Friday, August 30, 2013

செல்லக்குட்டியின் குறும்பு


 
மாலையில் எப்போது சமையலறைக்குள் நுழைந்தாலும் தானும் உதவுகிறேன் பேர்வழி என்று ஸங்கீத்தும் கூடவே வந்து விடுவான்.

நேற்று சப்பாத்தி செய்யப் போன போது “அம்மா, நான் மாவு பிசைந்து தரேன்” என்றான். சரியென்று கூறிவிட்டு அவனுக்கு தேவையானதை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தேன்.

“அங்க பாரேன், பெரிய பல்லி” என்றான்...

“எங்கடா குட்டி “ என்று நான் திரும்பிய போது எனது கன்னத்தில் மாவை அப்பிவிட்டு சிறிது தயக்கத்தோடு என்னைப் பார்த்தான் என்ன சொல்லுவேனோ என்று

“என்னடா குட்டி, இப்படி பண்ணிட்ட” என்றேன்

”சாரிமா, நானே துடைத்து விடரேன் “ என்று டவலை எடுக்க எழப் போனான்.

அவனைத் தடுத்து இன்னொரு கன்னத்தை காண்பித்தேன்.

முகத்தில் மகிழ்ச்சி குபீரென்று பூக்க முகம் முழுக்க மாவைப் பூசினான். அவன் முகத்தில் நானும் மாவைப் பூச, அடுத்த அரை மணி நேரத்திற்கு வெறும் சந்தோஷப் பதிவுகளை மட்டுமே அந்த இடம் பதிவு செய்து கொண்டிருந்தது.

பிறகு இருவரும் சேர்ந்து ஒருவழியாக சப்பாத்தி செய்து சாப்பிட்டோம். நேற்று சப்பாத்தி மிகவும் ருசியாக இருந்தது. வயிற்றையும் நிறைத்து மனதையும் நிறைத்தது.

சட்டென்று ஒரு நொடியை அதீத இன்பமாக்கும் வரத்தை குழந்தைகள் மட்டுமே வாங்கி வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment