Wednesday, June 26, 2013

மலரும் நினைவுகள்



படித்துக் கொண்டிருந்த ஸங்கீத் “அம்மா, நேத்து ஒரு ஸ்வீட் கனவு வந்துச்சு” என்று சொல்ல, நானும் மோகனும் அவனை நோக்கினோம்.
“என்னடா குட்டி கனவு” என்றேன்.
“நான் வானத்தில பறந்தேன்மா” ஸங்கீத்
“அப்படியா தங்கம்,சூப்பர் “என்றேன்
“அங்க என்ன பார்த்த குட்டி” மோகன்
“பறவை மாதிரி பறந்தேன் நான்,அம்மாவை பார்த்தேனே” ஸங்கீத்
இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் மென்று விழுங்கினோம்.
“சரிடா குட்டி,முதல்ல ஹோம்வொர்க் முடி” என்றேன்
“அம்மா, நீ என்ன கனவு கண்ட நேத்து” ஸங்கீத்
“நேத்து நானும் பறந்தேன் வானத்துல....உன்ன கூட பார்த்தேனே, நீ அப்பாவை பார்த்தாயா” என்றேன்.
“இல்லமா, எங்க இருந்தார் அப்பா” ஸங்கீத்.
“சரிடா தங்கம் முதல்ல ஹோம்வொர்க் முடி” என்றேன்.

பேசாமல் படிக்க ஆரம்பித்த மகனை பார்க்க பார்கக மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. அவனின் கற்பனைகளுக்கு சமாதி கட்டிவிட்ட என்மீதே கோபம் வந்தது.

அவன் வயதில் இருந்த போது நான் புனைந்த கதைகளைப் வீட்டில் அனைவரும் மிக பொறுமையாக கேட்டு இரசிப்பார்கள். அந்தப் பொறுமை எங்கே போனது இப்போது.
இத்தனை படிப்பு சுமை இருந்ததாக கூட நியாபகம் இல்லை. படிப்பு வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்தது. இன்று படிப்பு மட்டுமே வாழ்க்கையாகி போனது.
படிப்பு கற்றுக் கொடுத்தது என்று பார்த்தால்......நாலு வார்த்தை ஆங்கிலம், வெளிநாட்டு கம்பெனியில் வேலையாளாக வாழ்நாளை கழிக்க கற்றதைத் தவிர பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் இலட்சியமாக மாறியதை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தாலும் நிசர்சனமான உண்மையாக நம் கண் முன் நிற்கிறது.
படிப்பு ஏன் பண்பைக் கற்றுத் தரவில்லை. வாழ்க்கையை வாழக் கற்றுத் தரவில்லை. பகுத்தறியும் குணம் படிக்காதவர்களிடமே மேலோங்கி இருக்கிறது. படிப்பு சுயநலத்தையும்,அகங்காரத்தை மட்டுமே கற்றுத் தருகிறதோ????

மெதுவாக அருகில் சென்று “நாய்க்குட்டி,அப்புறம் என்ன பார்த்த கனவுல” என்றேன். அவன் முகத்தில் 1000 வாட்ஸ் மகிழ்ச்சி மின்ன ஆரம்பித்தது.
“பறவைகள் எல்லாம் பக்கத்துல பறந்ததுமா” ஸங்கீத்
“பறவைகள் பேசுச்சா குட்டி”

“ஆமாம்மா, பாட்டு கூடா பாடுச்சு” ஸங்கீத்
“நானும் உங்க ரெண்டு பேரை பார்த்து கை அசைச்சேன் தெரியுமா” மோகன்

எங்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது.. மூடி வைக்கப்பட்ட கணித புத்தகம் பார்வையாளனாக அமைதியாக இருந்தது.. ஸங்கீத்தின் பேச்சிலும்,முகத்திலும் தெரித்த மகிழ்ச்சி வீடு முழுவதும் ஆக்ரமித்து சிரிப்பு அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. வாழ்க்கை மற்றுமொரு பாடத்தை அன்று அழகாக விளக்கிச் சென்றது.


 

1 comment:

  1. அன்பின் அனிதா ராஜ் - மலரும் நினைவுகள் அருமை - ஸங்கீத்தின் கற்பனையினை இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் - வெட்டி விட முயல்வது தவறு - கதை அருமை- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete