Friday, August 30, 2013

தெரியாத பக்கங்கள்




 இந்த வீட்டிற்கு வந்த பிறகு காலையில் பறவைகளின் இனிய குரலோடு கண்விழிக்கும் போதே இனம்தெரியா சந்தோஷமும் சேர்த்தே ஒட்டிக் கொள்ளும். அரக்கபரக்க காலையில் தேவையானதை தயார் செய்து மகனை பள்ளியில் விட முதல் நாள் சென்ற போது தான் அந்த டெம்போ கண்ணில் பட்டது. அதில் சில பேர் அமர்ந்து இருந்தார்கள். விசாரித்த போது கம்பெனி வண்டி என்றும், அதில் ஏற்றிப் போய் பணி செய்யும் இடங்களில் இறக்கி விடுவார்கள் ...என்று சொன்னார்கள். அந்த வண்டியைப் பார்த்தால் சாமானங்கள் ஏற்றிப் போகும் வண்டியைப் போலவே இருந்தது. கடைநிலை ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவே காட்சியளித்தது.

கட்டிட தொழில்கள், மரங்களைப் பராமரித்தல் ,ரோடுகள் செப்பனிடுதல் பணிகளில் நம் மக்களைப் பார்க்கும் போது மனதில் சோகம் அப்பிக் கொள்ளும். வேகாத வெய்யிலில் அவர்கள் படும் பாடு வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உருகி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகளாகவே கண்ணுக்கு தெரிவார்கள். சகோதரியின் கல்யாணக் கடனோ, அப்பாவின் விட்டுப்போன கடமைகளோ அவர்களை இங்கே பணியாளர்களாக இழுத்துவந்திருக்கும்.

எத்தனை சாலை விதிகள் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சாலை விபத்துக்கள் மனிதனின் கவனமின்மையையே பறைசாற்றுகின்றன. கார் டெம்போவுடன் மோதிய சாலை விபத்தில் ஒருவர் பலி எனற செய்தி அதிர்ச்சியாகவே இருந்தது. அதுவும் இறந்தது தமிழர் எனும் போது ஏதோ இனம்தெரியாத சோகம் மேலோங்கி எழுந்தது. இறந்தவர் 29 வயது இளைஞர்,நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் அடுத்த மாதம் அவருக்கு திருமணம் என்பதால் ஊருக்கு போக ஆயுத்தம் செய்து கொண்டு இருந்தார் என்ற செய்தி மனதில் ஒரு வெறுமையை கொணர்ந்து நிறுத்தியது.
வெளிச்சத்தை நிரப்பிய ஒரு மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது. அந்த வீட்டில் இருட்டின் கருமை பயங்கரமானதாகவே இருக்கப் போகிறது என்பதை உணரமுடிந்தது. கல்யாணக் கனவுகளோடு காத்திருக்கும் அந்தப் பெண்ணிற்க்கு இது மிகப் பெரிய இடியாக இறங்கக் கூடும்

இனி அந்தப் பெண்ணின் வாழ்க்கை மிகவும் துயரகரமானதாகவே இருக்குக் கூடும். ராசியில்லாதவள் என்ற பட்டப்பெயர் கூரிய முட்களாக அவள் மனதை கிழித்தெறியும் போது கேடயமாக ஒருவர் இருக்க வேண்டுமே என்ற வேண்டுதல் மட்டுமே வைக்கமுடிந்தது. கடந்து மீண்டு வருவாளா? அமிழ்ந்து போவாளா தெரியவில்லை.

நம் வாழ்க்கை நம்மிடமில்லை எனும் போது ஏன் ஓட வேண்டும் என்ற அயர்ச்சி வந்து விடுகிறது.அமைதியான நதியாகவே கடலில் கலக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.எத்தணை எதிர்கால திட்டங்கள்,எத்தனை கோபங்கள், எத்தனை எதிர்பார்ப்புகள் எல்லாம் அர்த்தமில்லாததாகவே தெரிகிறது. மலைகளில் ஏறி, நீர்வீழ்ச்சியாக வீழ்ந்து....வீழ்வதும் எழுவதும் கூட நம் கைகளில் இல்லையெனும் போது அடர்த்தியான மெளனம் மட்டுமே நட்புக்கரம் நீட்டுகிறது..

No comments:

Post a Comment