Tuesday, March 20, 2012

மாயக்கார கண்ணன்



உன் தோள் சாய்ந்தால்,
துக்கங்கள் தன் ஆயுளை இழக்க
சந்தோஷங்கள் இரட்டிப்பாக
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.


உன் சிறு அணைப்பில்
அணுக்களெல்லாம் புத்துணர்வு பெற
சோம்பல்கள் சவக்குழி ஏற
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.
 

உன் விழிப் பார்வையிலே
பாலைவன நாட்களெல்லாம்
பூஞ்சோலையாய் மாற
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.
 

விரல்களால் கன்னங்களில்
நீ வரைந்த ஓவியம்
சாகாவரமாய் நெஞ்சினில் பதிய
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா.


காதோரம் நீ கிசுகிசுத்த
காதல் கீதங்கள் பசுமரத்தாணி போல்
புத்தியில் உறைய
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா


உன் அருகாமையில்
கோபங்களெல்லாம் துறவறம் பூண
அன்பு மட்டுமே மனதையாள
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா


காற்றிற்கு இசைந்தாடும் இலைபோல
உன் தாளத்திற்கு நானாட
என்ன மாயமடா செய்தாய்
மாயக் கண்ணா
 

No comments:

Post a Comment