Wednesday, December 28, 2011

மாறிய நாதம்

எங்கிருந்தோ ஓர் நாதம்
செவி வழியே இதயம் நிரப்ப
ஒவ்வொரு அணுவும் ஆனந்த கூத்தாட

மனதின் பூரிப்பை இதழ்கள் காட்ட
மகிழ்ச்சி பூக்கள் எங்கும் பூக்க
வண்ணத்து பூச்சியானேன்.......

சுகமான நாதம் லயம் மாறி
இதயம் கிழிக்க....

வண்ணங்கள் இழ்ந்த வானவில்லானேன்

நாதத்தின் தன்மையும் மாறும் காலம் எப்போதோ??
வண்ணங்கள் கூடும் நேரம் தான் வருமோ??

மண்டியிடுகிறேன் காலத்தின் முன் கேள்விக்குறியோடு.......


மழை

இருட்டிய வானம்
இருளைப் போர்த்தி கொள்ள
என்னையும் அறியாமல்...

வேகமெடுத்த கால்களில்
வீடுசேரும் வேகம்
மழை வருமுன்

பைக்குள் குடையை
தடவியது கைகள்...!
மனமோ மழையின்
வருகையை எதிர்பார்த்தபடி...

ஒரு துளி கைகளில் பட...
சந்தோச வெள்ளம் மனமெங்கும்

மழை தூரல்கள்.....

சடசடவென மேனி நனைக்க
மனம் மத்தாப்பாய் பூரிக்க
நடை மெதுவாக....

முழுதாய் மழையில் நனைந்தபடி
நான்....!!

குடையை விரிக்க மனமில்லாமல்....

ஆராய்தல்

வானம் ஆராய பிரபஞ்சம் தெரியும்
மனம் ஆராய கடவுள் தெரியும்
எழுத்தை ஆராய எண்ணங்கள் தெரியும்
செயல்கள் ஆராய காரணங்கள் தெரியும்
அன்பை ஆராய சுயநலம் தெரியும்
தோல்வி ஆராய வெற்றியின் வழிகள் தெரியும்
துன்பம் ஆராய வாழ்க்கையின் சூச்சமம் தெரியும்
முறிவை ஆராய புதிய தொடக்கம் தெரியும்
ஆராய்ந்தால் நிரந்தரமில்லை ஏதும் என்று தெரியும்

உடைந்த பிம்பம்

மலராய் இருப்பாயென அகமகிழ்ந்திருக்க
முள்ளாய் கீறுவதேன்....

தென்றலாய் வீசுவாயென எதிர்பார்த்திருக்க
புயலாய் மாறியதேன்....

இசையாய் இருப்பாயென நானிருக்க
இடியாய் இறங்கியதேன்...

மழைச்சாரலாய் வீழ்வாயென மகிழ்ந்திருக்க
புயல் மழையாய் புண்படுத்துவதேன்...

பூமியைப் போல் பொறுமை காப்பாய் என்றிருக்க
எரிமலையாய் சீறுவதேன்...

சுபராகமாய் குளிர்விப்பாயென செவிசாய்த்திருக்க
அபஸ்வரமாய் மீட்டுவதேன்...

கலங்கரை விளக்காய் வழிகாட்டுவாயென காத்திருக்க
சுனாமியாய் தாக்குவதேன்...

கர்ப்பகிரகமாய் அருள்புரிவாயென இறுமாந்திருக்க
பொருட்காட்சி பொம்மையானதேன்...

வேறுபாடுகள் கலைவாயென கனவுகண்டிருக்க
மெளனமாய் இருப்பதேன்...

வார்த்தைகள் தொண்டையில் சடுகுடு ஆட
சோகம் இதயத்தில் நர்த்தனமாட
பேரலையில் சிக்குண்ட படகாய் புத்தி தள்ளாட
செய்வதறியாமல் மனம்...

Tuesday, December 27, 2011

கனவு கண்டோம் நாங்களும்

கனவு கண்டோம் நாங்களும் ......அன்று
நாட்டையே உருமாற்றும் ஒரு அக்னிக்குஞ்சாக....
அநியாயத்தை தட்டிக் கேக்கும் ஒரு தலைவியாக......
எல்லோரும் வியக்கும் ஒரு மனிதனாக.........
விண்ணுலகையும் ஆளும் ஓர் தேவதையாக.......

இன்றோ
காலத்தின் கைகளில் வெறும் தலையாட்டி பொம்மையாய்,
எண்ஜான் வயிற்றுக்கு இலட்சியத்தை விற்கும் மேதாவியாய்,
சுயநலமே தலைதூக்கும் குடும்ப தலைவியாய்,
போராட்டமே இல்லாத மண்புழுவாய்.

நதி நீரில் மிதக்கும் இலைபோல
எதிர்த்து போரிடவும் எண்ணமின்றி
கழிகிறது காலம்.......
இன்னும் கனவுகளுடனே.......