Sunday, September 1, 2013

மலரும் நினைவுகள்
"குட்டி சீக்கிரம் நியூஸ் போடு" என்று பரபரத்தேன்

ஸங்கீத் கேள்விக்குறியோடு மாமாவைப் பார்த்தான்...

“அப்பா, என்ன ஆச்சு அம்மாக்கு... நியூஸ் போடச் சொல்லராங்க”

அவருக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை
ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு ”நியூஸ் போடு குட்டி” என்றார்
போட்டதும் ”தங்கவில்லை ஒரு பவுனுக்கு 1000 ருபாய் குறைந்துள்ளது” என்று சொன்னதும் மனம் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனது.

இளங்கலை முதலாண்டு படிக்கும் போது எங்கள் காம்பவுண்டில் இருந்த 4 வீட்டு மக்களிடமும் "share"ல் பணம் போட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதற்கு காரணம் புதுசா குடி வந்த லட்சுமணன் சார். தினமும் எங்கள் காம்பவுண்டில் 9 மணிக்கு சாப்பிட்டு முடித்து விட்டு இரவு கூடும் 1 மணி நேர அரட்டையில் எல்லோரும் கலந்து கொள்வோம்...கேலி, கிண்டலுக்கு இடையில் எல்லாம் அலசப்படும். லட்சுமணன் சாரைப் பற்றி தனியாக ஒரு பத்தி கடைசியில் போடரேன்,இப்ப மேட்டருக்கு வருவோம். அவர் பேங்கில் வேலை செய்தார். "share" பற்றி அவர் சொல்ல சொல்ல எல்லோருக்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது. நமக்கு வேர பிசினஸ் பண்ணனும் என்ற எண்ணம் அப்ப அப்ப தலை தூக்குமே......

அப்பாவிடம் 10000 வாங்கி "share" வாங்கிவிடுவது என்று நான் முடிவு செய்தேன். அதன் பிறகு நடந்த கூட்டத்தில் பெரிய விவாதங்கள் எல்லாம் முடிந்து எந்த கம்பெனியில் எத்தனை "share" வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. எல்லோரும் லட்சுமணன் சார் சொன்ன கம்பெனியின் "share" வாங்குவது என்று முடிவு செய்தார்கள். நான் மட்டும் வேறு கம்பெனி சொன்னேன். அதற்கு வேறு பல காரணங்கள் அடுக்கி அப்பாவை சம்மதிக்க வைத்தேன். ஒரு வழியாக எல்லோரும் "share" வாங்கியாகிவிட்டது.

முதன் முதலில் நான் வாங்கியது என்று பீரோவில் பத்திரமாக என் துணிகளோடு வைத்துவிட்டேன். தினமும் அதை பார்த்து ஒரு பெருமையான பார்வை வேறு. பிறகு வழக்கம் போல எங்கள் கூட்டம் கேலி கிண்டலோடு நடந்தாலும் கடைசியில் "share" நிலவரம் பற்றி சாரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். இப்படியே 6 மாதங்கள் ஓடின.....

அன்றும் வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்துக் கொண்டு இருக்கும் போதே லட்சுமணன் சார் என்னைப் பார்த்து பரிதாபப் பார்வை வீசிவிட்டு போனார். என்னவென்று புரியாததால் இரவு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்துவிட்டேன். ஆரம்பிக்கும் போதே ஏதோ பாவம் என்பது போல் எல்லோரும் என்னைப் பார்க்க ஒன்றுமே புரியவில்லை. அப்பா வேறு “முதன்முதலா செய்யும் போது இப்படி சிலது தவறா முடியரது சகஜம் அனி.அதுக்கெல்லாம் மனதை தளரவிடக்கூடாது” என்றார். ஆகா மூளை ஒரு நிமிடம் வேலை செய்ததில் "share"ல் ஏதோ குளறுபடி என்று புரிந்தது. விலை குறைந்து 7500ருபாய்க்கு வந்து நின்று பலிவாங்கி விட்டிருந்தது என்னை. மேலும் குறைவதற்குள் விற்றுவிடலாம் என்று முடிவு செய்து அதை விற்றுவிட்டோம்.

அதன் பிறகு தான் சோதனையே எனக்கு. யாரு எப்ப பார்த்தாலும் “hai business magnet" என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்... நாம யாரு “யானைக்கும் அடி சறுக்கும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா” என்று ஒன்னுமே நடக்காதது மாதிரி பில்டப் பண்ணி சமாளிச்சுடுவேன். பல்பு வாங்கிப் பழகிப்போனாலும், கல்யாணம் ஆகி மாமாவிடம் முதன்முறையாக சொல்லி செய்ததலிலும் பல்பா என்று மனம் கொஞ்சம் சுருங்கத்தான் செய்தது.

“கிண்டல் பண்ணரீங்கனு நினைச்சேன்பா....உண்மைதான்” என்றேன். அன்று மாலை வந்ததும் தங்கம் விலை குறைந்துவிட்டதுனு மாமா சொன்ன போது விளையாடரார் என்றே நினைத்தேன்....
நிலம் வாங்கலாம் என்று சொன்னவரிடம், தங்கம் வாங்கலாம் நல்ல விலை உயரும் என்று சொல்லி 2 நாட்கள் முன்பு தான் வாங்கி வந்தோம். இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறி வயிற்றில் புளியைக் கரைத்தார் மாமா.

“சரி விடுங்கப்பா.....எல்லாம் நம்ம மருமகளுக்கு தான சேர்த்தரேன். அதுல போய் லாப நஷ்டம் பார்க்க முடியுமா” என்று நான் நிலைமையை சமாளிப்பதாக நினைத்து கொண்டு கூற, மாமா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார் தன் அருகில் நிற்கும் 10 வயது மகனைப் பார்த்து.

ஸ்ங்கீத் புரியாமல் “என்னப்பா சிரிக்கர” என்றான்.

“உங்க அம்மா சமாளிக்கர அழகைப் பார்த்து தாங்கலடா” என்றார்.
கையில் கிடைத்த பல்பை அமைதியாக கொண்டு வந்து பல்பு குவியலில் சேர்த்துவிட்டேன்.
இதனால ஒன்னே ஒன்னு நல்லா புரிந்தது “விதி ரொம்ப வலியதுங்கோ”

இப்போ லட்சுமணன் சார். : தனக்கு திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகவும், TNEB பேங்கில் வேலை செய்வதாகவும் கூறி வீடு வந்து பார்த்த போது அம்மாவுக்கு அப்பாவுக்கும் ஒரே தயக்கம். கல்யாணம் ஆகாதவருக்கு காம்பவுண்டில் வீடு எப்படி கொடுப்பது என்று. நான் தான் நல்லவரா தெரியரார் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்தேன். மேலும் இன்னொரு வீட்டில் குடியிருந்த மாமாவும் அதே பேங்கில் தான் வேலை செய்தார். அவரும் சாருக்கு சிபாரிசு. வீட்டிற்கு வந்த அன்று இரவு அரட்டையில் கலந்து கொண்ட போது பேசவே இல்லை சார். நான் தான் ஓட்டிக் கொண்டு இருந்தேன் “நான் சிபாரிசு செய்து தான் உங்களுக்கு வீடு கிடைத்தது,பேசரதுக்கு எத்தன ருபாய் சார் கேட்பீங்கனு “ . பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார் பாருங்க. ஏன்டா பேசச் சொன்னோம் ஆகிடுச்சு. என்னை செமையா ஓட்டுவார். சரவணன் அண்ணன் வேறு கூட்டு சேர்ந்து கொள்வார்கள். லட்சுமணன் சார் வந்த பிறகு சரவணன் அண்ணன் சார் வீட்டில் தான் இருப்பாங்க, அவங்க வீட்டுக்கு போரதே இல்லை. நமக்கு ஒரு விசயம் கிடைத்தா விடுவோமா என்ன
ஒரு நாள் பேசும் போது “நீங்க கிரேட் சார், கல்யாணம் ஆகாமலே 25 வயது பையனை தத்து எடுத்து இருக்கீங்க” என்று சொல்ல அவருக்கு ஒன்னுமே புரியலை. பிறகு அம்மா அவருக்கு விளக்கி சொல்ல அன்று ஒரே சிரிப்பாய் இருந்தது. சாரோட கல்யாணம் திருநெல்வேலில நடந்தது. தேவிக்கா(இலட்சுமணன் சார் மனைவி) வந்த பிறகு தான் என் அணி கொஞ்சம் வலுவாச்சு. 2 பேரும் சேர்ந்து எல்லோரையும் ஒரு வழி பண்ணிடுவோம். தேவிக்கா எனக்கு நல்ல தோழியா மாறிட்டாங்க. தேவிக்கா வந்த முதல்நாள் சார் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.என்னை அறிமுகப்படுத்தும் போது ”அருமையா சமைப்பா அனி, அமைதியின் மறுவடிவம், ரொம்ப பொறுப்பான பொண்ணு, பிசினஸ் மேக்னட் “ என்று சொல்ல, எல்லோரும் பயங்கரமாக சிரிக்க ஆரம்பிக்க அக்காவிற்கு ஒன்னுமே புரியலை.

“நல்லா சமைப்பியா, எது சூப்பரா பண்ணுவ அனி” என்றார். சமையல் கட்டு பக்கமே போகாத நான் என்னத்த சொல்ல
“அதையும் சார் கிட்டேயே கேளுங்க” என்றேன். முதல் நாளே ஓட்டராரே என்ற கோபத்தில். சார் விடுவதாக இல்லை
“தேவி, அனி சூப்பரா சுடு தண்ணி வைப்பா” என்று கூற தேவிக்கா தான் எனக்கு முழு சப்போர்ட் பண்ணினாங்க. அப்புறம் எங்க கூட்டணிய அடிச்சுக்க ஆளே இல்லை. ஒரு வயது குழந்தையோடு அவர்கள் மாற்றலாகி போன போது கண்ணீர் பூத்ததை தடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். இன்று தொடர்பில் இல்லை என்றாலும் அவர்களுடன் பேசி மகிழ்ந்த காலங்கள் மனதின் ஓரத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment