Thursday, July 26, 2012

மலரும் நினைவுகள் - 3


நம் குழந்தைகள் செய்யும் சில குறும்புகள் நம்மை பால்ய பருவத்திற்கு அழைத்துச் செல்லும். நாம் செய்த குறும்புகள்,வீரதீர செயல்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் செய்த கேணத்தனங்கள், மனதில் மலரும் போது நம்மையறியாமல் இதழ்களில் புன்னகை அழையா விருந்தாளியாய் வந்து அமர்ந்து கொள்ளும். நமது குழந்தைப் பருவத்தில் நெருக்கமாக இருந்த பலபேர் நம் நியாபகத்தில் இருந்து மறைந்தே போய் இருப்பார்கள். மீண்டும் அவர்களைச் சந்திக்கும் போது அவர்களின் பாசம் நிறைந்த கண்களும், உரிமையுடன் நம்மை அவர்கள் அழைத்துப் பேசும் விதமும் நமக்கு அவர்களின் அன்பை உணர்த்தும்.”இது நியாபகம் இருக்கா?, அது நியாபகம் இருக்கா? என்ற கேள்விகளுக்கு “இருக்குங்க” என்று பொய்யோ அல்லது மலுப்பலான புன்னகையையோ மட்டுமே பதிலாக  தந்து சமாளிக்க வேண்டி இருக்கும்.சில குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் கல்வெட்டாய் மனதில் பதிந்து விடும். அப்படிச் சில நிகழ்வுகளை இங்கே பதிகிறேன்.


“நானும் தைரியசாலி தான்”
““நானும் தைரியசாலி தான், நானும் தைரியசாலி தான்............” என்று வடிவேலு மாதிரி வாண்டடா வண்டியில ஏறினா தான் உண்டு. ஏன்னா நம்ம தைரியம் தான் ஊரறிந்த இரகசியமாயிற்றே..........


 “எங்க நம்ம தைரியசாலி அனிதா” என்று சொல்லி விட்டு அவர்கள் சிரிக்கும் நமட்டு சிரிப்பில் எதிரில் உள்ளவர்க்கு நம்ம தைரியம் புரிந்து போகும். ஒரு சின்ன முள் குத்தினா கூட நாம பண்ணர ஆர்ப்பாட்டம் தெரு முழுதும் கேட்கும். “யானைக்கு முள் குத்தி நடக்க முடியாம போயிடுச்சாம், யானைக்கே அப்படினா, நான் எம்மாத்திரம், போச்சு இனி மேல் என்னால் நடக்க முடியாது” என்று ஒரு சிறு முள் குத்தியதற்கு நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரைக் கூட்டியதை அவர்களால் மறக்கவே முடியவில்லையாம். எல்லோரும் சேர்ந்து செயற்குழு கூட்டி ”தைரியசாலி அனிதா” என்ற பட்டப் பேரை கொடுத்த பிறகு தான் நிம்மதியா தூங்கினாங்க.  அன்றிலிருந்து நம்ம தூக்கம் போச்சு......


யாருக்காவது பொழுது போகலைனா நம்ம தைரிய புராணப் படம் தான் ஓடும். நாங்களும் ஒரு காலத்துல தைரியமா தான் இருந்தோம். நம்ம தைரியத்துக்கு ஆப்பு வைச்ச பெருமை ஒரு நாயையே சேரும். பள்ளிக்கூடத்தில் மதிய நேரத்தில் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது தான் அந்த நாய் அருகில் வந்தது. வாலை ஆட்டிட்டே வந்துச்சா, நல்லவன்னு நம்பி இருந்த இரண்டு பிஸ்கட்ல ஒன்னைக் கொடுத்தேன். சீக்கரமா சாப்பிட்டு கையில இருந்த இன்னொரு பிஸ்கட்டை புடுங்க வந்த போது தான் அதோட புத்தியே புரிந்தது......குடுக்க மாட்டேனு நான் ஓட, விடாம அது துரத்த அங்க ஒரு நாடகமே நடந்துச்சு. அந்த களேபரத்துல நாய் என்னைக் கடித்து இரத்தம் வந்தது கூட தெரியலை எனக்கு. நாம யாரு....கடைசி வரை பிஸ்கட்டை நாய்க்கு குடுக்கவேயில்லை.

இரத்தத்தைப் பார்த்து அம்மா பயந்து போய் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் 14 ஊசி போட்டது எல்லாம் தனிக் கதை. அதிலிருந்து இரத்தம், ஊசினா கொஞ்சம் அலர்ஜி நம்மளுக்கு. நம்மள கிண்டல் பண்ண பெரிய ஆயுதம் கிடைச்ச மகிழ்ச்சி எல்லோருக்கும். 

அன்றைக்கு எல்லோருமே சோகமாக இருந்தார்கள். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்று விட்டார்களாம். பள்ளிகள் எல்லாம் விடுமுறை.......ஒரே சந்தோசத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். “அப்படியே இரத்தம் கொட்டுச்சாம், அப்புறம் செத்துப் போய்ட்டாங்கள்” என்று நேரில் பார்த்தது போல் கதை விட்டுக் கொண்டிருந்தான் ஒரு நண்பன்.

“இரத்தம் வந்துச்சுனா செத்துருவாங்களா” பயத்தோடு நான் கேட்டேன்.

“ஆமாம் அனி, உனக்குத் தெரியாதா,,,இரத்தம் வெளிய வந்துச்சு செத்தோம்” என்று கூறி என்னுடைய பயத்தீயில் பெட்ரோல் ஊற்றி விட்டுப் போனான் அவன். 

அன்று ஞாயிற்றுக் கிழமை, மாம்பழ சீசன் என்பதால் அப்பா மாம்பழம் வாங்கி வந்தார். மாம்பழம் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றியது.அம்மா வேலையாய் இருந்ததால் நானே கத்தி எடுத்து நறுக்க ஆரம்பித்தேன். அவசரத்தில் கையையும் சேர்த்து நறுக்கிக் கொண்டேன். லேசாக இரத்தம் வர ஆரம்பித்தது.” இரத்தம் வந்துச்சு செத்தோம்”என்று நண்பன் கூறியது அநியாயத்திற்கு அப்பொழுது நியாபகத்திற்கு வர பயத்தில் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். கண்விழித்துப் பார்த்தால் என்னைச் சுற்றி எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். ”நான் இன்னும் சாகலையா, இரத்தம் வந்துச்சே “ என்று சொல்லி நடந்ததை விளக்கினேன். லேசாக வழிந்த இரத்தமும் நின்று போய் இருந்தது. அந்த காயத்தையும் தேடிப்பிடித்து காண்பித்தேன். எல்லோரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். “தைரியசாலினு நிரூபித்து விட்டாள்” என்று பாட்டி கிண்டலாக சொன்ன போது தான் அழுகை பீரிட்டு கொண்டு வந்தது. 

”அழாத அனி,உன்னை இனிமேல் அப்படிக் கிண்டல் பண்ண மாட்டோம்” என்று பக்கத்து வீட்டு மாமா சொல்ல தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். எல்லோரும் ஒரே குரலில் “மாங்காய் அறுத்து மயக்கம் போட்டு விழுந்த அனி” என்று சத்தமாக கூற அங்கே ஒரே சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அப்புறம் என்னனு கேட்கறீங்களா......நம்ம தைரியப் புராணத்தில் இன்னொரு கதை சேர்ந்தாச்சு............அவ்வளவு தான்...நாம யாரு.......தலைல இடியே விழுந்தாலும் அசால்டா தட்டி விட்டுடே போய்டுவோம்......
15 comments:

 1. நாம யாரு....கடைசி வரை பிஸ்கட்டை நாய்க்கு குடுக்கவேயில்லை.

  superuu akka... nalla iruku... nammaa yaaru

  ReplyDelete
 2. ஹஹா.... இத படிச்சதும், நாமளும் நம்ம வீர தீர ப்ரதாபங்கள எழுதினா என்னன்னு தோணிச்சு. தேங்க்ஸ் அக்கா, சிரிச்சுட்டே என்ஜாய் பண்ணினேன்

  ReplyDelete
  Replies
  1. நிறைய இருக்குடா இது மாதிரி....எழுதனும்.....சோம்பேறித்தனத்தை தூரப்போட்டு விட்டு

   Delete
 3. நாம யாரு....கடைசி வரை பிஸ்கட்டை நாய்க்கு குடுக்கவேயில்லை.
  இரத்தம் வந்துச்சுனா செத்துருவாங்களா” பயத்தோடு நான் கேட்டேன்.
  முதல் வரியில் போராட்டம்
  இரண்டாவது வரிகளில் யாதொன்றும் அறியாத
  குழந்தைத்தனம்!!

  ReplyDelete
  Replies
  1. அருமையான வாசகரா இருக்கீங்க.....ரொம்ப நன்றிங்க உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

   Delete
 4. இளமைக்கால நினைவுகளை ஏக்கத்துடன் நினைவு படுத்திவிட்டீர்கள். மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுமன். பொறுமையா எல்லா மலரும் நினைவும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க

   Delete
 5. அருமையான பதிவு... உங்க தைரியம் டெர்ரர இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஹஹா...இன்னும் நிறைய இருக்குங்க...நேரம் கிடைக்கும் போது எழுதரேன்.

   Delete
 6. அன்பின் அனிதாராஜ் - அருமையான மலரும் நினைவுகள் - பல ஆண்டுகள் கழித்து, மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து மகிழ்ந்து பதிவெழுதியது நன்று.

  ஒரு சிறு முள்ளுக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது -இறுதி வ்ரை பிஸ்கெட் கொடுக்காதது - மாம்பழம் நறுக்கி - இரத்தம் வந்து செத்து விட்டதாகப் பயந்தது - அனைத்தும் அருமை. - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ஐயா....கதையல்ல நிஜம்......

   Delete