Friday, August 10, 2012

மலரும் நினைவுகள் - 4ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும் போது நிறைய திட்டங்கள் உயிர் பெற்றிருக்கும். ஆனால் அம்மா வீட்டு வாசற்படி எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும்.

“நிறைய வேலை இருக்குனு சொன்னியே அனி” அம்மா

“எல்லாம் அடுத்தமுறை வரும் போது பார்த்துக்கலாம்மா” இது ஒவ்வொருமுறை நான் செல்லும் போது பரிமாறப் படும் சம்பாஷைனைகளில் ஒன்று. 

ஆறுமாத அம்மாவின் பிரிவை ஆறு நாட்களுக்குள் சரிகட்டி விடத் துடிக்கும் மனதிற்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது குறைவாகவே தோன்றும். என்னவோ அந்த நாட்களில் தான் பூமி வேகமாய் சுத்துவதைப் போல் பிரம்மை ஏற்படும்.

அதுவும் அம்மாவிடம் ஒருமுறையாவது திட்டு வாங்கவில்லையென்றால் அந்தப் பயணமே அர்த்தமில்லாதது போல் ஆகிவிடும். எனது மகனிற்கு ஒரே சந்தோஷம்,அம்மாவையும் திட்ட ஒரு ஆள் இருக்காங்களேனு.....

அன்றும் அப்படித்தான் ஆனது

“அனி, பரண்ல இருக்கற உன்னோட பழைய புத்தகத்தையெல்லாம் பார்த்து வேண்டாததைத் தூக்கிப் போடேன், நான் குழந்தைகளைக் கொஞ்ச நேரம் வெளியில கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்”

“நானும் வரேன்மா”

“ஒன்னும் வேண்டாம்,இந்த வேலையை முடிச்சு வை நாங்க வரதுகுள்ள”

பயங்கர கோபத்தோடு பரணில் கை வைத்த எனக்கு கண்களில் பட்டது அந்த நோட் புக். இளநிலைப் படிப்பின் கடைசி நாளன்று அனைவரிடமும் வாங்கிய பிரிவு மடல். ஒவ்வொரு பக்கங்களை புரட்டும் போதும் மனதில் தோன்றிய உணர்வுகளை மொழியில் சிக்கவைக்க முடியவில்லை.

கரங்கள் ஒவ்வொருவர் எழுத்தையும் வருடுகையில்,மனம் அவர்களைப் பற்றிய எண்ணங்களை அசை போட ஆரம்பித்தது.

சம்பிரதாயத்துக்காய் சில எழுத்துக்கள்
அக்கரையுடன் சில எழுத்துக்கள்
அன்பொழுக சில எழுத்துக்கள்

எதையோ சொல்லத் தொடங்கி சொல்லத் தெரியாமல் பாதியில் விட்ட சில எழுத்துக்கள்.


பாதிப்பேரின் முகம் நியாபகப்பெட்டகத்திலிருந்து காணாமல் போயிருந்தது.
சில பேரின் முகம் மங்கலாய் கண்முன் நிழலாடியது.
சிலரின் முகமோ கல்வெட்டாய் மனதில் காட்சிதர
பின்னோக்கி நகர்கிறது காலம்.

எத்தணை சண்டைகள், சமாதானங்கள்,கோபங்கள்,அன்புப் பரிமாறல்கள். நட்பு எனும் கயிறு அனைவரையும் இணைக்க, நட்புக்களே உலகம் என வாழ்ந்த காலம். வாழ்க்கைப் பற்றிய பயமேதுமில்லாமல் சுற்றித் திரிந்த காலங்கள்.

கடைசி நாள் உண்டென்று உணர்ந்தாலும், இனி தினமும் பார்க்கமுடியாதே என்ற எண்ணம் கண்களில் கண்ணீரைத் தாரை வார்க்க, மொழிகள் மெளனவிரதம் இருக்க, ஊமைகளாய் உணர்வுகளை எழுத்துக்களில் வடித்துத் தீர்த்தோம். மாதமொரு முறையாவது சந்திப்பது என்ற முடிவோடு பிரியாவிடை கொடுத்தோம். தைரியம் போல் நடித்து விட்டு, கண்ணீரோடு இரவைக் கழித்தது கண்களில் நிழலாடுகிறது இன்றும். அன்று தான் நான் நிறைய நண்பர்களை கடைசியாகப் பார்த்தது.வாழ்க்கை ஓட்டத்தில் திசைக்கொருவராக பிரிந்து விட்டோம்.

சந்திக்கவே கூடாது என நினைத்த சில முகங்கள்
சந்திக்க ஆசைப்பட்ட சில முகங்கள் என

யாரையும் சந்திக்காமலேயே நகர்கிறது காலம்.

“என்ன அனி பண்ணர, இன்னுமா சுத்தம் பண்ணலை” என்ற அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. அவசரமாய் பரணில் போட்டு விட்டு “பிளீஸ்மா, திட்டாத, அடுத்த முறை பண்ணித்தரேன் “ என்று சொல்லி விட்டு குழந்தைகளோடு விளையாட ஓடிவிட்டேன்,அம்மா திட்டுவதற்குள். ஆனாலும் அம்மாவின் திட்டு மெல்லியதாய் காதுகளில் ஒலித்தது. அப்புறம் என்ன........திட்டு வாங்காம ஜென்ம சாபல்யம் அடைவது எப்படி.

1 comment:

  1. வணக்கம்..தங்களுடைய வலைப்பூ, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். மேலும் விவரங்களுக்கு
    http://blogintamil.blogspot.in/2013/08/3.html

    ReplyDelete