Wednesday, November 6, 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்எல்லா தீபாவளியும் ஒரே மாதிரி நகர்ந்துவிடுவதில்லை. ஒவ்வொரு தீபாவளியும் ஏதோ ஒரு மகிழ்ச்சியை, ஏதோ ஒரு தடயத்தை விட்டு விட்டே அகல்கிறது.

சிறு வயதில் புது துணி, நண்பர்களுடன் பட்டாசு விடுதல் என்று வெகு சுவாரசியமாக இருந்தது. அம்மா எழுப்பும் போது 10 நிமிடம் என்று செல்லம் கொஞ்சியபடி தூங்கி, அப்பா குரல் கேட்ட பிறகு எழுந்து எல்லாத்துக்கும் வியாக்கானம் பேசி , பட்டாசுக்காக தங்கையிடம் சண்டை போட்டு ஒரு வழியாக த...யாராகி கோவிலுக்கு போகும் போதே இருளைக்கிழித்தபடி வெளிச்சம் தன் பயணத்தை துவங்கி இருக்கும்.

வாய் ஓயாமல் அப்பாவின் கைபிடித்து பேசியபடி நடந்த தெருக்கள், எதற்காக கோவிலுக்கு போகிறோம் என்று தெரியாமல் சிலையின் அழகை வியந்தபடி பார்த்த மணித்துளிகள், கண்ணில் படும் மனிதர்கள் எல்லோரும் உறவுமுறை வைத்து கூப்பிட்டு அன்பொழுக கைப்பிடித்து அழுத்தி நின்ற நிமிடங்களில் மெதுவாய் அம்மாவின் காதுகளில் ”யாரம்மா இவங்க” என்று கிசுகிசுத்த படி தெரிந்தது போல் நடித்து சமாளித்த தருணங்கள்(நம்ம நினைவாற்றல் அப்பவே அப்படி) இன்றும் பசுமையாக வலம்வருவதுண்டு பல நேரங்களில். ஒவ்வொரு தீபாவளிக்கும் குடும்பத்துடன் போட்டோ எடுப்பது அப்பாவின் பழக்கம். பிறகு ஹோட்டலில் எனக்கு பிடித்ததை சாப்பிட்டுவிட்டே வீட்டிற்கு வருவோம்.

பொறுப்புகள் இல்லாத நாட்கள் ஒரு விதத்தில் இனிமையானவையென்றால், கல்யாணத்திற்கு பிறகு தீபாவளி பெரும் பொறுப்பாக மாறிப்போனது குடும்பத்தலைவியாக மாறியதால்.

ஸங்கீத் பிறந்தபிறகு தீபாவளியின் முகமே மாறிப்போனது. அவனுக்கு புது துணி போட்டு அழகுபார்த்து அவனோடு பட்டாசு வெடித்து, அவனுக்கு பிடித்ததை செய்து மிக ரம்மியமாக நகரும் அன்றைய நாள். ஆனால் நான் சந்தித்த அதே மகிழ்ச்சி அவனுக்குள்ளும் ஊட்டப்படுகிறதா எனத் தெரியவில்லை. அங்கே மனிதர்கள் சூழ கொண்டாடப்பட்ட தீபாவளி இன்று இயந்திரங்கள் சூழ கொண்டாடப்படுகிறது.


எதிர்படும் மனிதர்களில் சிலர் மட்டுமே புன்னகை சிந்த ஏதோ தனியாக தீபாவளி கொண்டாடுவது போல் தோன்றுகிறது, நாமே வலுகட்டாயமாக இழுத்துக்கொள்ளும் பாட்ர்டிகள் பல நேரங்களில் செயற்கை வண்ணங்களைத்தான் பூசிக்கொள்கின்றன.

அன்று ஊரே சேர்ந்து கொண்டாடிய தீபாவளி இன்று குடும்பங்கள் கொண்டாடும் பண்டிகையாக மாறிவிட்டது. மாற்றம் ஒன்றே நிலையானதென்பதால் இதையும் மகிழ்ச்சியோடே ஏற்றுக் கொள்ள பழகிவிடுகிறது மனது. எப்படி இருந்தாலும் தீபாவளி ஏதோ ஒரு இன்பத்தை மனதில் கொட்டிவிட்டே நகர்கிறது.

இந்த தீபாவளியும் சில நினைவுகளை விட்டுவிட்டே அகலும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை. வாழ்க்கையை என்றுமே சுவாரசியமானதாய் ஆக்க ஏதோ ஒன்று காரணமாகிவிடுகிறது ஒவ்வொரு ஸ்டேஞ்சில்.

இந்த தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமானதாய் இருக்க வாழ்த்துக்கள். தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

(பி.கு : ஒரு வாழ்த்து சொல்ல இத்தன பெரிய பதிவானு உங்க மைண்ட்வாய்ஸ் சொன்னா நீங்களும் என் இனம்.)

8 comments:

 1. நாளை 11.11.2013 முதல் வலைச்சர ஆசிரியராக பணியேற்க உள்ள தங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. welcome to valaicharam

  subbu thatha

  ReplyDelete
 3. அன்பின் அனிதா ராஜ்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - பதிவு நன்று - சிறுவயதுத் தீபாவளியை நினைத்து அசை போட்டு மகிழ்ந்து பதிவு எழுதியமை நன்று - நானும் எழுதி இருக்கிறேன் - படித்துப் பாருங்கள் -

  http://cheenakay.blogspot.in/2008/10/blog-post_26.html

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா படிக்கரேன் ஐயா

   Delete
 4. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete