல தான் வேலைக்கு விட முடியும், அறியாப் புள்ள, கஷ்டப்படக்கூடாது” அந்தக் குரலில் தாயின் பாசம் வழிந்து ஓடியது. புஷ்பாவை தன்னைப் போல் இல்லாமல் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற பாப்பாவின் கனவு தவிடு பொடியானதை நினைக்க வேதனையாய் இருந்தது.
                      அடுத்த நாளில் இருந்து புஷ்பா வேலைக்கு வர ஆரம்பித்தாள், தன்னைப் போல் இல்லாமல் தன் குழந்தையையாவது படித்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவுகளைக் கண்களில் தேக்கியபடி.


Tuesday, July 17, 2012

அறியாயோ



உடைந்த உன் குரலால்
உயிர் நடுங்க வைத்தவனே......
தோள் கொடுக்க வேண்டிய நேரத்தில்
தொலைதூரத்தில் நானிருந்து
உனக்காய் துடிப்பதை அறியாயோ........

மெதுவாய் உன் தலைகோதி
ஆறுதலாய் உனை தோள்சாய்த்து
உன் சோகங்களை என்னுள் வாங்கி
உனக்கான சுமைதாங்கியாய்
உனக்காய் நானிருப்பேன்........

வெளியில் வா என் அன்பே
துக்கங்களை முழுங்கிவிட்டு
சாதிக்க சீக்கிரம் வா............
உனக்காய் வழி மீது விழி வைத்து
காத்திருக்கிறேன்........

எப்போது வருவாய்



அனிச்ச மலர் போன்ற மனதை
அணல் காற்றாக உன் பேச்சு
அணைக்கையில் செய்வதறியாது
அயர்ந்து துவளும் மனதை
அன்பெனும் மென்காற்றாய் வீசி
அலர்ந்து மலர வைக்க
அன்பே நீ வருவது எப்போது.......

Thursday, July 12, 2012

மலரும் நினைவுகள்-1



சில   நிகழ்வுகள் நம்  மனதில்  சாகாவரம் பெற்று விடுகின்றன. என்றேனும் நினைவுகளை அசைபோடும் போது துக்கமோ,சந்தோஷமோ நம்மை சில நிமிடங்கள் மெளனமாக்கி விடுகின்றன. எழுத்துக்களின் மூலம் உணர்வுகளை கரைக்க முயல்கையில் சில கண்ணீர் துளிகளாலேயே முற்றுப் புள்ளி வைக்க முடிகிறது. என் மனதை பாதித்த சில நிகழ்வுகளுக்கும், என் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு எழுத்துக்கள் மூலம் மீண்டும் உயிர் ஊட்டுகிறேன்.

முதலில் ”நம்பிக்கை கொன்ற மரணம்” என்ற தலைப்பில் ஒரு சிறு நிகழ்வை பதிவு செய்கிறேன்.



நம்பிக்கை  கொன்ற  மரணம்






               மும்பையில் மகனுடன் லிப்டில் இருந்து வெளிவரும் போது தான் முதன்முறையாக லதாவை சந்தித்தேன். கையில்  இரட்டைக் குழந்தைகளுடன் முகம் நிறைய  தாய்மை பூரிப்போடு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு கீழ் அவர்கள் இருப்பது அன்று தான் தெரிந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு விடை பெற்றோம். 

             வாழ்க்கை ஓட்டத்தில் லதாவைப் பற்றி முழுவதும் மறந்து விட்ட நிலையில் தான் மீண்டும் அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.அந்த சந்திப்பு மகிழ்ச்சியை விட பெரும் அதிர்ச்சியையே அளித்தது. முடியெல்லாம் கொட்டி, மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவரை அடையாளம் காண்பது கூட சிரமமாகவே இருந்தது. அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்று தெரியவந்த போது மனம் பெரும் துக்கத்தை தனதாக்கி கொண்டது. அவரது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயம் கண் முன் விரிந்து மறைந்தது. 

            எனது தோழி அவரது எதிர் வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. லதாவினுடையது காதல் திருமணம் என்றும், 6 வருடம் கழித்து குழந்தைகள் உண்டான பிறகு தான் இருவீட்டாரும் அவர்களுடன் பேசுவதாகவும் கூறினார். குழந்தைகள் பிறந்து 6-வது மாதத்தில் நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருக்கிறது. அவரது தன்னம்பிக்கையும்,வாழ்க்கை குறித்து அவர் பேசிய விதமும் அவர் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.               

                உலக நடப்பை பற்றி நிறைய பேசுவார். அவருடன் பேசும் போது மரணத்தை எதிர்நோக்கும் ஒரு நோயாளிடம் பேசுவது போன்றே தோன்றாது.அவர் மிகவும் பலவீனமாய் இருந்ததால் குழந்தைகளைக் கூட தூக்கி கொஞ்ச முடியாத நிலை. குழந்தைகள் தூக்கிக் கொள்ள சொன்ன போது கண்களில் வலியுடன் கணவரை அவர் பார்த்த காட்சி பசுமரத்தாணி போல் இன்றும் மனதில் பசுமையாய் படர்ந்திருக்கிறது. 

           ஊருக்குச் சென்று முடிகாணிக்கை செலுத்தி விட்டு வந்த அன்று லதா என்னுடன் பேசியது இன்றும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. “முன்னாலேயே என்கிட்ட சொல்லி இருந்தா உங்க முடியை எனக்கு கொண்டு வந்து தர சொல்லியிருப்பேனே, இந்த சிகிச்சையினால் எனக்கு முடியே வளராதாம்,உங்க முடியை நான் உபயோகப் படுத்தியிருப்பேனே அனிதா” என்றார். 

              ”உங்களுக்கு எப்ப தேவையோ அப்ப சொல்லுங்க லதா,கண்டிப்பா என் முடியை உங்களுக்குத் தரேன்” என்றேன். வறண்ட புன்னகை மட்டுமே அவரிடம் இருந்து பதிலாக வந்தது. இந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டேன். வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக உருண்டு கொண்டிருந்தது. லதாவை முன்பு போல பார்க்க முடியவில்லை. மருந்தின் வீரியத்தால் நிறைய நேரம் தூங்குவதாக அவரது அம்மா சொன்னார். 

           ஒரு நாள் லதாவே வீடுதேடி வந்தார். ஸங்கீத்தின் 3 வது பிறந்த நாள் அன்று தான் அவர் முதன்முதலாக வீட்டிற்கு வந்தது. சிறிது நேரம் மட்டும் விழாவில் இருந்து விட்டு கிளம்பி விட்டார். அதன்பிறகு இன்று அவரது வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த சோர்வு மனதை கலங்கடித்தது.

     ”இண்டர்காம்ல சொல்லியிருந்தா நானே வந்து இருப்பேனே லதா”

     ”கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம் என்று வந்தேன் அனிதா”

     ”எப்படி இருக்கீங்க”

     ”ரொம்ப முடியரது இல்லை அனிதா, முப்பது நிமிஷத்துக்கு மேல உட்கார முடியல, இரண்டு குழந்தைகளையும் கவனிச்சுட்டு அம்மாவால சமைக்க முடியரது இல்லை. சமையல்காரம்மா யாராவது தெரியுமா?”

     ”தெரியும் லதா, சாயந்திரம் வந்து பார்க்க சொல்லறேன்,டாக்டர்கள் என்ன சொல்றாங்க”

     ”நோயின் வீரியம் அதிகமாகிவிட்டதாம், மருந்துகள் அதிகம் பண்ணி இருக்காங்க, என் குழந்தைகளுக்காக நான் உயிரோடு இருக்கனும் அனிதா,அவங்க ஓடி விளையாடரத பார்க்கனும்” சொல்லும் போதே லதாவின் குரல் உடைந்து கண்கள் கலங்கி இருந்தன.
       முதன்முறையாக லதாவை அந்த நிலையில் பார்த்ததும் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்ததை தடுக்க முடியவில்லை.

     ”கவலைப்படாதிங்க லதா,எல்லாம் சரியாகிடும்” இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.சில நிமிடங்கள் மெளனத்தால் கரைந்தன.
       சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னை மீட்டுக் கொண்டு பழையபடி கலகலப்பாக பேசிவிட்டு விடை பெற்றார். அதன் பிறகு லதாவை சந்திக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. அவரது அம்மாவிடம் லதாவின் உடல்நிலைப் பற்றி அவ்வப்போது விசாரித்துக் கொள்வேன்.

        ஒரு நாள் இரவு லதாவின் வீட்டில் இருந்து மெல்லிய அழுகை ஒலி கேட்டது. ஏதோ விபரீதம் நடந்து விட்டது புத்திக்கு உறைத்தாலும் மனதால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இண்டர்காம் ஒலித்த போதே புரிந்துவிட்டது, தோழியின் வார்த்தைகளும் அதை உறுதி செய்தன. நான் பார்த்து பிரமித்த பெண்மணி உயிரோடு இல்லை என்பதை நம்ப மனம் மறுத்தது. துக்கம் நெஞ்சம் அடைக்க கண்ணீரால் கரைத்துக் கொண்டிருந்தேன். தன்னிச்சையாய் கால்கள் லதா வீடு நோக்கி நகர்ந்தன. சில அடிகள் நடந்ததே பல மைல்கள் கடந்தது போன்று அசதியாக இருந்தது.

       லதாவைப் படுக்க வைத்து இருந்தார்கள்.அதே தன்னம்பிக்கை அவரது முகத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. “மரண பயத்திற்கு சாவுமணி அடிச்சுட்டு தான் சாவைத் தழுவ வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே அவர் சொன்னது ஏனோ அப்பொழுது நியாபகம் வந்தது. ”கடைசிவரை தன்னம்பிக்கையோடு தைரியமா இருந்தா” என்று அவரது அம்மா அழுது கொண்டே சொன்ன போது வெடித்த அழுகையை அடக்க முடியவில்லை.கடவுள் நம்பிக்கை மீண்டுமொருமுறை தற்கொலை செய்து கொண்ட தருணமது.

     ”என்னடா வாழ்க்கையிது” என்று மனதில் கேள்வி எழும் போதே “இது தான் வாழ்க்கை” என்ற பதிலும் சேர்ந்தே விழுந்தது.

     அடுத்த வாரம் மற்றுமொரு நிகழ்வுடன் சந்திப்போம்