Friday, August 30, 2013

காத்திருக்கிறேன் காதலுடன்


நொடிக்கொருதரம் மாறும்
உன் இயல்புகளால்
சிந்தை குழம்பித்தான்
தவிக்கிறேன்...........

ஒருநொடி அணைத்து
மூச்சுதிணறடிக்கிறாய்
மறுநொடி புறக்கணித்து
மரிக்கவைக்கிறாய்.

தொட இயலா வானத்து
விண்மீன் எனநினைக்கையில்
கைகளுக்குள் சிறைபுகுகிறாய்
அழகாக......
தொட்டுவிடும் தூரமென
கைநீட்டுகையில்
வானவில்லாய்
மாயமாகிறாய்...............

குழம்பித் தவித்து
ஒதுங்க நினைக்கையில்
தாய்கேங்கும் மழலையாய்
வழிமறிக்கிறாய் கண்ணீர் துளிர்க்க..........

வாரி அணைத்துக்கொள்ள துடித்தாலும்
புத்தியின் அபாயச் சங்கிலியால்
கைகள் கட்டி காட்சியாளனாகிறேன்

எனதுள்ளம் உணர்ந்து, முகமூடிகளைத் துறந்து
உனக்கான இயல்போடு வரும் நாளுக்காக
ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன்,
காதலை அடைகாத்தும் வைக்கிறேன்.

Sorry Grass




காலையில் எப்போதும் பள்ளி வேன் வருவதற்கு 5 நிமிடங்கள் முன்னால் சென்று விடுவோம். இன்று ஏனோ சிறிது நேரம் ஆகிவிட, நடைபாதை வழியாக போகாமல் குறுக்கு வழியாக புல்லில் மேல் நடந்து சென்று சீக்கிரமாக அந்த இடத்தை அடைந்துவிடலாம் என்று புல்லின் மேல் நடக்க ஆரம்பித்தேன்.

என் கைகளைப் பிடித்து நிறுத்தினான் ஸங்கீத்

“ஏண்டா குட்டி,நேரம் ஆச்சுபா, பஸ் போயிடும்,சீக்கிரம் வா”...

“அம்மா நடக்காத...grassku, வலிக்கும்”

ஒரு நிமிடம் ஏதும் புரியவில்லை.

“என்னடா சொல்லர” என்றேன் எரிச்சலாக.....எனக்கு பள்ளி வேனை விட்டு விடுவோமோ என்ற கவலை புத்தி முழுதும் நிறைந்திருந்தது.

 "Grass is a Living thingma, அது மேல நடந்தா,அதுக்கு வலிக்கும், நடைபாதையில ஓடிப் போனா வேனைப் பிடிச்சுடலாம்”

ஒரு நிமிடம் அதிசயத்து போனேன். மெதுவாக அவன் கைகளைப் பற்றி “சரிக்குட்டி நாம சீக்கிரமா ஒடிப் போய் வேனைப் பிடித்து விடலாம் என்று நடைபாதை நோக்கி நடந்தேன்.

”Sorry Grass" என்று ஸங்கீத் புல்லிடம் சொல்லிவிட்டு வந்தான்.
 
வாயடைத்து போனேன். குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கத் தான் செய்கிறது. வாய்விட்டு சொல்ல கொஞ்சம் சங்கடமாக இருந்ததால் மனதிற்குள் மன்னிப்பு கேட்டு விட்டு நடைபாதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கதவருகில் கனவுகள்



தவளும் மேகத்தில் பஞ்சனையமைத்து
மூன்றாம் நிலவை தலையணையாக்கி
காணும் கனவுகளெல்லாம் கரையாமலிருக்க
இமைத்திறவாமல் பூட்டியே வைக்கிறேன்.
...
இமைக்கதவு தட்டும் கதிரின் கதிர்களால்
இமைகள் விரிய, வெளிச்சத்தில் நிசமாய்
நிற்கின்றன கனவுகள் கதவருகில்...........

செல்லக்குட்டியின் குறும்பு


 
மாலையில் எப்போது சமையலறைக்குள் நுழைந்தாலும் தானும் உதவுகிறேன் பேர்வழி என்று ஸங்கீத்தும் கூடவே வந்து விடுவான்.

நேற்று சப்பாத்தி செய்யப் போன போது “அம்மா, நான் மாவு பிசைந்து தரேன்” என்றான். சரியென்று கூறிவிட்டு அவனுக்கு தேவையானதை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தேன்.

“அங்க பாரேன், பெரிய பல்லி” என்றான்...

“எங்கடா குட்டி “ என்று நான் திரும்பிய போது எனது கன்னத்தில் மாவை அப்பிவிட்டு சிறிது தயக்கத்தோடு என்னைப் பார்த்தான் என்ன சொல்லுவேனோ என்று

“என்னடா குட்டி, இப்படி பண்ணிட்ட” என்றேன்

”சாரிமா, நானே துடைத்து விடரேன் “ என்று டவலை எடுக்க எழப் போனான்.

அவனைத் தடுத்து இன்னொரு கன்னத்தை காண்பித்தேன்.

முகத்தில் மகிழ்ச்சி குபீரென்று பூக்க முகம் முழுக்க மாவைப் பூசினான். அவன் முகத்தில் நானும் மாவைப் பூச, அடுத்த அரை மணி நேரத்திற்கு வெறும் சந்தோஷப் பதிவுகளை மட்டுமே அந்த இடம் பதிவு செய்து கொண்டிருந்தது.

பிறகு இருவரும் சேர்ந்து ஒருவழியாக சப்பாத்தி செய்து சாப்பிட்டோம். நேற்று சப்பாத்தி மிகவும் ருசியாக இருந்தது. வயிற்றையும் நிறைத்து மனதையும் நிறைத்தது.

சட்டென்று ஒரு நொடியை அதீத இன்பமாக்கும் வரத்தை குழந்தைகள் மட்டுமே வாங்கி வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

தெரியாத பக்கங்கள்




 இந்த வீட்டிற்கு வந்த பிறகு காலையில் பறவைகளின் இனிய குரலோடு கண்விழிக்கும் போதே இனம்தெரியா சந்தோஷமும் சேர்த்தே ஒட்டிக் கொள்ளும். அரக்கபரக்க காலையில் தேவையானதை தயார் செய்து மகனை பள்ளியில் விட முதல் நாள் சென்ற போது தான் அந்த டெம்போ கண்ணில் பட்டது. அதில் சில பேர் அமர்ந்து இருந்தார்கள். விசாரித்த போது கம்பெனி வண்டி என்றும், அதில் ஏற்றிப் போய் பணி செய்யும் இடங்களில் இறக்கி விடுவார்கள் ...என்று சொன்னார்கள். அந்த வண்டியைப் பார்த்தால் சாமானங்கள் ஏற்றிப் போகும் வண்டியைப் போலவே இருந்தது. கடைநிலை ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவே காட்சியளித்தது.

கட்டிட தொழில்கள், மரங்களைப் பராமரித்தல் ,ரோடுகள் செப்பனிடுதல் பணிகளில் நம் மக்களைப் பார்க்கும் போது மனதில் சோகம் அப்பிக் கொள்ளும். வேகாத வெய்யிலில் அவர்கள் படும் பாடு வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உருகி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகளாகவே கண்ணுக்கு தெரிவார்கள். சகோதரியின் கல்யாணக் கடனோ, அப்பாவின் விட்டுப்போன கடமைகளோ அவர்களை இங்கே பணியாளர்களாக இழுத்துவந்திருக்கும்.

எத்தனை சாலை விதிகள் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சாலை விபத்துக்கள் மனிதனின் கவனமின்மையையே பறைசாற்றுகின்றன. கார் டெம்போவுடன் மோதிய சாலை விபத்தில் ஒருவர் பலி எனற செய்தி அதிர்ச்சியாகவே இருந்தது. அதுவும் இறந்தது தமிழர் எனும் போது ஏதோ இனம்தெரியாத சோகம் மேலோங்கி எழுந்தது. இறந்தவர் 29 வயது இளைஞர்,நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அடுத்த மாதம் அவருக்கு திருமணம் என்பதால் ஊருக்கு போக ஆயுத்தம் செய்து கொண்டு இருந்தார் என்ற செய்தி மனதில் ஒரு வெறுமையை கொணர்ந்து நிறுத்தியது.
வெளிச்சத்தை நிரப்பிய ஒரு மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது. அந்த வீட்டில் இருட்டின் கருமை பயங்கரமானதாகவே இருக்கப் போகிறது என்பதை உணரமுடிந்தது. கல்யாணக் கனவுகளோடு காத்திருக்கும் அந்தப் பெண்ணிற்க்கு இது மிகப் பெரிய இடியாக இறங்கக் கூடும்

இனி அந்தப் பெண்ணின் வாழ்க்கை மிகவும் துயரகரமானதாகவே இருக்குக் கூடும். ராசியில்லாதவள் என்ற பட்டப்பெயர் கூரிய முட்களாக அவள் மனதை கிழித்தெறியும் போது கேடயமாக ஒருவர் இருக்க வேண்டுமே என்ற வேண்டுதல் மட்டுமே வைக்கமுடிந்தது. கடந்து மீண்டு வருவாளா? அமிழ்ந்து போவாளா தெரியவில்லை.

நம் வாழ்க்கை நம்மிடமில்லை எனும் போது ஏன் ஓட வேண்டும் என்ற அயர்ச்சி வந்து விடுகிறது.அமைதியான நதியாகவே கடலில் கலக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.எத்தணை எதிர்கால திட்டங்கள்,எத்தனை கோபங்கள், எத்தனை எதிர்பார்ப்புகள் எல்லாம் அர்த்தமில்லாததாகவே தெரிகிறது. மலைகளில் ஏறி, நீர்வீழ்ச்சியாக வீழ்ந்து....வீழ்வதும் எழுவதும் கூட நம் கைகளில் இல்லையெனும் போது அடர்த்தியான மெளனம் மட்டுமே நட்புக்கரம் நீட்டுகிறது..

நினைவுகள் சுமந்தபடி


கரையோரத்தில் கால்கள் நனைத்தபடி
பேரழைகளைலில் மிதக்கும் நிலவினை
மெளனமாய் இரசிக்கிறேன்.........

நீந்தும் மீன்களின் நீர்த்தெளிப்புகள் ...
நலம்விசாரிக்க உள்ளுக்குள் பூக்கும்
அணுக்களின் எதிரொலியாய்
விரிகின்றன இதழ்கள் மெலிதாக.......

இருட்டின் ஆக்ரமிப்பு தெளிவாக தெரிய
இரவலாய் வாங்கிய நிலவின் வெளிச்சம்
இல்லாமல் போகுமுன் வீடுசேர புத்தி
எச்சரிக்கை மணி எழுப்ப, அனிச்சையாக
வீடு நோக்கி நகர்கின்றன கால்கள்
நினைவாக சில ஈர மணல்களை சுமந்தபடி........

இருளின் வெளிச்சத்தில்




 கண்முன் தெரியும் இருளை கடந்தே ஆக வேண்டும். இருளைச் சுற்றிலும் வெளிச்சம் அழகாக வீசிக் கொண்டிருந்தது. அடர்காட்டுக்குள் வெளிச்சம் ஊடுருவ இயலாதது போல அங்கே மட்டும் இருள் அப்பிக்கிடந்தது.

இருளின் கருமை சொல்லவொண்ணா கோபத்தை மனதில் ஏற்றிக்கிக்கொண்டிருந்தது. இதை கடக்க வேண்டும் என்ற நிலைவந்த போது “ஏன்,எனக்கு மட்டும்,என்ன பாவம் செய்தேன்” என்ற கேள்வி அனுவின் மனதில் பேரலையாக ஒலித்துக் ...கொண்டிருந்தது. கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன.ஆறுதல் என்ற அணையில்லாததால் கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் கொட்டிக் கொண்டிருந்தது.

“அழுது துக்கத்தை கரைத்து விடுங்கள் அனு, சீக்கரமாக செயல்பட்டால் தான் நல்லது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பாதிப்பு கூடிக்கொண்டே போகும்.” ஒலித்த குரல் மீது மேலும் கோபம் வந்தது.

அழுவதற்கு கூட நேரம்கொடுக்காத விதியின் மீது வெறுப்பு தொற்றிக் கொண்டது. அதிர்ச்சி, துக்கம் இரண்டும் கலந்து அனுவை துவளச் செய்தன. விழப்போனவளை இரமேஷின் கரங்கள் ஆதரவாக அணைத்துக் கொண்டன. அவனுக்கே ஆறுதல் என்ற நிலையிலும் இவளது நிலைகண்டு இவளுக்கு சுமைதாங்கியாக மாறினான்.

“எல்லா, சரி ஆகிடும் அனும்மா”

 “எப்படிடா”

 “தெரியல,நம்பிக்கை இருக்கு “ என்று இல்லாத நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க முனைந்தான்.

எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்று இரமேசுக்கு தெரியவில்லை. ஒரு இயந்திரம் போல் உணர்ந்தான். புத்தி முழுவதுமாக ஸ்தம்பித்து போய் இருந்தது. ”முதலில் தான் தேறவேண்டும்” என்று மனதிற்குள் உரு ஏற்றிக்கொண்டான். முழுவதுமாக உடைந்து போன அனுவை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்பிக்கை பொய்ப்பதை விட கனவுகள் பொய்த்துப் போவது மிகவும் வேதனையைத் தந்தது.
 
“எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் எதிர்கொண்டே ஆகவேண்டும், சோர்ந்து போய்விடக் கூடாது “ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். அங்கு மெளனம் மட்டுமே நிரம்பி வழிந்தது. வார்த்தைகள் கேட்பாரற்ற குழந்தை போல் மூலையில் கிடந்தன.

இதை ஏதும் உணராத அவர்களது 2 வயது குழந்தை ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்க்க பார்க்க துக்கம் அதிகரித்தது இருவருக்கும்,ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து தேற்றிக் கொள்ள அரும்பாடு பட்டனர்.

அனுவிற்கு அழுவதைத் தவிர ஏதும் செய்ய இயலவில்லை. நேரம் ஆக ஆக கீதுவிற்கு மதிய உணவு கொடுக்க வேண்டுமென புத்திக்கு உரைத்தது. ஏதோ ஒரு வெறுமை வீட்டையும், மனதையும் ஆக்கரமித்து இருந்தது.

“தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இழப்பு தான்” என்ற குரல் இரமேஷ்,அனுவின் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“நாளைக்கு காலைல வரோமுனு சொல்லிடு”

 “முடியுமா அனு உன்னால,ரொம்ப உடைஞ்சு போய் இருக்க”

 “சமாளிச்சுடுவேண்டா, தாமதிக்க வேண்டாம்” சொல்லும் போதே கண்ணீர் எட்டிப் பார்த்தது.

மெதுவாக அணைத்து “எல்லாம் சரியாகிடும் அனு”

 “ஆகனும்பா,ஆக்கனும் “ என்றாள்

”நீ கீதுகுட்டி கூட விளையாடு, நான் சமைக்கிறேன்” சமையலறைக்குள் நுழைந்தாள்.
 
கீதுவுடன் பேசி சிரித்து ரமேஷ் விளையாட ஆரம்பித்தான். ஏனோ அந்த சிரிப்பிலும் சோகம் அப்பிக் கிடந்ததை உணர முடிந்தது. தீராத சோகத்தை அளித்துவிட்டு அந்த நாள் விடைப்பெற்றுக் கொண்டது.

அடுத்த நாள் காலையில் மருத்துவமனையை அடைந்த போது நேற்று டாக்டர் “ உங்கள் குழந்தை கீதா Normal குழந்தை இல்லை” என்று முத்திரை குத்தி நீட்டிய ரிப்போர்ட்ஸ் நியாபகம் வந்தது.
 
 “முதல்ல இரண்டு பேரும் தைரியமா இருங்க,உங்க குழந்தை "special kid", இந்த வார்த்தைகள் அனுவின் காதில் விழுந்ததும் புத்தி கல்லாக மாறிவிட்டிருந்தது. பிறகு மருத்துவர் சொன்ன ஏதும் காதில் விழவில்லை.

இவர்களின் அதிர்ச்சி அவருக்கு பழகிப் போன ஒன்றாகக் கூட இருந்திருக்கலாம். மெதுவாக ரமேஷ் தோள்களைத் தட்டி “சில உண்மைகளை நாம் ஏத்துக்க பழகிக்கனும், சீக்கிரம் தெரபி ஆரம்ப்பிக்கனும்,தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்பு அதிகமாகும்” என்றார்.

இன்று அவர் முன் அமர்ந்த போது எதிர்கொள்ளும் தைரியம் இருவருக்குமே இருந்தது. அவர் பொறுமையாக குழந்தையின் குறைபாடுகளை விளக்கினார்.

“சரி பண்ணிடலாமா?”: என்ற கேள்வி அனிச்சையாக வந்து விழுந்தது.

“2 வயது இப்ப, தெரபி ஏத்துக்கரத பொறுத்து தான் சொல்ல முடியும்”

கீது பிறந்த போது அனுவும் ,ரமேஷும் அவளுக்காக தீட்டிய வருங்கால திட்டங்கள் அனைத்தும் கருணையே இல்லாமல் கொல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டதை உணர முடிந்தது.

“எப்ப தெரியும்”

 “சரி பண்ண முடியாவிட்டாலும், கட்டுக்குள் வைக்க முடியும், ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்து மாறுபடும், சில வருடங்கள் கழித்து சொல்லிடலாம், நார்மல் வாழ்க்கை வாழமுடியுமா இல்லையானு”

அந்த பெரும் இருட்டை கடக்க ஆயுத்தமானதும், கடந்தவர்களைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டது. அதற்கான பயணங்கள் ஆரம்பித்தன. இருட்டைப் பார்த்தும் பயத்தில் கண்கள் கலங்கின. பழக்கப்பட்ட முனைந்த போது தன்னைப் போலவே நிறையப் பேர் அங்கு இருப்பதை காண முடிந்தது, உள்ளே நுழையத் தயங்கிய போது உதவிக்கரம் நீட்டப்பட்டது.

இது புது உலகம்.இங்கு அன்பு மட்டுமே இறைந்து கிடந்தது.சோர்ந்த போதெல்லாம் யாரோ ஒருவர் நம்பிக்கையைத் தெளித்து சென்றார்கள். எல்லோருக்கும் பொதுவான இலட்சியமாக இருட்டைக் கடப்பது ஒன்று தான் இருந்தது. வெளிச்சத்தை நோக்கிய பயணம் நீண்டு கொண்டே போனது. அனுவும்,ரமேஷும் தன் பின்னால் வருபவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய வண்ணம் பயணம் தொடர்ந்தனர்.

எல்லோராலும் இருட்டை கடக்க முடிவதில்லை. சில குழந்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே பயணத்தை முடித்துக் கொண்டனர். சில குழந்தைகள் பாதியில். உண்மையை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொண்ட பெற்றோர்கள குழுக்களாக குழந்தைகளின் எதிர்காலத் திட்டத்தை தீட்டி செயல்படுத்த ஆரம்பித்தனர். பயணம் மேற்கொள்வோருக்கு நம்பிக்கை பாதையைக் காட்டினர்.

பயணத்தில் ஒரு இடத்தில் தாயும் குழந்தையும் மட்டுமே திணறிக் கொண்டிருந்தனர். இந்தக் குழந்தை வேண்டாமென்று தந்தை உதறிவிட்டு போன கதை சொல்லப்பட்டது.

கீதா ரமேஷின் கரங்களை அழுந்தப் பற்றினாள். அவன் இவள் விழிகளை கேள்விக் குறியோடு நோக்கினான்.

“தேங்க்ஸ்டா”

 “எதுக்குடி”

 “விட்டுட்டு போகாம அனுசரனையா இருக்கரதுக்கு”

 “கண்ணம்மா, என்ன பேச்சு இது, கீதுக்குட்டி என் உயிருடி, ” என்று அவளைக் குழந்தையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்

இன்னொரு இடத்தில் தந்தையும், மகனும் மட்டுமே போராடிக் கொண்டிருந்தார்கள். அனுவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான். ரமேஷின் வார்த்தைகள் சொல்லாத விசயங்களை மெளனம் அழகாக விளக்கியது. இந்தப் பயணத்தில் இருவரின் அன்பும் அடர்த்தியானதை இருவராலும் உணரமுடிந்தது. மெதுவாக வெளிச்சத்தின் தடயங்கள் தட்டுப்பட்டன. மகிழ்ச்சியின் எல்லையில் அடி எடுத்து வைத்தனர் இருவரும்.

அங்கே நிறைய பேர் அவர்களை வரவேற்க காத்திருந்தனர். பயணத்தின் அனுபவங்கள் பகிரப்பட்டன. இவர்களும் வரவேற்கும் குழுவில் இணைந்து விட்டனர். இவர்களின் கதையும் இருளின் பயணத்தை துவங்குபவர்களுக்கு நம்பிக்கைத் துளியாக மாறக்கூடும்.

இந்த நொடியோ, மறுநொடியோ, சில நொடிகள் கழித்தோ, சில மணித்துளிகள் கழித்தோ, சில வருடங்கள் கழித்தோ இருளைக் கடந்து வரும் இன்னொரு குடும்பத்திற்காக எல்லோரும் இருகரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறார்கள்.

”கவிதா”




மூடிய இமைகளுக்கு இடையில் ஒழுகிய நீர்த்துளிகளை பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்கத் தான் முடிந்தது அனு என்கிற அனுராதாவால். மெல்லிய ஓடையாக கீழறங்கி தலையணையை நனைத்தபடி இருந்தது கண்ணீர்த் துளிகள். கவிதாவின் கடைசி நொடிகள் அது என்பது எல்லோராலும் உணரமுடிந்தது. கவிதாவின் கைகளை பற்றியபடி அமர்ந்திருந்தாள் அனு. கவிதாவின் கணவரும், குழந்தைகளும் துக்கத்தை முகத்தில் சுமந்து கொண்டு நின்றிருந்தார்கள். ஏதேனும் கண்திறந்து சொல்லுவாளோ என்ற நம்பிக்கையில் அனைவரது கண்களும் கவிதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. 40 வயதில் தோழியின் மரணம் ஏற்க முடியாததாகவே இருந்தது.

அனுவும்,கவியும் சிறு வயது முதலே நல்ல தோழிகள்..இரு துருவங்கள் என்று கூட சொல்லலாம். அனுவின் அமைதியான குணம் கவிக்கு மிகவும் பிடிக்கும். அவளது துறுதுறுதனத்திற்கு நேர் எதிரானதும் கூட. சில சமயம் எரிச்சலையும் உண்டாக்கும் கவிக்கு..

“எப்படி அனு இப்படி இருக்க, எதிலும் பட்டுக்காம, எதிர்நீச்சல் கூட போடாம இருக்கமுடியுது” என்பாள்

தாய் தந்தையை இழந்து அத்தையின் வீட்டில் வளருபவளால் இப்படித்தான் இருக்க முடியும் என்று உணரயியலா வயது அது. வளர்ந்த பின் அதுவே கவிதாவிற்கு அனுவின் மேல் அளவு கடந்த பாசத்தை உண்டு பண்ணியது. சில சமயங்களில் அனு தாயின் உருவத்தை கவியின் வடிவில் காண்பாள். தனது கணவரின் நெருங்கிய நண்பருக்கு அனுவை திருமணம் செய்து வைத்ததில் பெரும் பங்கு கவியைத் தான் சாரும். குடும்ப நண்பர்கள் என்றானபின் இவர்களது நட்பு மேலும் அடர்த்தியானது. பக்கத்து வீடு என்பதும் கூடுதல் வரமாகவே அமைந்தது அவர்கள் நட்பிற்கு.

6 மாதங்களுக்கு முன்பு கவிக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்த போது மிகவும் உடைந்தது அனுதான். மிகவும் தைரியமுடனே எதிர்கொண்டால் கவி. நாட்கள் நகர நகர அவளது நம்பிக்கை குவளையை மற்றவர்கள் நிரப்பவேண்டியதாக இருந்தது. அதுவும் நிரப்பிய வேகத்தில் காலியாவதை பார்த்து செய்வதறியாது பரிதவித்தனர் மற்றவர்கள். திட்டமிடலுக்கு பேர் போன கவி அடுத்து எடுத்த நடவடிக்கைகள் எல்லோரையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது எனலாம். கணவருக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய ஏற்பாடுகளை ஆரம்பித்த போது ரவி கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

“ஏண்டி இப்படி படுத்தர, உன்னைத் தவிர என்னால் இன்னொருத்தியுடன் எப்படி” கோபத்தின் உச்சியிலும் அவனது கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

“வெற்றிடம் நிரப்ப வேண்டும், இயற்கை விதிடா” கவி

“அது வெற்றிடம் இல்ல குட்டிமா, புரிஞ்சுக்க” ரவி

 கவியின் பிடிவாதம் முதன்முதலாக ரவியிடம் தோற்ற தருணம் அது.

தான் இல்லாவிட்டாலும் வழக்கம் போல் நடக்கும் படி எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல் படுத்திய பின் தான் படுக்கையில் ஒரேடியாக விழுந்தாள் கவி. அனுவிற்கு கவி இல்லாத வாழ்க்கை நினைக்க கூட முடியவில்லை. எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தாள். அருணின் தோள்கள் தான் அவள் துக்கத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கி.

“கண்ணம்மா, சிலதை தடுக்க நம்மால் முடியாதுடா, அமைதியா ஏத்துக்க தயாரா இரு. கவி முன்னால அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத” அருண்

“முடியலங்க, அவள இந்த நிலமையில் பார்க்க முடியல “ அனு

“அவள் என்ன செய்ய நினைக்கறாளோ, அதை உணர்ந்து அவளுக்கு உறுதுணையா இரு” அருண்

கவியின் திட்டமிடல் அனைத்தையும் செயல்படுத்தியது அனுதான்.குழந்தைகளை இழப்பிற்கு தயார்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதுவும் பெண் குழந்தைகளுக்கு அம்மாவின் அரவணைப்பு எத்துணை தேவை என்பது அவள் அறிந்ததே. அனுவின் மீதும் அவர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்ததால் கவிக்கு அனு பார்த்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை மிகுந்து இருந்தது.

எல்லோரும் கவியின் இழப்பை தவிர்க்கமுடியாமலும், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்,ஏதேனும் அதிசயம் நடந்து கவி இறப்பில் இருந்து மீட்டுஎடுக்கப்படுவாள் என்ற நம்பிக்கையுடன் காலத்தை ஓட்ட ஆரம்பித்தார்கள்.

ஒருவாரத்திற்கு முன்பு கவிக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் சேர்க்கப் பட்டாள். இறுதி நாட்கள் என்பதை மருத்துவரும் உறுதிசெய்தார். முதன்முதலாக கவி அழுது அனு அன்றுதான் பார்த்தாள். அவர்கள் இருவரும் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.

“அம்மு” கவி. அனுவைச் செல்லமாக இப்படி தான் கூப்பிடுவாள்
அனுவால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை நிறுத்தயிலவில்லை.

“அம்மு , உன்ன நம்பி தாண்டி போறேன், நல்லா பாத்துக்கடி “ கவி

“ஏண்டி இப்படி பண்ணர,சரியாகிட்டு வாடி” அனு

“அம்மு,குழந்த மாதிரி பேசாத,சில நிஜங்களை நாம ஏத்துகிட்டு தான் ஆகனும். எனக்கும் ஆசைதான் உயிரோட இருக்கனும் என்று, நடக்காது எனும் போது என்ன செய்ய சொல்லர. ரவியோட அரவணைப்பு, குழந்தைகளோட அன்பு ,உன்னோட தோழமை எல்லாமே எனக்கு கிட்டாத தூரம் போகப் போகுதுடி” குரல் உடைந்து கரகரத்தது.

கடைசி நிமிடங்கள் எல்லோரையும் சிறிது கலங்கடிக்கவே செய்கிறது. அடுத்த நொடி பழையபடி தைரியத்தை கவி அணிந்து கொண்டு சிரித்தாள்.ஏனோ அந்த சிரிப்பு வெறுமையை மட்டுமே நிரப்பிவைத்திருந்தது.

“கவி, எனக்கு எப்பவும் 4 குழந்தைகளடா, ஒருபோதும் நான் பிரித்து பார்த்தது இல்லடி” அனு

“தெரியும் அம்மு. அந்த ஒன்று தான் சாவைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா அணுக உதவியா இருக்குடா” கவி

“ரவி, பாவம்டா, எப்படி மேனேஜ் பண்ண போறானு தெரியலை” கவி.
 
மூச்சுக்கு முந்நூறு தரம் குட்டிமா என்று கூப்பிட்டு கொண்டே இருக்கும் ரவியை நினைத்தால் வருத்தமாகத் தான் இருந்தது அனுவிற்கும்.

சாவை நெருங்கும் போது பிரியமானவர்களின் துக்கங்களை மட்டுமே அசை போடுமோ மனது, அனுவிற்கு தன்னுடைய பொறுப்பு தெளிவாக புரிந்தது.

“கவி, நானிருக்கேன், கடைசி மூச்சு இருக்கும் வரை நல்லா பாத்துக்கிறேன்” என்றாள் அனு கைகளை அழுத்தி.

அதன்பிறகு கவி அதிகம் பேசக் கூடிய நிலையில் இல்லை. இன்று காலை அவளது கடைசி நாள் என்று தெளிவாக தெரிந்துவிட்டது. அவள் கண்களில் வழிந்த கண்ணீரை வகைப்படுத்த இயலவில்லை. எல்லாம் செய்துவிட்ட திருப்தியில் வந்ததாகவே அனுவிற்கு தோன்றியது. கவியின் கடைசி சுவாதத்தை அனைவராலும் உணர முடிந்தது.

அன்பானவர்கள் எதிர்நீச்சல் போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே ஒரு ஜீவனுக்கு சாவை அமைதியாக எதிர்கொள்ளும் தைரியத்தை தருகிறதோ?.

தமிழ்க்குடில் அறக்கட்டளை



 
எல்லோர் மனதிலும் நமது சமுதாயத்திற்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைந்து இருக்கும். எப்படி என்பது தான் கேள்விக்குறியாக இருக்கும்.நம்மிடம் இருக்கும் சிறு தொகையை வைத்து என்ன சாதித்து விட முடியும் என்ற எண்ணமும் தலைதூக்கும் ஆனால் செய்ய வேண்டும் என்ற வேட்கை உயிரோடு இருக்கும். சிறு துளிகள் தான் கடலாகும் என்பதை உறுதிசெய்யும் வகையில் நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் தமிழ்க்குடில் அறக்கட்டளை.

தமிழ்க்குடில் அறக்கட்டளை மே மாதம் 21ந்தேதி 2012 அன்று பதிவு செய்யப்பட்டது..

ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே தமிழ்க்குடிலில் முதலாமாண்டு விழாவின் போது சுமார் 25 மாணவர்களுக்கு தேவையான பொருள்களை திரு,சிலம்பொலி செல்லப்பா அவர்களின் திருக்கரங்களால் மேடையிலேயே வழங்கப்பட்டது.

மேலும் சில மாதங்களில் சுமார் 50 குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான பொருட்களை நமது அறக்கட்டளை வழங்கியுள்ளது.

செப்டம்பார் மாதம் 2012இல், உண்ணாமலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணிற்கு செமஸ்டர் கட்டணமாக ரூ.12000/- வழங்கியுள்ளது.

டிசம்பர் மாதம் திருப்பூரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் 10வது,12 வதுபடிக்கும் தந்தையிழந்த குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டது.

மேலும் மரத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கி அவர்கள் மூலமாக சுமார் 90 மரக்கன்றுகள் நட்டு அதை பாதுக்காக்கும் பொறுப்பையும் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது.

700 மாணவர்கள் படிக்கும் திருப்பூரில் உள்ள பிச்சம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி செட் வாங்கி குடுக்கப்பட்டுள்ளது
அய்யன்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 50 ஆங்கில அகராதி வழங்கப்பட்ட்து.

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நடப்பு செயலாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய ஒரு நூலகம் கட்டப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திறப்புவிழா நடைபெறவிருக்கிறது.

நூல்கள் வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்கள் (சங்க இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்கள்) வழங்கலாம்.

இந்த நூலப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்கள் தொடர்ப்பு கொண்டால் மேலும் அதுபற்றிய விவரங்களை தருகிறேன்

பாரமறியா மனது




 நீண்ட நேர நடையில் துவண்ட கால்கள் மெதுவாக பயணம் தொடர, சுழலும் கண்களில் தெண்பட்டார் ஒரு சீன மூதாட்டி கைகளில் தூக்க முடியா சுமையுடன்..... முகத்தில் தெரிந்த கோடுகள் அவரின் அனுபவத்தை பறைசாற்றின. வளைந்த முதுகு பாரங்களை ரொம்ப நாள் தூக்கியதன் சாட்சியாக தெரிந்தது.

மெதுவாக அவர் பாதங்களை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தார். இந்த வயதில் நாம் எப்படி இருப்போம் என்ற சிந்தனை மனதில் மின்னலென மின்...
னிவிட்டு சென்றது. உயிரோடே இருக்க மாட்டாய் என்று புத்தி இடியாய் உரைத்தது. அவர் அருகாமையை நெருங்க ஆரம்பித்தவுடன் அந்த சுமைகளை வாங்கிக் கொள்ள மனம் துடித்தாலும் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் பேசாமல் மெதுவாக நகர்ந்தது கால்கள்.

சுமைகளை கீழறிக்கி சிறிது ஓய்வுக்கு பின்னே தூக்க முனைந்தார். இதற்கு மேல் பொறுக்க இயவில்லை.

“நான் எடுத்து வந்து தரட்டுமா” எனக் கேட்டேன்.

என் குரல் எனக்கே கேட்கவில்லை.

சிநேகமாக புன்னகைத்து “என்ன” என்றார்.

“பாரம் அதிகமாக இருக்கிறதே, நான் தூக்கி வரட்டுமா” என்றேன்.

“தினமும் தூக்குகிறேன்.பாரமாக தெரியவில்லை” என்றார்.

கண்கள் விரிய அவரைப் பார்த்தேன். அவர் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்

பழகிப் போனால் பாரத்தின் சுமை உரைக்காதோ மனதிற்கு.

காணவில்லை என் கனவை




 இமைகள் மூடியதும் கதவு தட்டுகிறது
இமைக்கதவை திறக்கையிலே காணாமல் போகிறது.
அழைப்பு மணியை அடித்து விட்டு ஓடும்...
பக்கத்துவீட்டு சிறுமி போல

புத்தி அடுக்களிலும் துழாவ எத்தனிக்கையில்
தடையமே விட்டுவைக்காத அதன் அறிவு புரிகிறது.

மீண்டும் தட்டுமோ என்ற ஆசையில் இமைக்கதவை மூடுகிறேன்.
விழிகளின் அசைவில் என் விழிப்பை உணர்ந்ததனால்
கைக்கெட்டா தூரத்திக்கு பறந்தே விட்டது.

துளாவித் தருமாறு பிரபஞ்சத்திடம் மனு போட்டேன்.
அதுவோ தினம் ஒரு கனவை எனக்கனுப்பி அடையாளம் கேட்கிறது.

என்றேனும் ஒருநாள் கதவு தட்டும் என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு முறையும் இமை மூடுகிறேன் ஆசையோடு.

நெஞ்சம் கலங்கடிக்கும் நின் அவதாரங்கள்


வாழ்க்கையில் யாதுமாகிறாய் ஒரு நிமிடம்
கனவெனெ காணாமல் போகிறாய் மறு நிமிடம்
மிட்டாயை தொலைத்த சிறுபிள்ளையாக
சித்தம் கலங்கியே போகிறேன் சில நிமிடம்

கோபத்தின் உச்சியில் கலங்கடிக்கிறாய் ஒரு நிமிடம்
முத்தத்தின் ஈரத்தில் மயக்குகிறாய் மறுநிமிடம்
உணர்ச்சி வெள்ளத்தில் தேன் உண்ட வண்டாய்
மயங்கியே தோள் சாய்ந்தேன் சிலநிமிடம்

ஆசானாய் அவதரிக்கிறாய் ஒரு நிமிடம்
பிள்ளையாய் மாறிப் போகிறாய் மறு நிமிடம்
கையாள தெரியாமல் தவிக்கிறேன் சில நிமிடம்

வற்றிய கிணறாக ஓர் நிமிடம்
கொட்டும் அருவியாக மறுநிமிடம்
செய்வதரியாது திகைப்பில் சில நிமிடம்.

சண்டைக் கோழியாக ஒரு நிமிடம்
அமைதி புறாவாக மறுநிமிடம்
குழப்பத்தின் உச்சத்தில் நீந்துகிறேன் சில நிமிடம்

நிமிடங்களையெல்லாம் சிறையெடுத்து
அன்பின் ஆழத்தில் ஆழ்த்தி
திணரடிக்கிறாய் காலமெல்லாம்.

உன் கைகளுக்குள் பொத்திக்கொள்ளுவதால்
சூழாவளிகளையும் சூட்சமமாக வென்று
புதைந்து கொள்கிறேன் உன்னுள்

நினைவினில் நீ


கண்களில் காவியமெழுதி
சிந்தையைச் சிறைப்பிடித்து
கவிதையாக உன் நினைவுகளை
நிரப்பி வைத்தாய் நிறைகுடமாக...
...
மூடிய இமைகளுக்குள் காட்சியாக
உன் பிம்பத்தை விரிய வைத்தாய்.

முன்னம் தந்த முத்தமெல்லாம்
திகட்டாத தேனாக நெஞ்சினில்
இனிதான கானம் பாட

மஞ்சத்தில் கண்விழித்து
நெஞ்சத்தில் உனைநிறுத்தி
பஞ்சத்தில் பசியாறும்
பாமரனாக மிச்சமில்லாமல்
நினைவுகளை அசைபோட்டு
நித்திரைக்கு இரையாகிறது
நிர்மலமான மனம்

யாருமில்லா புல்லாக


சுழற்றியடிக்கும் சூறாவளியில்
சிக்கித்தவிக்கும் சிறுஎறும்பாக
எண்ணங்களின் கொந்தளிப்பில்
காணாமல் போகிறேன்........

பற்றிடவும்,பாதுகாத்திடவும்
பாரினில் யாருமின்றி
தனிமையில் திரிகின்றேன்.

அலை அலையாக எண்ணங்கள்
மனக்கடலை ஆட்சிசெய்ய
புரியாதது புரிந்தும்
புரிந்தது புரியாததுமாய்
யாருமில்லா புல்லாக
புவியினில் கிடக்கின்றேன்.

நீண்ட நெடும் பயணம்


சிறகசைப்பில் சிதறிய சிறு இறகாய்
நீண்ட பெருவெளியில் நிதானமாக
நீந்துகிறேன் நீண்ட கனவுடனே.....

காற்றின் திசைக்கேற்ப பயணத்தின்...
பாதைகள் மாறுபட, உள்வாங்குகிறேன்
புது புது அனுபவங்களை அடுக்கடுக்காய்.

அனுபவ ரேகைகள் கூட கூட
ஆழ்கடலாக மனதும் மாற
அடிமுடி தேடும் பயணம் துறந்து
ஆர்ப்பாட்டமில்லாமல் இறங்குகிறேன்
மண்ணில் முகம் புதைக்க.........