Sunday, November 10, 2013

மெளனச்சிதறல் - 2

வானவில் போல ஆயுள்
சில நிமிடங்களேயானாலும்
மனதில் நீங்கா நினைவுகளை
பதியமிட்டே செல்கிறார்கள்
சில மனிதர்கள் .......
           ----------------------------------------------------------------------------------------------------
 வாடாத மலர்களைச்
சுமந்து கொண்டு
வாடிய மலராய்
பூக்காரி....
           ------------------------------------------------------------------------------------------------------
 சில நிமிடங்களை மனம்
பூட்டி வைத்துக் கொள்கிறது
அழகிய நினைவுகளாக
             -----------------------------------------------------------------------------------------------------
 மனம் அடங்காத குதிரையென்றிருந்தேன்
பழக்கிவிட்டால் கடிவாளமே தேவையில்லாத
அன்பான குதிரை என்று உணர்ந்தேன்

 ------------------------------------------------------------------------------------------------------

ஒத்திவைப்பு தீர்மானங்களில்
உயிர் விடுகின்றன பல செயல்கள்
---------------------------------------------------------------------------------------------------------------

கரைந்து காணாமல் போகிறோம்
அன்பெனும் காற்றில் கற்பூரத்தை போல
 ---------------------------------------------------------------------------------------------

மனதை புண்படுத்தவென்றே
நம்மை நோக்கி எறியப்படும்
வார்த்தைகளை தூக்கி எறியுமுன்
இரண்டு சொட்டு கண்ணீரையாவது
தனதாக்கி கொண்டே அகலுகிறது

 -------------------------------------------------------------------------------------------------------

             உண்டெனும் போது இல்லையென்றும்
இல்லையெனும் போது உண்டெனவும்
மனதின் ஓர் மூலையில் ஒரு எச்சரிக்கை
குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

 ----------------------------------------------------------------------------------------------

எழுத்துக்களில் கரைக்கப் படும்
உணர்வுகள் உயிர்பெறுகின்றன
அதிக பாரத்தை சுமந்துகொண்டு
ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும்

 --------------------------------------------------------------------------------------------------

ஒளி தரும் விளக்கின்
நிழலும் கருமை தான்
             -------------------------------------------------------------------------------------------------
 யாரோயென்றென்னும் போது துளிர்க்காத எதிர்பார்ப்பு
யாதுமாகி நிறையும் போது வேர் விட்டு வளர்கிறது.
--------------------------------------------------------------------------------------------------

சாதாரணமானது கூட அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது

 -------------------------------------------------------------------------------------------------

ஒரு மனிதனின் பதில்கள் பொய்யை
மட்டுமே தாங்கி வருமானால் அவனுக்கான
கேள்விகள் தற்கொலை செய்து கொள்கின்றன
அல்லது கருணைக் கொலை செய்யப்படுகின்றன.
         -----------------------------------------------------------------------------------------------------
 
மறதியே மனிதனுக்கு
வரமாக பல நேரங்களிலும்
சாபமாக சில நேரங்களிலும்
அமைந்து விடுகிறது

 ------------------------------------------------------------------------------------------------------

உன் நட்பால் மட்டுமே எனைப்
புதிதாக ஜனிக்கவைக்க முடியும்
சோகத்தை,தனிமையை துரத்தி விட்டு
சந்தோஷத்தை மட்டுமே நிரப்புகிறாய்
எனைச் சுற்றி வேலி போல நிற்கிறாய்
முட்களின் கீறல்களை உனதாக்கி கொண்டு
மலரை மட்டுமே எனக்கு பரிசளிக்கிறாய்

 ------------------------------------------------------------------------------------------------

கடந்து வந்த பாதையில்
நம்மைக் குத்திய முட்களை
அகற்றிவிட்டாலும்,அது விட்டுச்
சென்ற பயத்தையும், நம்பிக்கையின்மையும்
பசுமையாய் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.

 -------------------------------------------------------------------------------------------------

சில பிரச்சனைகளுக்கு
மூலகாரணமாக இருக்கிறோம்
நமக்கே தெரியாமல்....

 ----------------------------------------------------------------------------------------------

நிறைவேறாது என்று தெரிந்துமே
சில எதிர்பார்ப்புகள் உயிர்போடு
வலம் வருகின்றன மனதினுள்

 ------------------------------------------------------------------------------------------------

தனக்குத் தானே வட்டத்தையும் போட்டு
அதைத் தாண்டவும் தூண்டுகிறது
விந்தையான மனம்.
              --------------------------------------------------------------------------------------------------

எதிபார்ப்புகள் இல்லாத போது
எளிதாக கடக்க முடிகிறது
எல்லாவற்றையும் உறுத்தல்களில்லாமல்.

 -----------------------------------------------------------------------------------------------------

             சில உறவுகளைக்
கடக்கவும் முடியாமல்
காப்பாற்றவும் தெரியாமல்
தத்தளிக்கிறோம்.

 ---------------------------------------------------------------------------------------------------

புத்தியின் கேள்விகளுக்கு
மனதிடமிருந்து வரும் பதில்
           மெளனமாகவே இருக்கிறது

            பல நேரங்களில்
 --------------------------------------------------------------------------------------------------------

நாம் பிரமிக்கும் பல விஷயங்கள்
மற்றவர்களால் குப்பைகளாக
கணிக்கப்படும் போது உயிர்தெழும்
சிறிதாய் ஓர் வலி மனதின் ஓரத்தில்

 -----------------------------------------------------------------------------------------

தோள் கொடுக்க வேண்டிய நேரங்களில்
கைப்பிடியை மட்டும் தந்து விட்டு
சப்பைக் காரணங்களை தேடி அலைகிறோம்.

 ----------------------------------------------------------------------------------------------

நமக்கான உரிமைகள்
பறிக்கப் படும் நேரத்திலும்
சகிப்புத்தன்மை போர்வைக்குள்
சுகமாய் தூங்குகிறோம்

 --------------------------------------------------------------------------------------------------

10 comments:

  1. சிந்தனைத் துளிகளில் சித்திரங்கள்

    ReplyDelete
    Replies
    1. சுமன் நீங்க இதை ஏற்கனவே படித்து இருப்பீங்கனு நினைத்தேன். என்னோட பேஜ்ல இருக்கும்

      Delete
  2. எல்லாமே படிச்சதுதான் தோழி, இருப்பினும் இங்கு படிக்கவே ஒரு ஆனந்தம்

    ReplyDelete
  3. அன்பின் அனிதா ராஜ் - மௌனச் சிதறல் அருமை - 25 சிதறல்களா - அத்தனையும் அருமை அருமை - இரசித்து மகிழ்ந்தேன்.

    வாடாத பூக்களைச் சுமக்கும் வாடிய பூக்காரி
    நினைவுகளைப் ஊட்டி வைத்துக் கொள்ளும் மனம்
    அடங்காத மனக் குதிரையைப் பழக்கி அன்பான குதிரையாக்குதல்.
    அன்பெனும் காற்றில் கரைந்து போவது
    மனதில் ஒலிக்கும் எச்சரிக்கைக் குரல்
    எழுத்தில் உணர்வு உயிர் பெறுவது
    விளக்கின் நிழலும் கருமை
    அன்புக் கண்ணாடி காட்டும் அழகு
    மறதி வரமா சாபமா
    அகற்றப்பட்ட முட்களும் பயமுறுத்தும்
    மனம் இட்ட வட்டத்தையே தாண்டவும் தூண்டும்
    உறவுகளைக் கடக்கவா காப்பாற்றவா - தத்தளிப்பு
    அற்புதம் அற்புதம் - சிந்தனை அருமை அருமை
    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அருமையான சிதறல்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சிதறல்கள் நிறைய இருக்குங்க...பதிவேற்றனும்.....ரொம்ப நன்றிங்க

      Delete