Tuesday, October 18, 2011

பாக பிரிவினை

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வரும் சந்தோஷம், போகும் போது யாருக்கும் இருப்பதில்லை. 5 ஆம் ஆண்டு படிக்கும் நமது நாயகி அனுராதாவும் இதற்கு விதி விலக்கு இல்லை. டியூசனுக்கு போவதற்கு முன் சிறிது நேரம் விளையாட வேண்டி பள்ளி முடிந்ததும் ஓடி வந்தாள் வீட்டிற்கு.
வீட்டின் முன் கிடந்த பல ஜோடி செருப்புகள் அவளது புருவத்தை உயர்த்தின.அதில் அவளுக்கு பிரியமான அத்தையின் செருப்பை பார்த்ததும் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.
“அத்தைஎன்று கத்தி கொண்டே உள்ளே ஓடினாள்.அங்கே அத்தையின் வறண்ட சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது.அதற்குள் அம்மா அவளை கூப்பிட்டார்கள்.
“அனு,பெரியவங்க பேசர போது அங்க போய் தொந்தரவு பண்ணாதே
“ஏன்மா,அத்தை வரத என்கிட்ட சொல்லலஅம்மாவை கோபித்து கொண்டாள் அனு என்கிற அனுராதா.
“பேசாம சாப்பிட்டு விட்டு போய் விளையாடு,இன்னைக்கு டியூசன் போக வேணாம்
எப்பவும் அத்த வந்தா டியூசன் போகமாட்டேன் தான, விளையாட போகல அம்மா, எனக்கு அத்தை கிட்ட பேசனும்
“அனு,சொன்ன பேச்ச கேளு,இப்ப போய் தொந்தரவு பண்ணாத,திவ்யா வீட்ல விளையாடு,எல்லாம் முடிஞ்சதும் நானே கூப்பிடறேன்
அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை.அத்தை வீட்டிற்கு வந்தால் அவர்களை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருப்பாள்.இன்று அம்மா பேச்சை தட்ட மனமில்லாமல் திவ்யா வீட்டிற்கு சென்றாள்.
அத்தைக்கு திருமணம் ஆகும் வரை எல்லாம் அத்தை தான் அவளுக்கு. சாப்பாடு ஊட்டுவதில் தொடங்கி படுக்கும் போது கதை சொல்வது வரை எல்லாம் அத்தை தான். அடி பட்டாலோ,ஏதாவது வலி வந்தாலோ அத்தையிடம் தான் ஓடுவாள்.
அத்தை சொல்லும் கதைகள் அனுவிற்கு மிகவும் பிடிக்கும்.அதுவும் அவளைப் பற்றிய கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
அனு கட்டை விரல் அளவு தான் இருப்பாளாம் குழந்தையாய் இருக்கும் போது.அனுவை அத்தை குளிக்க வைக்கும் போது ஒரு நாள் காணாமல் போய் விட்டாளாம்.
தேடிப் பார்த்தா ,தண்ணீர் போற ஓட்டை வழியா தோட்டத்திற்கு போய்ட்ட குட்டி நீ அத்தை.
“அப்புறம் என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க அத்தை
“என்கிட்ட இருந்த பெரிய பூத கண்ணாடி வைச்சுதான் தான் குட்டி உன்ன தேடினேன்.என்ன பார்த்ததும் ஓடி போய் பூக்குள்ள ஒளிஞ்சுட்ட நீ
அப்புறம்
“ரொம்ப நேரம் தேடி பார்த்து,நீ கிடைக்காம போக, அத்த அழ ஆரம்பச்சுட்டேன், அப்ப நீ பூக்குள்ள இருந்து என்னை கூப்பிட்ட,அப்படியே உன்னை வாரி அனைத்து முத்தம் குடுத்தேன் 
“ரொம்ப அழுதையா அத்த
அத்தையை கட்டிக் கொண்டு தான் தூங்குவாள் அனு. நிறைய கதைகளின் முடிவுகள் சொல்லும் முன் தூங்கி விடுவாள்.
அத்தை கிட்ட கண்டிப்பா இன்னைக்கு கதை கேட்கனும் என்று நினைத்துக் கொண்டே திவ்யாவின் வீட்டிற்க்குள் சென்றால் அனு.
“அனு, சொத்து பிரிக்கராங்களா உங்க வீட்டுள இன்னைக்குதிவ்யாவின் அம்மா ராணி
“அப்படினா என்ன மாமி
“ஒன்னுமில்ல போய் விளையாடு
திவ்யாவுடன் விளையாடினாலும் மனம் அத்தையை சுற்றியே வந்தது. கவலையான அத்தையின் முகமே நியாபகம் வந்தது. நேரம் செல்ல,செல்ல அவளுக்கு அத்தையை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
மாமி ,நான் வீட்டிற்கு போறேன்
வேண்டாம் அனு, அம்மா வரும் வரை இங்கேயே இரு
“எனக்கு அத்தையை பார்க்கணும் “அழ ஆரம்பித்தாள் அனு
அதே நேரம் அனுவின் அம்மா வானதி உள்ளே நுழைந்தார்.
“எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா வானதி
“ஒரு வழியா முடிஞ்சுது மாமி,அவர் கோபமா இருக்கார்,அனுவை கூட்டிட்டு போறேன்,நாளை சொல்லறேன் எல்லாம்
அனு அத்தையை பார்க்க வேகமாக ஓடினாள் வீட்டிற்கு. வெறும் வீடு மட்டுமே வரவேற்றது அனுவை.
சாப்பிடாமல் அத்தை வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கும் மகளை பார்த்து திகைத்த படி நின்றனர் அனுவின் பெற்றோர்.

4 comments:

  1. மிக அருமையாக இருக்கு தோழி. பல வீடுகளில் நடக்கும் உண்மை.

    ReplyDelete
  2. கடைசி வரிகள் கனம்

    ReplyDelete
  3. உண்மையை அழகான கதை மூலம் சொல்லியிருக்கீங்க... கடைசி வரி மனசை கனக்க வைக்கிறது...

    ReplyDelete