Thursday, September 26, 2013

பார்த்த ஓரு நொடி


கூட்டத்தில் அலட்சியமாய் சுழன்ற கண்கள் குத்திட்டு நின்றன ஓரிடத்தில். அவள் தானா அது. புத்தி தீடீரென்று அதிவேகமாக இயங்க ஆரம்பிக்க இதயம் துவண்டது. நிறைய மாறி இருந்தால் ஆனால் அந்தக் கண்கள் மட்டும் ஆயிரம் கவிதைகளை கொட்டின இன்றும்.

என்னைப் பார்த்தது போல் தோன்றியது. பார்க்காதது போலவும் இருந்தது. காணாமல் கடப்பதா, கண்டு நலம் விசாரிப்பதா என்ற தடுமாற்றத்தில் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தேன். அதற்குள...் மனைவி தோளைத்தட்டினாள்.

“சீக்கிரமா வாங்க, அங்க என்ன பாராக்கு பார்த்துட்டு”

“தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது, அதுதான் பார்த்தேன்”

“தெரிஞ்சவங்கனா போய் பேச வேண்டியது தானா”

“இல்ல இல்ல அவங்க வேற யாரோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு திரும்புகையில் அருகில் நின்றிருந்தாள் அவள். குரல் மெதுவாக கரைய அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன். மனைவியிடம் அறிமுகப்படுத்த அவள் பெயரை உச்சரிக்கும் போதே இனம் புரியாத உணர்ச்சிகள் தெறித்தன மனைவியின் கண்களில்.

அவள் பெயரை அடம்பிடித்து என் முதல் பெண்குழந்தைக்கு வைத்தது இன்றும் நினைவு இருக்கிறது எங்கள் இருவருக்கும்.

“சீக்கரம் பேசிட்டு வாங்க, குழந்தை பலூன் கேட்டான். வாங்கி தரேன்” என்று கூறிவிட்டு நகர்ந்த மனைவி மீது அன்பு பொங்கி வழிந்தது உள்ளத்தில்.

“எப்படி இருக்க “ என்றேன். என்குரல் எனக்கே கேட்கவில்லை. நல்லா இல்லையென்று சொல்லி விடுவாலோ என்ற பயம் ஒவ்வொரு செல்லிலும் பூத்து இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் வீசினால் எப்பொழுதும் போல.

“எத்தனை குழந்தைகள்” என்றேன். கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்க மனம் ஒப்பவில்லை. அவளை வேறு ஒருவருடன் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்னுடையவள் என்ற எண்ணம் ஓரத்திலிருந்து மனதின் மையத்தில் வந்து ஆட்டம் போட அடக்க தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

மெதுவாக விழியுயர்த்தி என்னைப் பார்த்தாள். பிறகு ஏதும் பேசாமல் நகர ஆரம்பித்தாள். நான் அவசரமாக அவள் கைப்பற்றினேன். இறுகப்பற்றிய கைகளுக்குள் கடந்த காலங்கள் உயிர்பெற்று உலாவத்துவங்கின. அவள் கைகளை விடுவிக்க துவங்கினாள். விட்டாள் போய்விடுவாளென்ற சிந்தனையால் மேலும் இறுகப் பற்றினேன்.

“இங்க என்ன பண்ணர” யாரோ அவளை நெருங்கிவர ஆரம்பிக்க சட்டென்று கைகளை விடுவித்தேன். கண்களை உயர்த்தி என்னை விழுங்குவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெதுவாக அந்த மனிதரை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

ஏதாவது சொல்லிட்டு போயேன், அட்லீஸ்ட் திட்டவாவது செய், நீ விட்டதால நான் ஒன்னும் கொறஞ்சு போய்டல,நல்லா இருக்கேனு அகங்காரமா பேசிட்டாவது போயேன்.மனதுக்குள் மெதுவாக இறைந்தேன்.எப்படியாவது அவள் நல்லா இருக்கிறாள் என்று மட்டுமே அறிய மனம் துடித்தது. என் மனக்குரலோ, விழியின் மொழியோ அவளை எட்டவேயில்லை என்பது போல நகர்ந்துவிட்டாள். இழந்ததை மீண்டும் இழந்தது போல் மனம் கனத்து போய் இருந்தது.

ஐந்து வருடங்களாக பூட்டி பத்திரமாக வைத்த நினைவுகள் ஒவ்வொன்றாக அணிவகுத்தன. பேசாமல் நகர்ந்தவள் மேல் கோபம் எழாததின் மர்மம் இன்னும் புரியவில்லை எனக்கு. என்றுமே மெளனநதி தான் அவள். பிரிகிறேன் என்று சொன்ன போதும் இதே பார்வை தான். ஒரு வார்த்தைகூட பேசாமல் நகர்ந்தவள் இன்றும் அதே போல். காதலைச் சொன்னபோது கூட நிறைய பேசவில்லை அவள். மெல்லிய புன்னகை ஏற்றுக்கொண்டதாய்.

காதலித்த நாட்களில் அவளது செயல்களில் அன்பு நிரம்பி வழியும். சூழ்நிலை காரணமாக பிரிய நேர்ந்த போது கூட சண்டை போடவில்லை, கத்தவில்லை, கண்ணீர்விட வில்லை, துடைத்தவிட்ட உணர்வுகளை முகம் பிரதிபலித்து என்னை முழுவதுமாய் நோகடித்தது. அதன் பிறகு தினமும் ஒரு முறையாவது அந்த முகம் ஏதோ ஓர் நொடியில் மனதில் எட்டிப் பார்க்கும். நல்லா இருக்க வேண்டும் என்று மனம் வேண்டிக் கொள்ளும்.

இன்று 5 வருடங்கள் கழித்து பார்த்ததில் என்னை முற்றிலுமாய் இழந்திருந்தேன். ஒர் வார்த்தை பேசி இருக்கலாமே அவள் என்ற எண்ணம் மட்டுமே என்னை சுற்றி உலவிக்கொண்டிருந்தது.

“போலாமா” என்ற மனைவியின் வார்த்தை இயந்திரமாக என்னை நகர்த்தியது வண்டியை நோக்கி

“என்ன பேசினீங்க, எத்தன குழந்தைகள்” மனைவியின் குரலில் இருந்த ஏதோ ஒன்று என்னை உலுக்கியது

“ஒன்னும் பேசலடா, எப்படி இருக்கீங்க கேட்டேன், பதிலே சொல்லாம போய்ட்டாங்க” என்றேன்

எல்லாம் தெரிந்ததாலே அவளால் மேலும் கேள்விகள் கேட்க முடியவில்லை.

மெளனமாய் மணித்துளிகள் நகர்ந்தன. வீட்டிற்கு வந்த பிறகும் அந்த நிமிடத்தின் கனத்தை குறைக்க இயலவில்லை.

அவளைப் பற்றிய ஆராய்ச்சியே உள்ளுக்குள் ஓடியது. கொஞ்சம் உடம்பு வைத்து இருக்கிறாள், முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. எப்படி இருக்கிறாள், எத்தனை குழந்தைகள் அவளுக்கு, ஒன்றுமே தெரியாமல் மனம் குழம்பியது

“சாப்பிட வாங்க”

“நல்லா இருக்கேனு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் அவ. நிம்மதியா இருந்திருப்பேன்” எங்கேயாவது இறக்கி வைக்கத் துடித்த மனம் பொருந்தாத இடத்தில் சுமையை இறக்க துவங்கியது

"நல்லா இல்லைனா என்ன செய்து இருப்பீங்க” ஏதோ பாதுகாப்பின்மை மனைவியின் குரலில் அப்பட்டமாய் எதிரொலித்தது.

“அப்பா, பொம்மை வரைந்து கொடு” என்று கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்ட குழந்தையின் கைகள் ஆணித்தரமாக எதையோ உணர்த்தியது.

"வாடா கண்ணு, சாப்பிட்டுட்டு வரைந்து தரேன்” என்று பொண்ணை தூக்கிக்கொண்டு

“சாப்பாடு எடுத்து வைடி” என்று மெதுவாக மனைவியை அணைக்க விழிகளில் வழிந்த நீரை துடைத்தபடி சென்றாள்.

அவளின் நினைவுகளை பூட்டி மீண்டும் பத்திரமாக மனதுள் எடுத்துவைத்தேன். மீண்டும் ஏதேனும் ஒருநாள் அவள் தரிசனம் என்னை நிலைகுலைக்கலாம். அதுவரையேனும் பொங்கும் அலைகளை துணி கொண்டு போர்த்தி அமைதியான நதியாக வலம்வர வேண்டும்.

1 comment:

  1. கலக்கல்... அருமை... அருமை....

    தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete