Friday, August 26, 2011

காலம் விந்தையானது

நதியாய் ஓடினேன்,

காற்றாய் வீசினேன்,

மேகமாய் தவழ்ந்தேன்,

நெருப்பாய் உதிர்ந்தேன்,

மணலாய் தவம் இருந்தேன்.

எதோ ஒரு வெறுமை.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

அன்பு இல்லாததால் என்றது

அன்பு என்றால் என்ன என்றேன்.

அனுபவித்து பார் என்று தாய் தந்தையை தந்தது.

அன்பில் திளைத்தேன் நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

 சிறிது சண்டை போட,எண்ணம் பகிர்ந்து கொள்ள யாரும்

இல்லாததால் என்று சகோதிரியை தந்தது.

செல்ல சண்டை ,பகிர்தலில் திளைத்தேன் நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு.

காலத்திடம் கேட்டேன் ஏன் இந்த வெறுமை என்று.

உனக்காக ,உனக்காக மட்டும் என்று யாரும்

இல்லாததால் என்று கணவனை தந்தது.

சந்தோஷத்தில் திளைத்தபடி நான்.

மீண்டும் வெறுமை சிறிது காலத்திற்கு பிறகு

கேள்வி குறியோடு காலத்தை நோக்கினேன்.

நீ அன்பை கொட்ட ஆள் இல்லாததால்

என்று மகனை கொடுத்தது.

ஓ,இன்று அன்பு மட்டுமே சுரக்கும்

அட்சய பாத்திரமாய் என் மனது.

தாய்மை வெறுமையை வென்றது.

கொடுப்பதில் இருக்கும் சுகம் பெறுவதில் இல்லையோ.

இதை முதலில் செய்து இருக்கலாமே என்றேன் காலத்திடம்.

விதை தான் மரமாகும் என்று கூறி சென்றது காலம்.

காலம் ரொம்ப விந்தையானதுதான்.

No comments:

Post a Comment