Sunday, November 10, 2013

மெளனச்சிதறல் - 1




விவாதித்து தெளிவு பெறவே

விரும்பினாலும் மனம் அபிப்பிராய

போர்வைக்குள் ஒளிந்து கொண்டு

கண்ணாமூச்சி ஆடுகிறது
-------------------------------------------------------------------------------------

தாங்கத் தோள் கிடைத்ததும்
எல்லாவற்றையும் இறக்கவே
மனம் துடித்தாலும்
தடை போடுகிறது
புத்தியின் தனித்தன்மை
------------------------------------------------------------------------------------------------------
          பெரும் போராட்டங்களுக்குப் பிறகு
அடையும் வெற்றியும் ஏனோ
வெறுமையின் துணைக்
கொண்டே வந்தடைகிறது.
             --------------------------------------------------------------------------------
 எத்தனை முகமூடி போட்டாலும்
சில நேரங்களில் வெளிப்படும்
சிலரின் உண்மையான முகங்கள்
பெரும் அதிர்ச்சியையே உயிர்ப்பிக்கின்றன

 ------------------------------------------------------------------------------------

ஓடிக் களைத்தபின்
ஓய்வாக அமர்கையில்
ஓங்கி அறைகிறது மனதில்,
வாழ்க்கை உண்மைகளை.
          ----------------------------------------------------------------------------------------
 
கடக்க வேண்டிய தூரங்கள்
கண்ணுக்கே தெரியாத போது
கவலை அப்பிக் கொள்கிறது மனதில்.

---------------------------------------------------------------------------

கண்முன் நடக்கும் தவறுகளை
தடுக்க முடியாத தருணத்தில்
வலிகளின் உச்சத்தை உணரமுடிகிறது
            --------------------------------------------------------------------------
 
காலத்தின் கோலத்திலே புள்ளியாய்
காணாமல் கரைந்தே போகிறேன்
கோலத்தின் அழகில் ஆழ்ந்து
கோமகனை நிதமும் நினைந்து
கர்மவினை தனை கலைந்து
தர்ம நெறியில் நடந்து
பிறப்பின் தர்மம் உணர்ந்து
பிறழாமல் வாழ்கிறேன் உலகில்.

 ----------------------------------------------------------------------------

உள்ளத்தின் உவகை யெல்லாம்
வெள்ளத்தில் தஞ்சம் புகவே
உருகியே தவிக்கின்றேன் மாய
உலகத்தின் விளை யாட்டிலே
உன்னிடத்தில் சரணடைய இறையே
உத்தமமாய் எனைக் காத்தாய்
ஊழியின் வேலி தனையே
ஊதியே தள்ளி விட்டாய்
           ------------------------------------------------------------------------------

ஓரங்க நாடகத்தில்
ஓரத்தில் நானிருக்க
ஓங்கியே ஒலிக்கிறது
ஓலங்கள் காதினிலே
ஓதும் மலையினிலே
ஓடியே ஒழிகிறேன்
ஓங்காரமாய் உள்ளிளுக்க
ஓய்வாக கண்மூடுகிறேன்
 
        ------------------------------------------------------------------------------------------
 
நினைவுகளின் சிறகசைப்பில்
நித்தமும் சிலிர்த்திருக்க
நிஜங்களின் சிங்காரத்தில்
நிர்கதியாகி சிரிக்கிறேன்

--------------------------------------------------------------------------------------------

வெற்றிடத்தில் புதியவற்றை வைத்து
நிரப்பினாலும் பழையதின் வாசத்தையும்
நுகரமுடிகிறது சில தருணங்களில்

------------------------------------------------------------------------------------------------- 

     பழுத்த இலைகளின்
உரத்தில் வளர்ந்த
துளிர்கள் நகைக்கின்றன
அதன் தள்ளாமையைப் பார்த்து

 --------------------------------------------------------------------------------

எழுத்துக்களில் சிறிது
வாய்மொழியில் சிறிது
பார்வைகளில் சிறிதென
கரைக்கிறேன் உணர்வுகளை
நிறைகுடமாகவே தளும்பி
வழிகிறது இன்னமும்
          ------------------------------------------------------------------------------------------------
தனது பேச்சிலேயே பிரமிப்பு பிம்பத்தை
உயிர்தெழச் செய்கிறார்கள் சில மனிதர்கள்
 
            ---------------------------------------------------------------------------------------------

வெட்டுவதும்,வெட்டப்படுவதும்
நானாகவே இருப்பதால் மனம்
உணர்ச்சி ஊஞ்சலில் தடுமாறுகிறது

--------------------------------------------------------------------------------------------- 

பேசாமல் இருப்பதற்கும்
அமைதியாக இருப்பதற்கும்
இடையில் கடுகுக்கும்,மலைக்குமான
வித்தியாசத்தை உணர முடிகிறது.
          --------------------------------------------------------------------------------------------------
 சரியெது,தவறெது என்பதை
நமது சுயநல தராசைக்
கொண்டே எடை போடுகிறோம்
          --------------------------------------------------------------------------------------------------
 புத்தகங்களை நேசிக்க, சுவாசிக்க
மனிதர்கள் புதிதாக தெரிகிறார்கள்
            --------------------------------------------------------------------------------------------------
 எத்தனை வார்த்தைகளை வெளியில்
கொட்டி மெளனத்தை விரட்டினாலும்
தனிமை அடர்த்தியாய் நிறைவதை
தடுக்க இயலாமல் சரணடைகிறேன்

 -----------------------------------------------------------------------------------                

சிட்டுக்குருவின் கீச்சுக்களை
அலைப்பேசியின் சிணுங்களுக்கு
இரையாக்கி விட்டோம்

 ---------------------------------------------------------------------------------------

 மாற்றத்திற்காக நாம்
தொடுக்கும் மாலையில்
முதல் பூ நம்முடையதாக
இருப்பதே சிறந்தது

 ------------------------------------------------------------------------------------------

பேசினால் அடர்த்தியாகும்
மன்ஸ்தாபங்களை
தாலாட்டு பாடி
தூங்க வைக்கிறோம்
மெளனத் தொட்டிலிலே

 --------------------------------------------------------------------------------------

           வார்த்தைகளின் போர்க்களத்தில்
முதலில் வெட்டுப்படுவது
அன்பெனும் அமைதிப்புறாவே
           ---------------------------------------------------------------------------------------
மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்

 

2 comments:

  1. எல்லாமே சூப்பர்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்...நீங்க இல்லைனா நான் எடுத்தே இருக்கமாட்டேன். என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்

      Delete