Monday, March 12, 2012

இதுவல்லவே நான்


கடலின் வர்ணத்தை போல
இல்லாததை இருப்பதாய்
நினைத்து நித்தமும்
கனவில் மிதக்கும்
இதுவல்லவே நான்

மழைமேகமாய் அன்பை
பொழியயெண்ணி
அடைமழையாய்
இடியுடன் பெய்து
வெறுப்புக்கு ஆளாகும்
இதுவல்லவே நான்

கல்லைக் கட்டிக் கொண்டு
பறக்க நினைக்கும் பறவைபோல்
தடைகளை வெல்லாமல்
வெற்றியைத் தேடும்
இதுவல்லவே நான்

காற்றின் போக்கிற்கு அசையும்
சிறு சிறகு போல்
சுயம் தொலைத்து வாழும்
இதுவல்லவே நான்

முட்களை நீக்கி
மலரை இரசிக்காமல்
பூதக் கண்ணாடி கொண்டு
முட்களை பார்க்கும்
இதுவல்லவே நான்

அழகான இசையாகயெண்ணி
எங்கேயோ இலயம் தப்ப
அபஸ்வரமாய் ஒலிக்கும்
இதுவல்லவே நான்

சிலந்திவலையாய்
சூழ்நிலைகள் பிண்ண
போராடாமல் இரையாகும்
இதுவல்லவே நான்

எங்கே தொலைத்தேன்
என் இயல்புகளை
மீட்டெடுக்கும் முனைப்போடு
தொலைத்த இடம் தேடி
வெறுமையின் துணையோடு
ஆரம்பக்கிறேன் பயணத்தை.

No comments:

Post a Comment