Friday, August 30, 2013

”கவிதா”
மூடிய இமைகளுக்கு இடையில் ஒழுகிய நீர்த்துளிகளை பார்த்து செய்வதறியாது திகைத்து நிற்கத் தான் முடிந்தது அனு என்கிற அனுராதாவால். மெல்லிய ஓடையாக கீழறங்கி தலையணையை நனைத்தபடி இருந்தது கண்ணீர்த் துளிகள். கவிதாவின் கடைசி நொடிகள் அது என்பது எல்லோராலும் உணரமுடிந்தது. கவிதாவின் கைகளை பற்றியபடி அமர்ந்திருந்தாள் அனு. கவிதாவின் கணவரும், குழந்தைகளும் துக்கத்தை முகத்தில் சுமந்து கொண்டு நின்றிருந்தார்கள். ஏதேனும் கண்திறந்து சொல்லுவாளோ என்ற நம்பிக்கையில் அனைவரது கண்களும் கவிதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. 40 வயதில் தோழியின் மரணம் ஏற்க முடியாததாகவே இருந்தது.

அனுவும்,கவியும் சிறு வயது முதலே நல்ல தோழிகள்..இரு துருவங்கள் என்று கூட சொல்லலாம். அனுவின் அமைதியான குணம் கவிக்கு மிகவும் பிடிக்கும். அவளது துறுதுறுதனத்திற்கு நேர் எதிரானதும் கூட. சில சமயம் எரிச்சலையும் உண்டாக்கும் கவிக்கு..

“எப்படி அனு இப்படி இருக்க, எதிலும் பட்டுக்காம, எதிர்நீச்சல் கூட போடாம இருக்கமுடியுது” என்பாள்

தாய் தந்தையை இழந்து அத்தையின் வீட்டில் வளருபவளால் இப்படித்தான் இருக்க முடியும் என்று உணரயியலா வயது அது. வளர்ந்த பின் அதுவே கவிதாவிற்கு அனுவின் மேல் அளவு கடந்த பாசத்தை உண்டு பண்ணியது. சில சமயங்களில் அனு தாயின் உருவத்தை கவியின் வடிவில் காண்பாள். தனது கணவரின் நெருங்கிய நண்பருக்கு அனுவை திருமணம் செய்து வைத்ததில் பெரும் பங்கு கவியைத் தான் சாரும். குடும்ப நண்பர்கள் என்றானபின் இவர்களது நட்பு மேலும் அடர்த்தியானது. பக்கத்து வீடு என்பதும் கூடுதல் வரமாகவே அமைந்தது அவர்கள் நட்பிற்கு.

6 மாதங்களுக்கு முன்பு கவிக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்த போது மிகவும் உடைந்தது அனுதான். மிகவும் தைரியமுடனே எதிர்கொண்டால் கவி. நாட்கள் நகர நகர அவளது நம்பிக்கை குவளையை மற்றவர்கள் நிரப்பவேண்டியதாக இருந்தது. அதுவும் நிரப்பிய வேகத்தில் காலியாவதை பார்த்து செய்வதறியாது பரிதவித்தனர் மற்றவர்கள். திட்டமிடலுக்கு பேர் போன கவி அடுத்து எடுத்த நடவடிக்கைகள் எல்லோரையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது எனலாம். கணவருக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய ஏற்பாடுகளை ஆரம்பித்த போது ரவி கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

“ஏண்டி இப்படி படுத்தர, உன்னைத் தவிர என்னால் இன்னொருத்தியுடன் எப்படி” கோபத்தின் உச்சியிலும் அவனது கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

“வெற்றிடம் நிரப்ப வேண்டும், இயற்கை விதிடா” கவி

“அது வெற்றிடம் இல்ல குட்டிமா, புரிஞ்சுக்க” ரவி

 கவியின் பிடிவாதம் முதன்முதலாக ரவியிடம் தோற்ற தருணம் அது.

தான் இல்லாவிட்டாலும் வழக்கம் போல் நடக்கும் படி எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல் படுத்திய பின் தான் படுக்கையில் ஒரேடியாக விழுந்தாள் கவி. அனுவிற்கு கவி இல்லாத வாழ்க்கை நினைக்க கூட முடியவில்லை. எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தாள். அருணின் தோள்கள் தான் அவள் துக்கத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கி.

“கண்ணம்மா, சிலதை தடுக்க நம்மால் முடியாதுடா, அமைதியா ஏத்துக்க தயாரா இரு. கவி முன்னால அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத” அருண்

“முடியலங்க, அவள இந்த நிலமையில் பார்க்க முடியல “ அனு

“அவள் என்ன செய்ய நினைக்கறாளோ, அதை உணர்ந்து அவளுக்கு உறுதுணையா இரு” அருண்

கவியின் திட்டமிடல் அனைத்தையும் செயல்படுத்தியது அனுதான்.குழந்தைகளை இழப்பிற்கு தயார்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதுவும் பெண் குழந்தைகளுக்கு அம்மாவின் அரவணைப்பு எத்துணை தேவை என்பது அவள் அறிந்ததே. அனுவின் மீதும் அவர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்ததால் கவிக்கு அனு பார்த்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை மிகுந்து இருந்தது.

எல்லோரும் கவியின் இழப்பை தவிர்க்கமுடியாமலும், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்,ஏதேனும் அதிசயம் நடந்து கவி இறப்பில் இருந்து மீட்டுஎடுக்கப்படுவாள் என்ற நம்பிக்கையுடன் காலத்தை ஓட்ட ஆரம்பித்தார்கள்.

ஒருவாரத்திற்கு முன்பு கவிக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் சேர்க்கப் பட்டாள். இறுதி நாட்கள் என்பதை மருத்துவரும் உறுதிசெய்தார். முதன்முதலாக கவி அழுது அனு அன்றுதான் பார்த்தாள். அவர்கள் இருவரும் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.

“அம்மு” கவி. அனுவைச் செல்லமாக இப்படி தான் கூப்பிடுவாள்
அனுவால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை நிறுத்தயிலவில்லை.

“அம்மு , உன்ன நம்பி தாண்டி போறேன், நல்லா பாத்துக்கடி “ கவி

“ஏண்டி இப்படி பண்ணர,சரியாகிட்டு வாடி” அனு

“அம்மு,குழந்த மாதிரி பேசாத,சில நிஜங்களை நாம ஏத்துகிட்டு தான் ஆகனும். எனக்கும் ஆசைதான் உயிரோட இருக்கனும் என்று, நடக்காது எனும் போது என்ன செய்ய சொல்லர. ரவியோட அரவணைப்பு, குழந்தைகளோட அன்பு ,உன்னோட தோழமை எல்லாமே எனக்கு கிட்டாத தூரம் போகப் போகுதுடி” குரல் உடைந்து கரகரத்தது.

கடைசி நிமிடங்கள் எல்லோரையும் சிறிது கலங்கடிக்கவே செய்கிறது. அடுத்த நொடி பழையபடி தைரியத்தை கவி அணிந்து கொண்டு சிரித்தாள்.ஏனோ அந்த சிரிப்பு வெறுமையை மட்டுமே நிரப்பிவைத்திருந்தது.

“கவி, எனக்கு எப்பவும் 4 குழந்தைகளடா, ஒருபோதும் நான் பிரித்து பார்த்தது இல்லடி” அனு

“தெரியும் அம்மு. அந்த ஒன்று தான் சாவைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா அணுக உதவியா இருக்குடா” கவி

“ரவி, பாவம்டா, எப்படி மேனேஜ் பண்ண போறானு தெரியலை” கவி.
 
மூச்சுக்கு முந்நூறு தரம் குட்டிமா என்று கூப்பிட்டு கொண்டே இருக்கும் ரவியை நினைத்தால் வருத்தமாகத் தான் இருந்தது அனுவிற்கும்.

சாவை நெருங்கும் போது பிரியமானவர்களின் துக்கங்களை மட்டுமே அசை போடுமோ மனது, அனுவிற்கு தன்னுடைய பொறுப்பு தெளிவாக புரிந்தது.

“கவி, நானிருக்கேன், கடைசி மூச்சு இருக்கும் வரை நல்லா பாத்துக்கிறேன்” என்றாள் அனு கைகளை அழுத்தி.

அதன்பிறகு கவி அதிகம் பேசக் கூடிய நிலையில் இல்லை. இன்று காலை அவளது கடைசி நாள் என்று தெளிவாக தெரிந்துவிட்டது. அவள் கண்களில் வழிந்த கண்ணீரை வகைப்படுத்த இயலவில்லை. எல்லாம் செய்துவிட்ட திருப்தியில் வந்ததாகவே அனுவிற்கு தோன்றியது. கவியின் கடைசி சுவாதத்தை அனைவராலும் உணர முடிந்தது.

அன்பானவர்கள் எதிர்நீச்சல் போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே ஒரு ஜீவனுக்கு சாவை அமைதியாக எதிர்கொள்ளும் தைரியத்தை தருகிறதோ?.

8 comments:

 1. சில நேரம் மரணத்தை நாம ஏத்து தான் ஆகணும்னு புன்னகையோட எனக்கு கத்துக் குடுத்தவங்க அம்மா. சமீபத்துல நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா உணர்ந்த ஒரு விஷயம் ஒரு ஆறு வயசு குழந்தை, புற்றுநோய்ல கடைசி மூச்சை எண்ணிகிட்டு இருக்குறான்னு எல்லாரும் கைவிரிச்சப்போ, அதிசயமா அவ மீண்டு வந்தது தான்.. இன்னமும் அந்த தாக்கம் அவள விட்டு முழுமையா போகலனாலும் அவ கண்டிப்பா திரும்ப வந்துடுவாங்குற நம்பிக்கை இருக்கு. மனசு கனத்துடுச்சு அக்கா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் காயத்ரி....
   அந்தக் குழந்தை நலமோடு வாழ இறையை பிராத்திக்கிறேன் தங்கை

   Delete
 2. நம்பிக்கை குவளையை மற்றவர்கள் நிரப்பவேண்டியதாக இருந்தது. அருமையான வரிகள்!!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்க. என்னை மேலும் சிறப்பாக எழுதத்தூண்டும் உங்கள் விமர்சனங்கள்.

   Delete
 3. கதாபாத்திரங்களாகத் தோன்றவில்லை. கண்ணுக்குள், நெஞ்சுக்குள் நிஜமாக வாழ்வதாகத் தோன்றியது

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுமன். உணமை நிகழ்ச்சிகளோடு என் கற்பனையும் கலந்ததுதான் இந்த கதை சுமன்

   Delete
 4. ஆம் நம்பிக்கை மட்டுமே நம்மை எதையும் தாங்க வைக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதாங்க...இழந்த தருணங்கள் கொடுமையானது..நினைவுகளை மீட்டும் போது வலியோடே இசைக்கிறது

   Delete