Saturday, January 21, 2012

கிறுக்கல்கள் : கடலெனும் போதிமரம்



”கடல் என்ற வார்த்தையே மனதில் இருக்கும் குழந்தைதனத்தை  தட்டி எழுப்பியது. அதுவும் கடற்கரையில் நிரம்பி இருக்கும் மனிதர்களை பார்க்கும் போது அவர்களின் குழந்தைத்தனம் மட்டுமே மேலோங்கி தெரிந்தது.

குழந்தைகளுக்காக அலையில் கால் நனைத்து தாங்களே குழந்தையாய் மாறிப் போன பெற்றோர்கள், மணலில் வீடு கட்டி விளையாடும் குழந்தைகள், கண்ணுக்கு தெரியும் தூரம் வரை தண்ணீர், அலைகளின் ஓசை, மனதிற்குள் இனம் புரியாத ஒரு நிம்மதியை தந்தது.

கையில் செருப்பை எடுத்துக் கொண்டு,கால்கள் மணலில் புதைய நடந்த போது சிறகடித்துப் பறந்தது மனம்.எத்தனையோ நாள் கனவு கடலில் கால் நனைப்பது.

சின்ன வயதில் வாய்க்காலில் விளையாடும் போதும், ஓடையில் கால் நனைக்கும் பொழுதும் எழும் கடல் பற்றிய கற்பனையை அடக்க முடியாது.

கடல் பற்றி தாத்தா சொல்லும் போது வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அடர்த்தியானது.

கல்கியின் ”பொன்னியின் செல்வன்”  கடலின் மீது இருந்த காதலை அதிகரித்தது. பூங்குழலியின் கடல் பயணம் பிரமிப்பை உண்டாக்கியது. கனவில் பூங்குழலியாய் கடல் பயணம் நிறைய செய்ததுண்டு.

கால்கள் வலிக்க நடந்து விட்டு மணலில் அமர்ந்த போது இயற்கை தாயின் அரவணைப்பில் இருப்பது போன்று எண்ணம்.

இயற்கையின் அதிசயங்கள் பிரமிக்க வைக்கின்றன. மனதை கடலோடு இரு விசயங்களுக்காக ஒப்பிட தோன்றியது.

அலைகள் என்பது கடலின் இயல்பு போல மனதின் இயல்பு தான் ஆசை,கோபம்,அன்பு,பொறாமை,பயம் போன்ற எண்ணங்கள். அடக்க முயலாமல் அனுபவித்து வாழ்வோம். எல்லா எண்ணங்களையும் அனுபவிப்போம்.கோபத்தை ,பயத்தை முழுதாய் அனுபவித்த பிறகு ஆராய்ந்தால் அவை நீங்கும் போது அன்பு எனும் மிகப் பெரிய ஆற்றலை நம்முள் விதைத்து சென்று இருக்கும்.

மனதின் ஓரமாக நின்று பார்த்தால் அலைகள் போல நமது எண்ணங்கள் ஓயாமல் ஓசை எழுப்பி கொண்டு தான் இருக்கும். மனதின் உள்ளே சென்றால் ஆழ்கடலின் அமைதியை அனுபவிக்கலாம்.

அலைகளில் நனைய,நனைய, மனதில் எழும் அத்துனை எண்ணங்களையும் அவைகள் தங்களோடு எடுத்து சென்று விட தெளிந்த நீரோடை போல் அமைதியாய் நான்.


1 comment:

  1. ஐயகோ ரொம்ப குளிருதே, இப்படி கடலலையில் தள்ளிவிட்டு நனைச்சிட்டீகளே.

    ReplyDelete