Thursday, March 29, 2012

குழந்தை தொழிலாளி


கண்களில் கனவுகளையும்
கைகளில் புத்தகங்களையும்
மனதில் மகிழ்ச்சியையும்
சுமந்தபடி பூரிப்போடு
பள்ளி செல்கிறேன் முதல்முறையாய்.

முதல் அடி வைக்கையில்
பசிக்காய் அழும்
தங்கையின் குரல்
செவிகளை அடைக்க
கால்கள் தள்ளாட

அடுத்த அடி வைக்கிறேன்.
பசியால் களைத்துப் போன
தாயின் முகம்
கண்களில் நிழலாட
கனத்த மனதோடு
முன்னேறுகிறேன்.

நோயால் அவதிப்படும்
தந்தையின் நிலைமை
மனதை நிலைகுழைக்க
புத்தகப்பையை எறிந்துவிட்டு
சோற்றுப்பையை தூக்கிக் கொண்டு
மீண்டும் குழந்தை தொழிலாளியாகிறேன்

வானவில்லாய் இலட்சியங்கள்
மறைந்து போக
கனவுகளைத் தின்றுவிட்டு
நிஜங்களில் வாழப் பழகுகிறேன்.

வேர்களை அழியவிட்டு
மரங்களைக் காக்க
முயலும் சமூகத்தை
நினைத்துப் புன்னகைத்தபடி
தொடர்கிறது பயணம்.

No comments:

Post a Comment