Friday, August 10, 2012

மலரும் நினைவுகள் - 5



சில நெருங்கிய உறவினர்களின் பெயர்களும்,முகங்களுமே பல வருடங்களுக்குப் பிறகு மறதிப் பட்டியலில் சேர்ந்து விடும். ஆனால் சில காலம் மட்டுமே பழகிய சிலரின் முகம் பசுமரத்தாணி போல் மனதில் பசுமையாக இருக்கும். அப்படி ஒரு நபர் தான் “விசாலம் அக்கா” அவரைப் பற்றிய சில நினைவுகள் இந்தப் பதிவில்.

விசாலம் அக்கா

விசாலம் அக்கா என்றாலே அவரது வேகம் தான் நியாபகத்திற்கு வரும். நான் அவரை முதன் முதலாக பார்த்தது அவரது 5 வயது குழந்தையுடன் தான். தீபாவளி சமயங்களில் கை முறுக்கு சுற்றித் தர வருவார். பாட்டிக்கு உதவிக்கு ஆள் தேவை எனும் போது வீட்டு வேலைகளில் உதவுவார். கடகடவென 200 முறுக்குகள் அரை மணி நேரத்தில் சுற்றி விடுவார். அவரது கைகளில் லாவகத்தை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருப்பேன்.

”எனக்கும் சுத்த ஆசையாய் இருக்கு அக்கா” என்ற போது கொஞ்சம் மாவை எடுத்து சுற்றுவதற்கு சொல்லிக் கொடுத்தார். அன்று முழுவதும் அந்த மாவு என்னிடம் பட்ட பாடு ஆண்டவனுக்கே வெளிச்சம். எப்படியோ ஒரு வழியாக கற்றுக் கொண்டு ஒரு முறுக்கு சுற்றுவதற்குள் அவர் 20 முறுக்குகள் சுற்றி முடித்திருப்பார். ”எப்பக்கா உங்கள மாதிரி வேகமா சுத்த வரும்” என்று ஆதங்கத்தோடு கேட்பேன். “வயித்துப் பொழப்பே இது தான் கண்ணு,வேகம் தானா வந்துருச்சு” என்பார்.

18 வயதில் ஒருவனைக் காதலித்து திருமணம் முடிந்த பிறகே அவனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பது தெரியவர, பெரிய பிரச்சனைக்குப் பிறகு குழந்தையுடன் தனியாக வாழ்கிறார் என்பதை அம்மாவில் மூலம் கேட்ட போது அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.அவரது பையன் சேகர் என்னை விட 6 வருடங்கள் சிறியவன். அப்பா இருந்தும் இல்லாத அவன் மேல் தனிப் பாசம் எப்போதும் உண்டு எனக்கு.

“அந்த ஆளு முன்னால என் பையனை படிக்க வைச்சு பெரிய ஆளாக்கனும்” என்று சொல்லுவார். ஒரு சிறிய அறை தான் அவரது குடித்தனம். அவனை நல்லவனாக வளர்த்த வேண்டும் என்பதற்காக அடித்துத் தான் வளர்த்தினார். அவர் சேகரைக் கொஞ்சி நான் பார்த்ததே இல்லை.அவன் ஒரு முரட்டுக் குழந்தையாகவே வளர்ந்தான்.

படிப்பிலும் சுமாரான மாணவனாகவே இருந்தான். எப்பொழுதாவது விசாலம் அக்காவுடன் வீட்டிற்கு வரும் போது ஒரு மூலையில் எதுவும் பேசாமல் அமர்ந்து இருப்பான். அம்மா,அப்பா எங்களைக் கொஞ்சும் போது, ஒரு ஏக்கமான பார்வையே அவன் கண்களில் இருந்து வெளிப்படும். “இங்க வாடா சேகர்” என்ற அப்பாவின் குரலுக்கும் பதில் வராது அவனிடமிருந்து. நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு பலகாரங்கள் கடையில் வாங்க ஆரம்பித்ததால் விசாலம் அக்காவை அதன் பிறகு பார்க்கும் சந்தர்பம் அமையவில்லை.

ஒரு நாள் பல் டாக்டரிடம் சென்ற போது அங்கே வேலை செய்து கொண்டு இருந்தான்
“அக்கா,என்னைத் தெரியுதா,சேகர்” என்றான்.நன்றாக வளர்ந்து இருந்தான். அடையாளமே கண்டு பிடிக்க முடியவில்லை.
“டேய் சேகர், நீயா, அடையாளமே தெரியலை, அம்மா எப்படி இருக்காங்க, என்னடா இங்க வேலை செய்யர,படிக்கலையா” என கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு இருந்தேன்.
“அக்கா, மூச்சு விடுங்க முதல்ல” என்று சிரித்தான்.முழுவதுமாய் மாறிப் போய் இருந்தான். முரட்டுத்தனங்கள் போய் அமைதியான பையனாக காட்சியளித்தான்.
”8வது முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்துட்டேன் அக்கா, அம்மாவை எங்கேயும் வேலைக்குப் போக வேண்டாமுனு சொல்லிட்டேன், அம்மாவை நல்லா பார்த்துகனும் அக்கா” என்று சொல்லும் போது குரல் லேசாக தழுதழுத்தது. அவனைப் பார்க்க பெருமையாய் இருந்தது. சின்ன வயதில் அவனது பொறுப்புணர்ச்சி ஆச்சரியமாக இருந்தது எனக்கு. அதே சமயம் வீட்டில் குழந்தைத்தனமாய் அடம்பிடித்து எல்லோரையும் படுத்தும் என்னை நினைத்து ஒரு ஓரத்தில் வெட்கமாக இருந்தது. நானும் இனிமேல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டேன். நம்ம சபதத்திற்கு ஆயுள் என்றுமே ஒரு நாள் தான் என்பது தான் ஊரறிந்த இரகசியமாயிற்றே.பொள்ளாச்சி விட்டு சென்ற பிறகு அவர்களைச் சந்திக்கவே இல்லை. திருமணம் முடித்து மும்பை சென்ற பிறகு பொள்ளாச்சி பக்கமே போகவில்லை.

ஒரு நாள் அலைபேசியில் அம்மா அழைத்த போது குரல் ஏனோ பிசிறு தட்டியது. நல விசாரிப்புகளுக்குப் பிறகு அம்மா சொன்னது காதில் இடிபோல் இறங்கியது.
“என்னமா சொல்ர, நல்லா தெரியுமா, நம்பவே முடியலை” என்றேன்.
“விசாலம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா அந்தப் பையனை, இப்படி பண்ணிட்டானே, காதல் தோல்வினு தற்கொலை பண்ணி அவளை நட்டாத்துல விட்டுட்டான்” என்று புலம்பித் தீர்த்து விட்டார்.
மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம் அது. தற்கொலை செய்யும் முன் ஒரு நிமிடம் தாயைப் பற்றி யோசிக்காத சேகர் மேல் கோபம் கோபமாக வந்தது. என்னை அறியாமல் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
காதலித்து ஏமாற்றிய தந்தை
காதலுக்காக தற்கொலை செய்து கொண்ட மகன்
இருவராலும் பாதிக்கப்பட்டது என்னவோ விசாலம் அக்கா தான்.




1 comment:

  1. ரொம்ப நல்லா இருக்கிறதுங்க அக்கா, கதை சிறு கதையா இருந்ததே என்று வருத்தம், உண்மை சின்னதாய் இருந்தாலும் பலம் அதிகம் என்பது நிரூபணம்

    ReplyDelete