Thursday, July 12, 2012

மலரும் நினைவுகள்-1சில   நிகழ்வுகள் நம்  மனதில்  சாகாவரம் பெற்று விடுகின்றன. என்றேனும் நினைவுகளை அசைபோடும் போது துக்கமோ,சந்தோஷமோ நம்மை சில நிமிடங்கள் மெளனமாக்கி விடுகின்றன. எழுத்துக்களின் மூலம் உணர்வுகளை கரைக்க முயல்கையில் சில கண்ணீர் துளிகளாலேயே முற்றுப் புள்ளி வைக்க முடிகிறது. என் மனதை பாதித்த சில நிகழ்வுகளுக்கும், என் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு எழுத்துக்கள் மூலம் மீண்டும் உயிர் ஊட்டுகிறேன்.

முதலில் ”நம்பிக்கை கொன்ற மரணம்” என்ற தலைப்பில் ஒரு சிறு நிகழ்வை பதிவு செய்கிறேன்.நம்பிக்கை  கொன்ற  மரணம்


               மும்பையில் மகனுடன் லிப்டில் இருந்து வெளிவரும் போது தான் முதன்முறையாக லதாவை சந்தித்தேன். கையில்  இரட்டைக் குழந்தைகளுடன் முகம் நிறைய  தாய்மை பூரிப்போடு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு கீழ் அவர்கள் இருப்பது அன்று தான் தெரிந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு விடை பெற்றோம். 

             வாழ்க்கை ஓட்டத்தில் லதாவைப் பற்றி முழுவதும் மறந்து விட்ட நிலையில் தான் மீண்டும் அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.அந்த சந்திப்பு மகிழ்ச்சியை விட பெரும் அதிர்ச்சியையே அளித்தது. முடியெல்லாம் கொட்டி, மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவரை அடையாளம் காண்பது கூட சிரமமாகவே இருந்தது. அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்று தெரியவந்த போது மனம் பெரும் துக்கத்தை தனதாக்கி கொண்டது. அவரது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயம் கண் முன் விரிந்து மறைந்தது. 

            எனது தோழி அவரது எதிர் வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. லதாவினுடையது காதல் திருமணம் என்றும், 6 வருடம் கழித்து குழந்தைகள் உண்டான பிறகு தான் இருவீட்டாரும் அவர்களுடன் பேசுவதாகவும் கூறினார். குழந்தைகள் பிறந்து 6-வது மாதத்தில் நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருக்கிறது. அவரது தன்னம்பிக்கையும்,வாழ்க்கை குறித்து அவர் பேசிய விதமும் அவர் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.               

                உலக நடப்பை பற்றி நிறைய பேசுவார். அவருடன் பேசும் போது மரணத்தை எதிர்நோக்கும் ஒரு நோயாளிடம் பேசுவது போன்றே தோன்றாது.அவர் மிகவும் பலவீனமாய் இருந்ததால் குழந்தைகளைக் கூட தூக்கி கொஞ்ச முடியாத நிலை. குழந்தைகள் தூக்கிக் கொள்ள சொன்ன போது கண்களில் வலியுடன் கணவரை அவர் பார்த்த காட்சி பசுமரத்தாணி போல் இன்றும் மனதில் பசுமையாய் படர்ந்திருக்கிறது. 

           ஊருக்குச் சென்று முடிகாணிக்கை செலுத்தி விட்டு வந்த அன்று லதா என்னுடன் பேசியது இன்றும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. “முன்னாலேயே என்கிட்ட சொல்லி இருந்தா உங்க முடியை எனக்கு கொண்டு வந்து தர சொல்லியிருப்பேனே, இந்த சிகிச்சையினால் எனக்கு முடியே வளராதாம்,உங்க முடியை நான் உபயோகப் படுத்தியிருப்பேனே அனிதா” என்றார். 

              ”உங்களுக்கு எப்ப தேவையோ அப்ப சொல்லுங்க லதா,கண்டிப்பா என் முடியை உங்களுக்குத் தரேன்” என்றேன். வறண்ட புன்னகை மட்டுமே அவரிடம் இருந்து பதிலாக வந்தது. இந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டேன். வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக உருண்டு கொண்டிருந்தது. லதாவை முன்பு போல பார்க்க முடியவில்லை. மருந்தின் வீரியத்தால் நிறைய நேரம் தூங்குவதாக அவரது அம்மா சொன்னார். 

           ஒரு நாள் லதாவே வீடுதேடி வந்தார். ஸங்கீத்தின் 3 வது பிறந்த நாள் அன்று தான் அவர் முதன்முதலாக வீட்டிற்கு வந்தது. சிறிது நேரம் மட்டும் விழாவில் இருந்து விட்டு கிளம்பி விட்டார். அதன்பிறகு இன்று அவரது வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த சோர்வு மனதை கலங்கடித்தது.

     ”இண்டர்காம்ல சொல்லியிருந்தா நானே வந்து இருப்பேனே லதா”

     ”கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம் என்று வந்தேன் அனிதா”

     ”எப்படி இருக்கீங்க”

     ”ரொம்ப முடியரது இல்லை அனிதா, முப்பது நிமிஷத்துக்கு மேல உட்கார முடியல, இரண்டு குழந்தைகளையும் கவனிச்சுட்டு அம்மாவால சமைக்க முடியரது இல்லை. சமையல்காரம்மா யாராவது தெரியுமா?”

     ”தெரியும் லதா, சாயந்திரம் வந்து பார்க்க சொல்லறேன்,டாக்டர்கள் என்ன சொல்றாங்க”

     ”நோயின் வீரியம் அதிகமாகிவிட்டதாம், மருந்துகள் அதிகம் பண்ணி இருக்காங்க, என் குழந்தைகளுக்காக நான் உயிரோடு இருக்கனும் அனிதா,அவங்க ஓடி விளையாடரத பார்க்கனும்” சொல்லும் போதே லதாவின் குரல் உடைந்து கண்கள் கலங்கி இருந்தன.
       முதன்முறையாக லதாவை அந்த நிலையில் பார்த்ததும் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்ததை தடுக்க முடியவில்லை.

     ”கவலைப்படாதிங்க லதா,எல்லாம் சரியாகிடும்” இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.சில நிமிடங்கள் மெளனத்தால் கரைந்தன.
       சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னை மீட்டுக் கொண்டு பழையபடி கலகலப்பாக பேசிவிட்டு விடை பெற்றார். அதன் பிறகு லதாவை சந்திக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. அவரது அம்மாவிடம் லதாவின் உடல்நிலைப் பற்றி அவ்வப்போது விசாரித்துக் கொள்வேன்.

        ஒரு நாள் இரவு லதாவின் வீட்டில் இருந்து மெல்லிய அழுகை ஒலி கேட்டது. ஏதோ விபரீதம் நடந்து விட்டது புத்திக்கு உறைத்தாலும் மனதால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இண்டர்காம் ஒலித்த போதே புரிந்துவிட்டது, தோழியின் வார்த்தைகளும் அதை உறுதி செய்தன. நான் பார்த்து பிரமித்த பெண்மணி உயிரோடு இல்லை என்பதை நம்ப மனம் மறுத்தது. துக்கம் நெஞ்சம் அடைக்க கண்ணீரால் கரைத்துக் கொண்டிருந்தேன். தன்னிச்சையாய் கால்கள் லதா வீடு நோக்கி நகர்ந்தன. சில அடிகள் நடந்ததே பல மைல்கள் கடந்தது போன்று அசதியாக இருந்தது.

       லதாவைப் படுக்க வைத்து இருந்தார்கள்.அதே தன்னம்பிக்கை அவரது முகத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. “மரண பயத்திற்கு சாவுமணி அடிச்சுட்டு தான் சாவைத் தழுவ வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே அவர் சொன்னது ஏனோ அப்பொழுது நியாபகம் வந்தது. ”கடைசிவரை தன்னம்பிக்கையோடு தைரியமா இருந்தா” என்று அவரது அம்மா அழுது கொண்டே சொன்ன போது வெடித்த அழுகையை அடக்க முடியவில்லை.கடவுள் நம்பிக்கை மீண்டுமொருமுறை தற்கொலை செய்து கொண்ட தருணமது.

     ”என்னடா வாழ்க்கையிது” என்று மனதில் கேள்வி எழும் போதே “இது தான் வாழ்க்கை” என்ற பதிலும் சேர்ந்தே விழுந்தது.

     அடுத்த வாரம் மற்றுமொரு நிகழ்வுடன் சந்திப்போம்

    

2 comments:

 1. அழிக்க முடியா நினைவுகளையும்
  அரிக்கும் உணர்வுகளையும்
  ஒருசேர கரைக்கும் முயற்சி
  கண்ணீர்....!

  ReplyDelete
 2. ”என்னடா வாழ்க்கையிது” என்று மனதில் கேள்வி எழும் போதே “இது தான் வாழ்க்கை” என்ற பதிலும் சேர்ந்தே விழுந்தது. -

  விளங்காத கேள்விகளுக்கு விளங்கும்படி விடை எழுத முடியுமா? என் அப்பா அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவார், "வாழ்க்கை மிக எளிதானது, அதை நாம்தான் சிக்கலானதாக மாற்றி வைத்துள்ளோம்". :(

  ReplyDelete