Monday, September 16, 2013

இனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்



வீட்டுக்குள்ள என்ன ரகளை என்று கேட்டுக் கொண்டே அப்பா வந்தார்.

"எல்லாம் உங்க அருமை பொண்ணு பண்ணர ரகளைதான். உங்க செல்லத்துல தான் குட்டிச்சுவரா போறா அவ...."அம்மா இது தான் சாக்கு என்று அப்பாவை திட்டினார்.

“என்னாச்சு செல்லத்துக்கு, என்ன வேணும் சொல்லுடா குட்டி, அப்பா உடனே வாங்கித் தரேன்” என்று சொல்ல அம்மா “சரியா போச்சு, நீங்க பாட்டுக்கு என்ன ஏதுனு கேட்காம வாக்குறுதி அள்ளி வீசாதிங்க” என்றார்....

“ஏன். நான் வாங்கி தர மாட்டேனு நினைச்சியா, என் பொண்ணுக்குனா எல்லாம் வாங்கித்தருவேன். நீ பேசாம இரு, இது எங்க 2 பேருக்குள்ள இருக்கரது”

“உங்கள....என்ன சொல்லரதுனு தெரியலை, கையபிசஞ்சுட்டு வந்து என்கிட்ட நிக்க கூடாது அப்புறமா” என்று சொல்லி விட்டு அம்மா நகர்ந்து விட்டார்.

கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த என்னைப் பார்த்ததும் அப்பாக்கு ஒரே வருத்தம்.

“என்னடாமா வேணும், சொல்லு, உடனே வாங்கித்தரேன்”

“எனக்கு இப்பவே ஒரு அண்ணா வேணும், உடனே வாங்கிட்டு வாங்க” என்றேன்.

“என்ன” அப்பாவின் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு காரணம் புரியாமல் விழித்த படி நின்றேன்.

அன்று என் வகுப்பில் படித்த என் தோழி எல்லாமே புதிதாக வைத்து இருந்தாள். ஹேர் கிளிப், வளையல், புது புத்தகப்பை, கொலுசு என்று பெரிய லிஸ்ட்.

“சூப்பரா இருக்குடி...எங்க வாங்கின”

“என்னோட அண்ணா தான் டூர் போன போது வாங்கிட்ட வந்தான்” என்றாள்.

அப்பவே முடிவு செய்துவிட்டேன். அப்பாவிடம் சொல்லி எனக்கும் ஓர் அண்ணாவை வாங்கி விடுவது என்று.

வீட்டில் வந்து அம்மாவிடம் சொன்னவுடன் “அதெல்லாம் முடியாது” என்றார். அப்போது இருந்து அப்பா வரும் வரை ஒரே அழுகைதான் நான். அப்பா வாங்கித்தந்துவிடுவார் என்று மலை போல் நம்பி இருந்த அப்பாவின் அதிர்ச்சி மேலும் கண்ணீரை வரவழைத்தது.

”அம்முகுட்டி அண்ணாவை எங்கும் விற்க மாட்டாங்க”

“ஏன்”

“உனக்கு முன்னால பிறந்தவங்களை தான் அண்ணானு சொல்லுவோம்.”

“அப்ப ஏன் என்னை முதல்ல பெத்தீங்க...முதல்ல அண்ணாவை பெத்து இருக்க வேண்டியது தானா” என்று அன்று முழுதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எல்லோரையும் ஒரு வழி செய்துவிட்டேன்.

சிறுவயது முதலே “அண்ணா” என்ற உறவுக்காக மனம் ஏங்க ஆரம்பித்ததாலோ என்னவோ நிறைய அண்ணன், தம்பிகளை தத்தெடுத்து இருக்கிறேன் இதுவரை.

அனைத்து சகோதரர்களுக்கும் இனிய ரக்ஸா பந்தன் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment