Wednesday, February 29, 2012

எனைத் தாங்கும் காதல்தடயமே இல்லாமல்
நுரையீரல் நிரப்பும்
சுவாசம் போல
நானறியாமல் என்னுள்
நிரப்பிச் சென்றாய்
உன் காதலை.


தேரை போல் என் இதயம் புகுந்து
அன்பையும், கோபத்தையும்
உணவாக்கி வளர்கிறது உன் காதல்


உன் அன்பில் கரைந்து காற்றாகி
பெரும் ஓசை எழுப்புகிறேன்
மூங்கில் காட்டினிலே.....
எனை அழகாய் செதுக்கி
புல்லாங்குழல் இசையாக்குகிறாய்.


உன் அன்பெனும் தேன்குடித்த
வண்டாய் கிறங்கித்தான் கிடக்கிறேன்
காம்பாய் எனைத் தாங்குகிறாய் நீ.


மலரின் கனம்தாங்காது சரியும் தண்டாய்
உன் அன்பின் வீரியம் தாங்காது
சரிகிறேன் உன் மார்பினிலே


முட்களான பாதைகளில்
எனை ஏந்தி
இரத்தம் வடிக்கிறாய் நீ


உன்னால்
அடைகாக்கப் படுகிறேன்
அனுதினமும் அழகாய்.
அடம் பிடிக்கும்
குழந்தையாகிறேன்
உன்னிடம் மட்டும்


சூரிய ஒளி பிரதிபலிக்கும்
நிலவைப் போல
உன் அன்பை தூவுகிறேன்
என் வழியெங்கும்.


உன் அன்பை உரமாய் கொண்டு
என் இலட்சியங்கள்
வளர்கிறது செழிப்பாய்.

Tuesday, February 28, 2012

இதயத்துக்குரியவனேஎன் கண்வழி உள்புகுந்து
இதயத்தில் சிம்மாசனமிட்டு
என் உணர்வுகளை ஆள்பவனே


என் உணர்வுகளுக்கு
உயிர்கொடுக்க
உயிர்த்தெழுகிறாய்
எழில்மிகும் ஓவியமாய்
என்னுள்ளே


எனக்கானதை எல்லாம்
உனக்காகவே
சாசனமிட்டுத் தருகிறேன்.


ஆதவனின் வெப்பத்தில்
பனியுருகி நதியாவதுபோல்
உன் அன்பின் கதகதப்பில்
என் உயிர் உருகி
வழிந்தோடுகிறது
கண்ணீர் துளிகளாய்.


நாள்கணக்காய் பேசித்
தீர்த்த பின்னும்
பேசாத உணர்வுகள்
கடலளவாய் மீந்திருக்க
மொத்தமாய் மொழிபெயர்க்கிறேன்
மொழியை ஓர் முத்தமாய்.


ஒலிக்கான வேகத்தை
மனமும் கொள்ள
ஈடு கொடுக்கத்
தெரியா மொழியோ
மெளனத்தைப் போர்த்திக் கொள்ள,


கருசுமக்கும் தாயாய்
மெளனம் அடர்த்தியாய்
சுமந்திருக்கும் நினைவலைகளை
விரல்கள் பிரசவிக்க
உனக்கான கவிக்குழந்தை
அழகாய் இதழ்விரிக்கிறது.


மிகு காதல்


காட்டும் அன்பில்
கூடும் இன்பம்
இதயத்தில் நுழைந்து
மலர்கிறது இதழ்களில்
 

புல்லாங்குழல் புகும் காற்று
இசையாவது போல்
உன் நினைவுகள் என்னுள்
கவியாகிறது


வாலியின் முன் பலம் இழக்கும்
எதிரிபோல
உன்முன் எனை இழந்து
வெற்றுப் படகாகிறேன்


நீர் தேடும் வேரின் தாகம் போல
என் சிந்தனைகள் உனை நோக்கியே
தவம் கொள்கின்றன.
 

கண்ணிமைக்கும் நேரத்தில்
கர்ப்பத்தின் பாதுகாப்பை
தந்தாய் உன் அணைப்பினிலே


பற்ற வைத்த மத்தாப்பாய்
வெடிக்கின்றன் உன் நினைவுகள்
என்னுள்
 

நீயில்லா நொடிகளில்
உன் நினைவலைகள்
எனைத் தின்ன
தேய்ந்து தான் போகிறேன்
என்னுள்ளே


உன் எண்ணங்களுக்காய்
ஏகலைவன் போல்
விரல் தரவும் சம்மதமே.....


Monday, February 27, 2012

மனிதம் இழந்த மனிதன்அதிகாலை பனித்துளிகள்
ஆழ்ந்து தன்னுள்ளே விழ
அழகாய் இதழ் விரிக்கவும்,
மஞ்சள் வெயில் மாலையிலே
இதழ் உதிர்க்கவும்
மருகுவதில்லை மலர்கள்

பழுத்த இலைகளை
உரமாக்க உதிர்ப்பதற்கும்
உணவுக்காய் புதிதாய்
இலைகளைத் துளிர்ப்பதற்கும்
சோர்வதில்லை மரங்கள்

நீருக்கு நெடும் பயணம் செய்யும்
வேர்கள் என்றும் கர்வப்பட்டதில்லை
அச்சாணியே தானென்று

வேர்கள் சோர்ந்தாலும்
தாங்கும் விழுதுகள்
இகழ்வதில்லை வேர்களை
எப்பொழுதும்.........

மனிதம் தொலைத்த மனிதன்
ஆர்ப்பரிக்கிறான்
எல்லாச் செயலிலும் தான்
வெறும் இயக்கம் மட்டுமே
என்பதறியாமல்

Sunday, February 26, 2012

உன்னருகில் நான்


பொருநையில் பொதிந்த
பொழுதுகளில்
புலரும் என் நினைவுகளில்
கழிகிறது காலம்.

என் கண்ணசைவில் உயிருணரும்
வித்தகனாய் நீயிருந்தாய்
நிழல் போல என்னருகில்

அன்று அத்தனை வார்த்தைகளும்
மெளனம்தின்ன
மொழிமறந்து மெய்மறந்து
ஊமையாய் வீற்றிருந்தேன்

மகுடிக்காடும் பாம்பு போல
உன் சொல்லுக்கு ஆடியது
என் உயிரின் செயல்கள்

நடுங்கும் கரங்களில் உணர்ந்த அன்பில்
மெதுவாய் நீ அணைக்க
உயிர் உருகி உன் தோள் சாய
அந்த மணித்துளியை
மனமும் மனனம் செய்ய
உள்ளுக்குள் நிகழ்ந்திட்ட
அற்புதமே அமுதென
உயிர் காக்கும் இரகசியம் அறியாயோ

உன் ஓர் தீண்டலில்
உயிர்த்திட்ட செல்களெல்லாம்
இன்னொருபிறவிகான காத்திருக்கிறது
உன் மறுதீண்டலில்

ஒட்டகமாய் உன் நினைவுகளை
சேர்த்து வைத்து உயிர் வாழ்கிறேன்
உனை மறுமுறை காண....

செல்லக் குட்டி


கதிரவனைக் கண்ட பனியாய்
உருகுகிறேன் உன் அம்மா
என்ற அழைப்பினில்

என் கோபங்களெல்லாம்
தற்கொலை செய்துகொள்கின்றன
உன் புன்சிரிப்பின் முன்னே

மலைகளெல்லாம்
மடுக்களாகிறது
உனக்காக என்பதனால்

மரணத்தின் முன்
மன்றாடுகிறேன்
கால அவகாசம் வேண்டி
உன் வளர்ச்சியை காண

உன் கைப்பிடித்து நடக்கும்
காலத்திற்காய் கனவுகளோடு
காத்திருக்கிறேன்

என் அத்துனை பாசத்தையும்
மிச்சமில்லாமல் உனக்குச்
சொல்ல முயற்ச்சித்து
தோற்கிறேன் ஒவ்வொருமுறையும்
வார்த்தைகளில்லாமல்

உன் கண்வழியாய்
காட்சிகள் காண
எல்லாம் அழகாய் தெரிகிறது

உன்னை நேசித்து
உனக்காய் யோசித்து
உனக்காய் சுவாசிக்க
உலகமே உன்னதமாகிறது

வரம் கொடு


எல்லா உயிர்களையும்
என் குழந்தைகளாய்
பாவிக்கும்
வரம் கொடு


எந்தச் சூழலிலும்
இயல்பைத் தொலைக்கா
வரம் கொடு


மெழுகுவர்த்தியாகா விட்டாலும்
ஏற்றும் தீக்குச்சியாக
வரம் கொடு


நீர்வீழ்ச்சியாகா விட்டாலும்
பாலைவனத்தில்
தாகம் தணிக்கும்
நீரோடையாகும்
வரம் கொடு


சிகரம் தொடாவிட்டாலும்
முயல்பவர்களுக்கு
ஏணியாகும்
வரம் கொடு


அச்சாணியாகா விட்டாலும்
ஓர் ஆணியாகவேனும்
வரம் கொடு


வெறுப்பெனும் விஷம்
தந்தாலும் அதை
அன்பெனும் அமுதமாக்கும்
வரம் கொடு


Wednesday, February 22, 2012

ஆசைப்படு

மலர்கள் மேல் ஆசைப்படு
பறிக்கத் தோன்றாது. 

விலங்குகள் மேல் ஆசைப்படு
கொல்லத் தோன்றாது

துணையின் மேல் ஆசைப்படு
துன்புறுத்த தோன்றாது 

குழந்தைகள் மேல் ஆசைப்படு
வன்முறை தோன்றாது. 

வாழ்க்கை மேல் ஆசைப்படு
விரக்தி தோன்றாது 

மனிதர்கள் மேல் ஆசைப்படு
வெறுப்பு தோன்றாது 

உன்மேல் ஆசைப்படு
தன்னிரக்கம் தோன்றாது

இலட்சியங்கள் மேல் ஆசைப்படு
தடங்களே தோன்றாது

வார்த்தைகள் மேல் ஆசைப்படு
மெளனம் தோன்றாது

ஆசைகள் துறந்தவனில்லை புத்தன்
ஆசைகள் கடந்தவன்

எல்லாவற்றிக்கும் ஆசைப்படு
வாழ்க்கை அர்த்தப்படும்.

Tuesday, February 21, 2012

நீ இல்லாத ஓர் நாள்


உன்னைக் காணாது என் உயிர்
மறிப்பதை அறியாயோ...
  
நகரும் நொடிகள்
என்னுள் உனை
முழுதாய் ஓவியமாக்க,
விழிநீரும் அழிக்காதிருக்க,
விழுங்குகிறேன் புன்னகையால்.

என் செவிகளின் தவம் அறியாதவனா
உன் ஒற்றைச் சொல்லுக்காக
ஓர் உயிர் தவிப்பதை உணராயோ?

நேரமில்லையா? மனமில்லையா
மங்கையிவள் மனதின்
மயக்கம் போக்க

உனக்காய் உயிர் சொட்ட சொட்ட
உருகுவதை அறியாயோ?

தனியாய் தவிப்பதுமேன்
உனக்காய் தோள்
கொடுக்க நானிருக்க

Monday, February 20, 2012

புரியாத புதிர்


திராவகத்தை ஊற்றிய பின்னும்
நம்பிக்கை பூ மலர
காத்திருக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


வாழ்க்கைச் சதுரங்கத்தில்
புத்தியைப் பின்பற்றாமல்
தோல்வியைத் தழுவும் மனம்
புரியாத புதிர் தான்.


பாலைவனத்தில் நீர்வீழ்ச்சியை
கற்பனை செய்து வாழ்க்கையை
வீணடிக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


அமுதமென நினைத்து பருக
விடமாய் போனதை
விழுங்கவும் முடியாமல்,
உமிழவும் முடியாமல்
தத்தளிக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


அன்பைச் சொல்ல எண்ணி, அதை
கோபமாய் வெளிப்படுத்தி
செய்வதறியாது விழிக்கும் மனம்
புரியாத புதிர் தான்.


அன்பினால் நிகழும் அத்துனையும்
கடமைக்காய் நிகழ
கனவுகளைத் தின்று வாழும் மனம்
புரியாத புதிர் தான்.


பாதை முழுவதும் முள்ளாய் இருக்க
மலரைத் தேடியே
கிழிபட்டும் அயராது
பயணம் தொடரும் மனம்
புரியாத புதிர் தான்.

Sunday, February 19, 2012

அன்பெனும் சிறகுக்குள்


கரை தொடும் அலைபோல
  மனமும் வருகிறது உனைநோக்கியே.

கடவுளுக்காய் பூக்கும் மலர்போல
   பூக்கிறது என் வாழ்க்கை உனக்காக.

எங்கே பறந்தாலும் உன் அன்பெனும்
  கயிற்றால் கட்டுண்ட காத்தாடியாய் நான்.

என் அத்துனை கோபங்களையும் கொன்று போடுகிறது
  நீ உதிர்க்கும் ஒற்றைச் சொல்.

என் கோபத்திலும் அன்பின் ஆழத்தை மட்டுமே
  உணரும் அன்னப்பறவை  நீ

எங்கே வீழ்ந்தாலும் தாங்கும் கரமாய் நீயிருக்க
  இனிதாய் தொடர்கிறது என் பயணம்.

Tuesday, February 14, 2012

ஒன்றோடு ஒன்றுதன் வாரிசை முதலாய் தழுவுகையில்

மெதுவாய் துளிர்க்கிறது
ஆணுக்குள் இருக்கும் பெண்மை.


ஆணின் பெண்மையை உணர்கையில்
பெண்ணின் ஆண்மை
கவசமாகிறது அவனுக்கு


நந்தவனமாய் வருகை தந்த
குழந்தையின் தீண்டல்களில்
வேர் விட்டு வளர்கிறது
ஆணின் பெண்மை


ஆலமரமாய் ஆணின் பெண்மை 

நிழல்தர தாங்கும் விழுதாய் 

பெண்ணின் ஆண்மைஇவ்விரண்டும் அழகாய்
மணம் வீசுகிறது

பிள்ளைகளின் வாரிசுகளால்.


Sunday, February 12, 2012

வாழ்க்கை இதுதானோ


ஆவியாயிருந்து ஆன்மாவாகிறேன்
இப்பிரபஞ்சத்தில் ஓர் நாள்.

கொடுக்கப்பட்ட வாழ்க்கை புள்ளிகளில்
பலர் என் கை பிடித்து கோலம்போட
வெறும் பார்வையாளனாய் நான்..............

இயக்கத்தின் சூட்சமம் உணர்ந்தவுடன்
இயக்குபவன் நான் என்ற இறுமாப்பு
இல்லாமல் போக..........
ஏதோ ஒன்று  ஆட்டுவிக்க
வெறும் பொம்மையாகிறேன்..........

ஆணிவேர் என்ற கர்வம் உடைய
பற்றும் பற்றற்று பறக்க
வாழ்க்கை புத்தகத்தில்
வெறும் வாசிப்பாளனாய் மட்டுமே நான்....

வினைகளுக்கு எதிர்வினைகளாகவே
முடிகிறது ஆயுள்...
அடுத்தமுறையேனும் நானாக வாழும்
கனவோடு ஆவியாகிறேன் மீண்டும்...........

Monday, February 6, 2012

தீர்ந்து போனது


விடியல் கண்ட பனித்துளியாய்
தீர்ந்து போனது
கோபம் கடைசி சுவாசத்தில்

அன்பான துணையால்
தீர்ந்து போனது
காதல் மேல் கொண்ட மோகம்

எரிமலையாய் வெடித்த வெறுப்பு கூட
தீர்ந்து போனது
அன்பெனும் மழையால்

பாறையின் கர்வமும்
தீர்ந்து போனது
வேரின் ஊடுருவலால்

மரண பயம் கூட
தீர்ந்து போனது
மரணத்தின் வாசலில்