Sunday, March 25, 2012

எனையறிந்தவன்



சீனப் பெருஞ்சுவராய் நீளும்
மெளனத்தை உடைக்க நினைக்க,
உடைத்து காட்சியளிக்கிறாய் என்முன்னே.

பொக்கிஷம் கிடைத்த பரமஏழை போல்
மனம் பரவசம் கொண்டு துள்ள,
அன்பெனும் புயல் காற்றில்
வேருடன் சாயும் மரம் போல்
சாய்கிறேன் உன் தோள்களில்.
 
எனைத் தோள் சேர்த்து, கை கோர்த்து
கேசம் கோதி, உச்சியில் முத்தமிட
மீண்டும் ஜனிக்கிறேன் இப்புவிதனில்
சாகாவரம் பெற்று.

ஜனனமும், மரணமும் ஒருசேர
நிகழ்கிறது என்னுள்ளே,
உன் விழிப்பார்வை என்னுள்
கதிர்களாய் ஊடுருவியதால்.

என் அத்துனை கேள்விகளுக்கும்,
கோபங்களுக்கும்,சமாதானப் புறாவாய்
உன் அணைப்புகளே தூது செல்கிறது.

செவ்வானமாய்  சிவக்கவைக்கும்
உன் காதல் மொழிகள்,
எனை நிழலாய் பின்தொடர,
வெட்கத்தில் மூழ்கி திணறுகிறேன்
கரையேரத் தெரியாமல்.

காதல் மழையில் பூக்களை
திணறடித்துவிட்டு,
ஏதும் நடவாதது போல்
அமைதியை போர்த்திக் கொள்ளும்
நீலவானமாய், ஓரப்புன்னகை புரிகிறாய்.

நிலமாய் நானும், பெருங்கடலாய் நீயும்
காற்றாய் நம் பேரன்பும் திகழ,
ஜென்மம் தோறும் இணைபிரியாது
இனிதாய் தொடர்கிறது நம் பந்தம். 

No comments:

Post a Comment