Monday, September 17, 2012

மலரும் நினைவுகள் -6

 

எங்கள் வீடு

 
 
 



அந்தக் கணம் மனம் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. கார் மிக மெதுவாக நகர்வது போல் ஓர் உணர்வு.பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டைப் பார்க்க சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு செல்கிறோம். மனம் முழுக்க எங்கள் வீட்டைச் சுற்றியே வலம் வந்து கொண்டு இருந்தது.பயணம் ஆரம்பித்தது முதல் எங்கள் வீட்டுப் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தேன்.மகனும் கணவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

பல வருடங்களாக ஒரே தெருவில் எல்லோரும் வாழ்ந்து வருவதால் அத்தைவீடு, சித்தப்பா வீடு என்று முறை வைத்தேதான் அழைப்போம். எங்களுடையது நான்கு வீடுகள் கொண்ட காம்பவுண்ட் வீடு. எங்கள் காம்பவுண்ட்க்குள் நுழைந்தவுடன் இருக்கும் சிறிது காலியிடம் இருக்கும். அதில் வண்டிகள் நிறுத்திவைத்து இருப்பார்கள்.

அங்கே இரண்டு வீடுகள் இருக்கும்.வீட்டின் முன்புறம் நான் வளர்த்த முல்லைச் செடி,பக்கத்து வீட்டில் இருந்து என்னை தினமும் நலம் விசாரிக்கும் நந்தியா வட்டப்பூ, இன்னொரு பக்கத்து வீட்டில் இருந்து தென்றலால் தாலாட்டும் தென்னை மரம் இன்னமும் பசுமையாக நினைவுகளில் நிழலாடுகின்றன. முதன் முதலில் எங்கள் முல்லை பூத்த போது நான் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இன்னும் இரகசியமாய் காதோடு  ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அருகில் சிறிய சந்து இருக்கும், அதில் நுழைந்து வெளிவந்தால் கண்ணில் முதலில் தென்படுவது அழகாய் பசுமையாக வளர்ந்து இருக்கும் செடிகள் அதன் பக்கத்தில் நம்மைக் கவர்வது எங்கள் வீட்டு கிணறு. எங்கள் வீட்டின் பின்வாசல் வழியாக அங்கே நேராக செல்ல முடியும்.அதன் எதிர்புறம் இரண்டு வீடுகள் வரிசையாக அமைந்து இருக்கும்.

செடிகளில் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, கடவுளுக்காகவே தினமும் பூக்கும் செம்பருத்தி செடி தான். அதன் அருகில் 3 அல்லது 4 வாழை மரங்கள் இருக்கும்.வாழைக் குலை தள்ளும் போது அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.எந்த திசை என்ன பலன் என்று ஒரு பெரிய மாநாடே நடக்கும்.அதன் பக்கத்தில் பப்பாளி மரம் இரண்டு இருக்கும்.

அருகில் தக்காளிச் செடி,கீரை வகைகள் கொத்தமல்லி என பாட்டி பதியமிட்டு இருப்பார். அதன் பின்னால் இருக்கும் இடம் எங்கள் இராஜ்ஜியம். எங்களுக்கு பிடித்த செடிகளை கொண்டு வந்து நட்டு வைத்திருப்போம்.அதில் பிரதான இடம் ரோஜாவுக்கு உண்டு. கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து தினமும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது எங்கள் வேலை.

எங்கள் துவைக்கிற கல்லை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன்.எனது தோழி என்று கூட சொல்லலாம் அதை. மிகுந்த துக்கமோ,சந்தோஷமோ தஞ்சம் புகும் இடம் இந்த துவைக்கிற கல் தான். அதில் அமர்ந்து தான் கல்கியையும்,பாலகுமாரனையும் அறிமுகம் செய்து கொண்டேன். சூரிய உதயத்தையும், மாலை நேரத்தில் சூரியன் மறையும் அழகையும் துவைக்கிற கல்லின் மீது அமர்ந்து பார்க்கும் சுகமே அலாதி தான்.

எனது ஒவ்வொரு அசைவையும் பதிந்து வைத்திருக்கும் எங்கள் வீடு. எனது தாத்தாவுடன் அமந்து பேசிய இடங்கள்,அத்தை சித்தப்பாவுடன் விளையாடிய இடங்கள், அம்மா பாரதியின் பாடல்களை அறிமுகப்படுத்திய இடங்கள், தங்கையுடன் செல்லச் சண்டைகள் (நிஜமா சொன்னா இரத்தம் பார்க்காம ஓயாது எங்க சண்டைகள்) போட்ட இடங்கள். அப்பாவின் கைப்பிடித்து நடைபழகிய இடங்கள், கற்பனைப் பாத்திரங்களாய் மாறி வசனங்கள் பேசிய இடங்கள் அனைத்தும் மனதில் படம் போல் விரிந்து இதழ்களில் புன்னகையை குடியேற வைத்தது. மகனிடம் அந்த இடங்களை எல்லாம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை அணை கடந்த வெள்ளம் போல் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

எங்கள் வீதியை அடைந்ததும் இனம் தெரியாத உணர்ச்சிகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன மனதை. தார் சாலையில் சமாதியாகி இருந்தன எங்கள் பாதச் சுவடுகளைத் தாங்கிய மணல்கள். முக்கால்வாசி ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக உருமாறி இருந்தன. எல்லாம் மாறி இருந்தது,எங்கள் வீடு முற்றிலும் வேறு உருவம் எடுத்திருந்தது. அடையாளங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டிருந்தன. மனதில் ஏதோ ஒரு தீர்மானமான முடிவு உயிர்பெற்றுக் கொண்டிருந்தது. வீடு நெருங்கியவுடன் காரின் வேகத்தை மெதுவாக குறைத்தார் ஓட்டுனர்.

“அண்ணா,நிறுத்த வேண்டாம் போங்கள்” என்ற எனது கரகரப்பான குரல் எல்லோரையும் ஒரு நிமிடம் அதிர வைத்தது.

”அனி என்னாச்சு,இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டிற்குள் போக வேண்டாமுனு சொல்லர” என்று ஆச்சரியமாக கேட்டார் கணவர்

“இல்லமா,போலாம்” எனது குரலில் தெரிந்த ஏதோ ஒன்று அவரையும் மெளனமாக்கியது.திருப்பூர் நோக்கி கார் திரும்பியது.அமைதி மட்டுமே அங்கே நிலவியது.

எல்லோரும் விசித்திரமாக என்னை பார்க்க,எனக்கோ எதையோ மனதில் பசுமையாக வைத்த திருப்தி இருந்தது.


No comments:

Post a Comment