Thursday, October 13, 2011

சிந்தனைத் தோழன் – தாத்தா

அன்று அந்த அறை மிக அமைதியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறான அமைதி. நானும் தாத்தாவும் இருந்தால், பேசிக்கொண்டேயிருப்போம். இன்று கண்கள் மூடி அமைதியாய்ப் படுத்து இருந்தார். முகத்தில் பெரிய சிந்தனை தெரிந்தது.அவரது கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தேன்.

“வலிக்குதா தாத்தா” 100வது முறையாகக் கேட்டேன்.

“இல்லடா அனிக்கண்ணூ” என்று தாத்தா சொன்னாலும் அவரது வலியை உணர முடிந்தது.

அவரது பெட்டிக்குள் இருந்த ஓலையை எடுத்துத் தரச்சொன்னார்.

அது அவரது ஜாதகம். நிறையமுறை அவர் படிக்கும்போது அருகில் இருந்திருக்கிறேன். “இதில் எழுதி இருக்கிற மாதிரியேதான் என் வாழ்க்கையில் நடக்கிறது அனிம்மா” என்று பல முறை வியந்திருக்கிறார்.
இப்ப எதற்குக் கேட்கிறார் என்ற குழப்பத்துடனேயே எடுத்துக் கொடுத்தேன்.

அமைதியாக படித்துவிட்டு...... அம்மாவை கூட்டி வரச் சொன்னார்.

“எனக்கு நேரம் வந்திருச்சுமா” என்றார்.
“என்ன மாமா சொல்றீங்க” அம்மாவின் கண்களில் கண்ணீர்.

நான் தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். மரணத்தைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறோம். ஆனாலும் தாத்தாவின் மரணம் தாங்கமுடியவில்லை. மறு பிறப்பில் அவருக்கு நம்பிக்கையில்லை.


”சக்கரம் சுத்தும்போது சத்தம் வருது, அது சுத்துறத நிறுத்திய பிறகு சத்தம் எங்கு போச்சுனு ஆராய்ச்சி பண்ணறதுல எனக்கு விருப்பமில்லை, மனம் சம்மதிக்காமல் மரணம் வராது அனி” என்றார்.

”என்னை விட்டுப் போய்ருவிங்களா” என்றேன்.
”மனம் வராது அனிமா, உன் கண்கள் கலங்கினால் மரணத்தை விரட்டிவிடுவேன்” என்று சொல்லி தாத்தா சிரித்தது நியாபகம் வந்தது.
”என்னை விட்டு போகமாட்டேனு சொன்னீங்களே” அழுதுகொண்டே கேட்டேன்.
“நீ அழும்பொழுது போகமாட்டேன்”என்றார்.ஏதோ மனதில் பாரமாய் அழுத்த தாத்தா தூங்கும் வரை அவருடனே இருந்தேன்..
எனக்கு மகாபாரதத்தை சொல்லிக்குடுத்தார். பிறகு ஒருநாள் என்னைக் கதை சொல்லச்சொன்னார். பாண்டவர்கள் ஐந்து பேர் என்று ஆரம்பித்தேன். ”ஏன் ஐந்து பேர்” என்றார். புரியாமல் விழித்தேன். ”யோசிடா.....ஏன் ஐந்து?” என்றார்.
”கதைய மட்டும் படிக்காதடா...என்ன சொல்ல எத்தனிக்கிராங்கனு யோசி”
”ஐம்புலன்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.” என்றார்
”கெளரவர்கள்?” என்றேன்
”நமது குணங்கள்” என்றார்
”கண்ணன்?” என்றேன்
”மனம்” என்றார்
”அப்ப மனம்தான் கடவுளா?” என்றேன்”கேள்வி கேள், உன்னை நீயே கேள்... அமைதியா யோசி.... காலப்போக்கில் எல்லாம் புரியும்” என்றார். எனக்கு ஒவ்வொன்றையும் சிந்திக்க கற்றுக்கொடுத்துவர். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.

 காலையில் கண் விழித்தபொழுது வீடே அமைதியாய் இருந்தது. தாத்தா அன்றைய பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். முகத்தில் சோர்வு நிறைய இருந்தது.
தாத்தாவை தொந்தரவு செய்யாமல் எனது வேலைகளைச் செய்து கொண்டு இருந்தேன். காலை உணவை எடுத்துக்கொண்டு தாத்தாவிடம் சென்றேன்.அவரால் அதிகம் பேச முடியவில்லை.

“வலி இன்னும் இருக்குதா தாத்தா?” என்றேன்.

”அதிகமாகுதுடா” என்றார்.
காலை உணவை அவருக்கு ஊட்டிவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து இருந்தேன். ஏதோ மனதில் இனம் புரியாத பயம். கண்களில் கண்ணீர் வழிந்தோட அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“அழாதடா......எதுவும் மாறாது நான் இல்லை என்றாலும்”

“விட்டுட்டு போகாதிங்க”

“உலகத்துல எதும் நிரந்தரமில்லை”

ஏதும் பேசவில்லை நான். அவர் அருகிலேயே இருந்தேன். நகர்ந்தால் போய்விடுவார் என்ற பயம்.

”நீ போய்ட்டு ஒரு மணி நேரம் கழித்து வா அனிம்மா”

“போக மாட்டேன்”

“முடியல கண்ணம்மா, போ, எல்லாம் சரி ஆகிடும்”

“என் கூடயே இருந்தரலாம் தான?”

“இருப்பேன்டா”

“நிசமா?”

“உனக்காகவே, உன் கூடயே இருப்பேன்டா”

“சரி, கொஞ்ச நேரம் கழித்து வரேன்”

”சரிடா, நிறைய நல்ல புத்தகம் தேடிப் படி”

“நீங்க இருக்கீங்க தானே?, நல்ல புத்தகத்தை தேடி குடுக்க”

என்னை விட்டுப் போகமாட்டார் என்ற எண்ணம் மகிழ்ச்சி தர அவ்விடம் விட்டு நகர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து தாத்தாவின் அருகில் சென்றேன் மதிய உணவை எடுத்துக் கொண்டு.

எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அழுகையோடே தாத்தா என்றேன். அதற்குள் எல்லோரும் வந்தார்கள். அம்மா அருகில் வந்து ”தாத்தா நம்மள விட்டுட்டு போய்ட்டாரு” என்றார்.

ஒன்றும் புரியவில்லை எனக்கு. தாத்தா பொய் சொல்ல மாட்டார்.

 “பொய் சொல்லி மத்தவங்களுக்கு வேணா நல்லவன் ஆகலாம், ஆனா மனசாட்சிக்கு” என்பார்.

இன்றும் எனக்கு யாராவது நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யும் பொழுது தாத்தாவின் உருவம் என் கண்களில் தோன்றி மறைவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

ஆமாம், தாத்தா என்றும் பொய் சொல்ல மாட்டார்.

16 comments:

 1. மனதைத் தொட்ட ஒரு பதிவு..

  இதுமாதிரியான தாத்தா ஒரு குடுப்பினை!

  ReplyDelete
 2. உங்கள் தாதா உங்களுக்கு மட்டும் அல்ல
  எங்களுக்கும் தான் சிந்தனைத் தோழன்.
  தோழனுக்கு மறு பிறப்பில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவரின் சிந்தனையின் மறு உருவாய் நீங்கள்...............

  ReplyDelete
 3. வாழ்க்கையின் ஆழத்தை தொட்டவர்கள் என்பதை அவர்களின் அனுபவம் காட்டிக் கொடுக்கிறது. தேர்ந்த சிந்தனையாளன் என்பதை அவனது எழுத்துக்கள் காட்டிக் கொடுக்கின்றன. சிறந்த ஒழுக்கமுடையவன் என்பதை அவனது வாழும் முறை காட்டிக் கொடுக்கிறது.

  உங்களுக்கு எல்லாவற்றையும் உங்கள் ”தாத்தா” காட்டிக் கொடுத்து விட்டார். அவரின் வார்த்தைகள் அழியாத வேதங்களின் சாரம்.

  மனிதன் என்றும் பேண வேண்டிய அருமையான பொக்கிசம் நம்முடைய முன்னோர்கள். தாத்தாக்களும், பாட்டிகளும் இல்லாது போன இன்றைய குடும்ப வாழ்க்கையால்தான் தலைமுறைகள் எல்லாம் தறுதலைகள் என்ற நிலைக்கு மாறி இருக்கின்றன.

  காலம் உள்ளவரை நம் பெரியோர்களை போற்றுவோம்.

  ReplyDelete
 4. மிக அருமை அக்கா,,
  ”ஐம்புலன்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.” என்றார்
  ”கெளரவர்கள்?” என்றேன்
  ”நமது குணங்கள்” என்றார்
  ”கண்ணன்?” என்றேன்
  ”மனம்” என்றார்
  ”அப்ப மனம்தான் கடவுளா?” என்றேன்”கேள்வி கேள், உன்னை நீயே கேள்... // ஆழ்ந்து படிக்கணும் யோசிச்சுப் படிக்கணும்,... நல்ல தாத்தா.

  ReplyDelete
 5. தோழி, இப்போ தாத்தா, சுற்றி நடந்தவைகளை பற்றி நல்லா தொகுத்து எழுதியிருக்கிங்க, ரொம்ப நல்லா இருக்குங்க அக்கா

  ReplyDelete
 6. கண்கள்
  பணிக்கின்றது
  பேச்சும்,எழுத்தும்
  என்னிடம் இல்லை

  ReplyDelete
  Replies
  1. தாத்தாவை நினைக்கும் நொடிகள் மெளனத்தின் இருப்பிடமாகவே இருக்கிறது

   Delete
 7. கண்கள்
  பணிக்கின்றது
  பேச்சும்,எழுத்தும்
  என்னிடம் இல்லை

  ReplyDelete
 8. சக்கரம் சுத்தும்போது சத்தம் வருது, அது சுத்துறத நிறுத்திய பிறகு சத்தம் எங்கு போச்சுனு ஆராய்ச்சி பண்ணறதுல எனக்கு விருப்பமில்லை, மனம் சம்மதிக்காமல் மரணம் வராது///உன் கண்கள் கலங்கினால் மரணத்தை விரட்டிவிடுவேன்/// தெளிவான மனம், அன்பான குணம், இப்படி ஒரு தாத்தா கிடைத்த நீங்கள் பாக்கியசாலிதான்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சுமன். என் முதல் உளி என் தாத்தா தான்

   Delete
 9. அன்பின் அனிதா ராஜ்

  சிந்தனைத் தோழன் - தாத்தா : பதிவு அருமை - மலரும் நினைவுகள் -

  அனிக்கண்ணு , அனிம்மா, அனி, அனிமா, கண்ணம்மா என அன்புடன் அழகாக அழைத்த அருமைத் தாத்தாவினை மறக்க இயலாதே அனிதா ராஜ்.

  //”சக்கரம் சுத்தும்போது சத்தம் வருது, அது சுத்துறத நிறுத்திய பிறகு சத்தம் எங்கு போச்சுனு ஆராய்ச்சி பண்ணறதுல எனக்கு விருப்பமில்லை, மனம் சம்மதிக்காமல் மரணம் வராது அனி” என்றார். //

  மனத்தின் அனுமதி இல்லாமல் மரணம் சம்பவிக்காது - தாத்தாவின் சிந்தனை :

  ”ஐம்புலன்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.” என்றார்
  ”கெளரவர்கள்?” என்றேன்
  ”நமது குணங்கள்” என்றார்
  ”கண்ணன்?” என்றேன்
  ”மனம்” என்றார்
  ”அப்ப மனம்தான் கடவுளா?” என்றேன்”கேள்வி கேள், உன்னை நீயே கேள்... // தாத்தா தாத்தா தான் அனிதா ராஜ்.

  நல்வாழ்த்துகள் _ நட்புடன் சீனா

  ReplyDelete
 10. உங்களுக்குச் சுயமாய் சிந்திக்க கற்றுக்கொடுத்துள்ளாரே உங்கள் தாத்தா.. அந்தச் சிந்தனைகளில் வாழ்கிறார்.

  ReplyDelete
 11. நெகிழ வைத்த பகிர்வு! அருமை!

  ReplyDelete